Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பு கிருமிகளால் குறைப்பிரசவம் நடக்கும் அபாயம்

பிறப்புறுப்பு கிருமிகளால் குறைப்பிரசவம் நடக்கும் அபாயம்

33

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் (37 வார கர்ப்பம் நிறைவடையும் முன்பே குழந்தை பிறத்தல்) பிறக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குறைப்பிரசவமே, பிறந்த பச்சிளங்குழந்தைகள் இறப்பதற்கான முக்கியக் காரணமாக உள்ளது என்றும் WHO குறிப்பிடுகிறது. 2015இல் மட்டுமே, குறைப்பிரசவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட பத்து இலட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்.

பிறப்புறுப்பு பாக்டீரியாவும் குறைப்பிரசவமும் (Vaginal bacteria and preterm births)
பெரும்பாலும், தற்செயலாக நடக்கும் குறைப்பிரசவங்களுக்கான காரணம் என்னவென்று நிச்சயமாகத் தெரிவதில்லை. எனினும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருப்பது, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுநோய், நோய்த்தொற்றுகள் போன்றவை குறைப்பிரசவம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன. கருப்பைக்குள்ளான நோய்த்தொற்றுகளின் காரணமாக குறைப்பிரசவம் ஏற்படும் அபாயமானது, மொத்த குறைப்பிரசவ சம்பவங்களில் 25% இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

ஆரோக்கியமாக உள்ள வளர்ந்த ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் மிக அதிக அளவில் இருக்கும் பாக்டீரியா லாக்டோபேசில்லஸ் என்பதாகும். அதிக எண்ணிக்கையில் இருக்கும், கெடுதல் விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் குறைப்பிரசவத்தின் அபாயத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவருகிறது. பிறப்புறுப்பில் இருக்கும் இயல்பான நுண்ணுயிர்களின் அமைப்பு பாதிக்கப்படும்போது, பிறப்புறுப்பில் பாக்டீரிய நோய்த்தொற்று ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் பாக்டீரிய நோய்த்தொற்று இருப்பது, குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஆகிய இரு சிக்கல்களுக்கும் சம்பந்தப்பட்டதாக உள்ளது.

கர்ப்பத்தின்போது, பிறப்புறுப்பில் கேன்டிடா பூஞ்சான் பெருக்கம் (காலனியாக்கம்) ஏற்படும் இடைவேளை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சுற்றி வரும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் கிளைக்கொஜென் படிவு மற்றும் நொதித்தலில் ஈடுபடும் பிற பொருள்களின் அளவுகள் அதிகரிக்கவும் இது காரணமாகிறது என்று கருதப்படுகிறது. கேன்டிடா பூஞ்சான் காலனியாக்கத்தால், பிறப்புறுப்பின் இயல்பான நுண்ணுயிர்கள் அமைப்பு பாதிக்கப்பட்டு லாக்டோபேசில்லை அளவு குறையலாம், அழற்சியை உண்டாக்கும் நுண்ணுயிர்களின் அளவு அதிகரிக்கலாம். ஹங்கேரியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், கர்ப்பத்தின்போது பிறப்புறுப்பில் ஏற்படும் கேன்டிடா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையால் (காட்ரிமசோல்) குறைப்பிரசவங்கள் ஏற்படும் நிகழ்வுகள் 34%-64% வரை குறைந்தன என்று தெரியவந்தது.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு யுனிவெர்சிட்டியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குறைந்தபட்சம் ஒரு முறையேனும் குறைப்பிரசவம் ஆன 88 பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் பாக்டீரியா பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அடையாளம் காணப்படாத, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குறைப்பிரசவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பிலடெல்பியாவில் டெம்பில் யுனிவெர்சிட்டி ஹாஸ்பிட்டலில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட பாக்டீரியாக்களின் (லெப்டோட்ரிச்சியா/ஸ்னீத்தியா போன்ற இனங்கள் மற்றும் மெகாஸ்ஃபாரா ஃபைலோடைப் 1) எண்ணிக்கை கர்ப்பத்தின் மையக்காலம் முதல் அதிகரிப்பதாகவும், தற்செயலாக குறைப்பிரசவம் ஏற்படுவதுடன் இதற்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறைப்பிரசவத்தில் நுண்ணுயிர்களுக்குள்ள சாத்தியமான பங்களிப்பு (Plausible role of microbes in preterm birth)
இது போன்ற பாக்டீரியாக்களின் நோய்த்தொற்று அழற்சிக்கான எதிர்வினைகளைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது, குறிப்பாக கர்ப்பகாலத்தின் ஆரம்பக்கட்டத்தில் இதனால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கும் காலத்தில் இப்படி நடக்க வாய்ப்பு அதிகமுள்ளது. அழற்சிக்கான இது போன்ற எதிர்வினைகளே குறைப்பிரசவத்தைத் தூண்டுகின்றன.

இறுதிக் கருத்து (Conclusion)
கர்ப்பமாக இருக்கும் பெண்களின், இனப்பெருக்கப் பாதையில் உள்ள நுன்னுயிர்களைப் பற்றி பரிசோதனை செய்து கண்டறிவதன் மூலம், குறைப்பிரசவம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கீழ் இடுப்புப் பகுதிப் பரிசோதனை, பிறப்புறுப்பு சுரப்புத் திரவங்களின் பரிசோதனை போன்ற சோதனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே செய்து, பாதிப்பு இருந்தால் அதனை உடனடியாகக் கண்டறிந்து உடனடியாக தகுந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளித்தால் பிரசவத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க உதவியாக இருக்கும்.