Home குழந்தை நலம் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டறிவது எப்படி?

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டறிவது எப்படி?

29

“இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. பள்ளிப்படிப்போடு டியூசன், நடனம், ஓவியம், இசை, நீச்சல் போன்ற வகுப்புகளில் சேர்த்து, குழந்தைகளின் திறமைகளை வளர்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதிவிடக்கூடாது. அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களை பற்றியும் சிந்திக்கவேண்டும். சிறுவர், சிறுமியர்களிடம் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பக்குவம் இருக்காது. தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனம்விட்டு பேசவும் தயங்குவார்கள்.

பெற்றோர்தான் மனம்விட்டு பேசி அவர்களுடைய சூழ்நிலையை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் எப்போதும் பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் கல்வி கற்கும் ஆர்வம் குறைந்து, பாடங்களில் பின்தங்குவார்கள். ஞாபக சக்தி குறையும். மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். தனிமையை விரும்புவார்கள். எதையாவது வெறித்துப்பார்த்தபடி வழக்கத்திற்கு மாறாக நடந்துகொள்வார்கள்.

வயதுக்கு மீறிய சில செயல்களில் ஈடுபடுவார்கள். அளவுக்கு அதிகமான உடல்- மன சோர்வு ஏற்படும். திடீர் பயம், இனம் புரியாத வெறுப்பு, குற்ற உணர்ச்சி, தன்னைத்தானே வெறுத்தல், குடும்பத்தினரிடமிருந்து விலகியிருத்தல் போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படும்.

குழந்தைகள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் வன்முறை அவர்களை மனதளவில் துவண்டுபோக செய்யும். ஏனெனில் பாலியல் வன்முறை நடந்தால் அதனை கற்பழிப்பு என்ற போர்வையில் அவமானகரமான விஷயமாக சமூகம் சித்தரிக்கிறது. அதனால் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் உடல் ரீதியாக அல்லாமல் மன ரீதியாகவே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு மனநலக்கோளாறு உருவாகிவிடக்கூடும். ஆகவே இந்த விஷயத்தை பக்குவமாக கையாளவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு தண்டனையும் பெற்றுத்தரவேண்டும். அதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.