Home சூடான செய்திகள் நொய்டா அட்வென்ச்சர் மால் திறப்பு விழாவின்போது விபத்து-சாயாலி பகத் படுகாயம்

நொய்டா அட்வென்ச்சர் மால் திறப்பு விழாவின்போது விபத்து-சாயாலி பகத் படுகாயம்

22

டெல்லி அருகே நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏஎம்ஆர் கிரேட் அட்வென்ச்சர் மால் திறப்பு விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை சாயாலி பகத் படுகாயமடைந்தார். அதே விழாவில்நடந்த இன்னொரு விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.

நொய்டாவில் கட்டப்பட்டுள்ள ஏஎம்ஆர் கிரேட் அட்வென்ச்சர் மால் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சைலேந்திர சிங் என்பவரின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கயிற்றின் மூலம் கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே இறங்கும் சாகசத்தில் அவர் ஈடுபட்டார். தரையிலிருந்து 100 அடிக்கு மேலே சைலேந்திர சிங் வந்து கொண்டிருந்தபோது திடீரென கயிறு அறுந்து விட்டது. இதனால் சைலேந்திர சிங் அங்கிருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சைலைந்திர சிங் இறந்து விட்டதாக கூறினர். பரிதாபமாக உயிரிழந்த சைலேந்திர சிங்குக்கு 25 வயதாகிறது. இவர் மலையேற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல இதே விழாவில் நடந்த இன்னொரு சம்பவத்தில் நடிகை சாயாலி பகத் படுகாயமடைந்தார். விழாவின் ஒரு பகுதியாக ஆல் டெர்ரைன் வாகனம் -நான்கு சக்கர வாகனம் – ஒன்றை ஓட்டினார் சாயாலி பகத். அப்போது அது திடீரென கவிழ்ந்து விழந்து. இதில் அவரது கையில் பலத்த காயமடைந்தது. இதையடுத்து அவரை கைலாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்னர்.

இந்த இரு சம்பவங்களும் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த மாலில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை என்றும் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முதலுதவி வசதிகளோ, மருத்துவ அதிகாரிகளோ அங்கு இல்லையாம்.

இந்த சாகச மாலை மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய்தான் திறந்து வைத்தார். திறந்த ஒரே நாளில் இரண்டு விபத்துக்களுக்கும், ஒரு உயிர்ப்பலிக்கும் வித்திட்டு விட்டது இந்த மால்.