Home ஆரோக்கியம் புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க!

புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க!

28

ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறோம் என, நினைத்து, புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீங்க. ஏனெனில், புரோட்டீன் சத்துக்கள் உடலுக்கு நலம் தருபவை என்றாலும், அளவுக்கு மீறினால், அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம். ஆம், சிறுநீரக கற்கள் மற்றும் இதர சிறுநீரக நோய்களுக்கு அவை காரணமாகி விடும்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது தொடர்பாக, மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது: ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடும்போது, அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளை கணக்கில் கொள்வது மட்டுமின்றி, அந்த கலோரிகள் மாமிச உணவுகள் அல்லது தாவர உணவுகள் மூலம் கிடைக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக, புரோட்டீன் சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை பலர் சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவது, குறுகிய காலத்தில் ஒருவருக்கு பலன் தரலாம். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அவை, சிறுநீரக கற்கள் மற்றும் இதர சிறுநீரக நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், வாழ்நாள் குறைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. புரோட்டீன் தொடர்பாக, ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். அந்த ஆய்வுக்கு, 20 எலிகளை எடுத்துக் கொண்டோம்.

அவற்றில், 10 எலிகளுக்கு, 45 சதவீத அளவுக்கு புரோட்டீன் சத்து கூடுதலாக உள்ள உணவு வகைகளை வழங்கினோம். அதேநேரத்தில், மற்ற எலிகளுக்கு, வழக்கமான அளவுக்கு, புரோட்டீன் சத்து உள்ள உணவுகளை வழங்கினோம்.
தொடர்ச்சியாக, 12 வாரங்களுக்கு இவற்றை வழங்கினோம். எலிகளுக்கு, 12 வாரங்களுக்கு வழங்கிய, இந்த புரோட்டீன் சத்து உணவுகள்,
மனிதர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு சாப்பிடக்கூடிய, புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளுக்கு சமமானவை.
இறுதியாக, 12 வாரங்களுக்கு பின், எலிகளை பரிசோதித்ததில், புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டவையின், உடல் எடை குறைந்திருந்தது. ஆனால், அவற்றின் சிறுநீரகத்தின் எடை, 22 சதவீதம் அதிகரித்திருந்தது.
இதனால், அவற்றின் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அதனால், புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவை, அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, மனிதர்களுக்கு, சிறுநீரில் வெளியேறும் சிட்ரேட் அளவு குறைந்து, சிறுநீரகம் வீக்கம் அடையலாம். அதனால், சிறு நீரகத்தில் கற்கள் உருவாகலாம்.
இருந்தாலும், இந்த ஆய்வுகள் தற்போது, ஆரம்பகட்ட அளவிலேயே உள்ளதால், மனிதர்கள் இதைக்கண்டு பயப்படத் தேவையில்லை. இருந்தாலும், புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுவது நல்லது.
இவ்வாறு, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.