Home பெண்கள் தாய்மை நலம் பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்

பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்

24

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது.

ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.