Home ஆரோக்கியம் பக்கவாதத்திற்கு பை பை சொல்லும் சாக்லேட்: ஆய்வில் தகவல்

பக்கவாதத்திற்கு பை பை சொல்லும் சாக்லேட்: ஆய்வில் தகவல்

20

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் இளைக்கும், இதயத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சாக்லேட் சாப்பிட்டால் மனிதர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கவாதம் தாக்கப்படுவதை தடுக்கும் காரணிகள் குறித்து சுவீடன் நாட்டில் ஆய்வு நடைபெற்றது. 37,000 சுவீடன் நாட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

பக்கவாதம் வராது

இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் இரு குழுவினர் வாரந்தோறும் சராசரியாக எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. ஆனால் உயர் குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.

இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இந்த ஆய்வின் மூலம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ப்ளேவனாய்டுகள்

சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃப்ளேவனாயிட்ஸ் என்னும் பொருளே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான, சுவீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.

இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃப்ளேவனாயிட்ஸ் செயற்படுகிறது. இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃப்ளேவனாயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.

டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு தற்போது கூறுகிறது. ஏனைய வகை சாக்லேட்டுக்களை ஓரளவு உண்பதும் நல்ல பயனைத் தரும் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது. சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து

இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன.

இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இதற்கும் பொருந்தும்.

இந்த ஆய்வு குறித்த தகவல்கள் நரம்பியல் குறித்த இதழில் வெளியாகியுள்ளன.