Home பாலியல் நாப்கின் வாங்கப் போறீங்களா..?

நாப்கின் வாங்கப் போறீங்களா..?

26

பெண்களை தர்ம சங்கடத்துக்குள்ளாக்குபவை அந்த மூன்று நாட்கள்.

எப்பேர்ப்பட்ட தைரியப் பெண்களையும் சற்றே தடுமாற வைக்கிற நாட்கள் அவை. உதிரப் போக்கு அதிகமாகுமோ, அதனால் உடைகள் கறை படியுமோ என்கிற பயமே காரணம். மாதவிலக்கின் போது சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்க வேண்டிய அவசியம் படித்த பெண்களுக்கே அதிகம் தெரிவதில்லை. துணிக் கலாச்சாரத்தை விட்டு வெளியே வர விரும்பாதவர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உபயோகிக்கிற சிலருக்கும் தனக்கேற்ற சரியான நாப்கின் எது, அதை எப்படி உபயோகிப்பது, எப்படி அப்புறப் படுத்துவது என்கிற விவரங்கள் தெரிவதில்லை. சானிட்டாரி நாப்கின்களைப் பற்றிய விழிப்புணர்வை விளக்கவே இந்தக் கட்டுரை…..

நல்ல நாப்கின் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு பி.ஐ.எஸ்ஸின் பரிந்துரை
15.2 மி.மீ. அடர்த்தி இருக்க வேண்டும்.
நாப்கினின் நீளம் 200 – 20 மி.மீ (ரெகுலர்),
240 – 20 மி.மீ (லார்ஜ்),
280 – 20 மி.மீ (எக்ஸ்ட்ரா லார்ஜ்) இருக்க வேண்டும்.
அகலம் 60 முதல் 75 மி.மீ. இருக்க வேண்டும்.
30 மி.லி. திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.
முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறகு நாப்கினின் அடியிலோ, பக்க வாட்டிலோ கசிவு ஏதும் இருக்கக் கூடாது.

நாப்கின்களால் பாதிப்பு ஏதும் உண்டா?

அதிக உறிஞ்சும் தன்மை வேண்டும் என்பதற்காக, இப்போது ஜெல் கலந்த சானிட்டரி நாப்கின்கள் அதிகம் வரவேற்கப்படுகின்றன. சிந்தெடிக் இழைகளால் செய்யப்பட்ட நாப்கின்களுக்கே பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகமிருக்கிறது. சிந்தெடிக் நாப்கின்கள் அதிக உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அவை சருமத்தை பாதிக்கக் கூடியவை என்பது சரும மருத்துவர்களின் அபிப்ராயம்.

நாப்கின்கள் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். ஈரமாகி, முழுவதும் நனைந்த பிறகும் அது மாற்றப் படாமல் நீண்ட நேரத்துக்கு இருந்தால், தொற்றுக் கிருமிகளின் தாக்குதலுக்குள்ளாக நேரிடும். ரொம்பவும் சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களுக்கு காட்டன் நாப்கின்களே சிறந்தவை என்கிறார்கள் சரும மருத்துவர்கள். மாதவிலக்கின் முதல் இரண்டு, மூன்று நாட்ளுக்கு அதிக இரத்தப் போக்கு இருந்தால், ஜெல் கலந்த சிந்தெடிக் நாப்கின்களையும், குறைவாக உள்ள நாட்களில் காட்டன் நாப்கின் களையும் உபயோகிக்கச் சொல்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகம் என்பதால் எல்லா பெண்களாலும் அதை உபயோகிக்க முடிவதில்லை. அவர்கள் துணி உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு முறை உபயோகத்துக்குப் பிறகும் அந்தத் துணி நன்றாக அலசி, டெட்டால் கலந்த தண்ணீரால் அலசப்பட்டிருக்க வேண்டியது முக்கியம்.

எது தரமான நாப்கின்?
நல்ல உறிஞ்சும் தன்மை இருக்க வேண்டும்.
கசிவு இருக்கக் கூடாது.
பக்கவாட்டில் விங்ஸ் இருக்க வேண்டும்.
மென்மையாக இருக்க வேண்டும். அணிய வசதியாக இருக்க வேண்டும்.
எத்தனை மணி நேரத்துக்கொரு முறை மாற்றவேண்டும் என்கிற விவரமும், அதற்கான அறிகுறிகளையும் குறிப்பிட வேண்டும்.

எப்படி அப்புறப்படுத்துவது?

சானிட்டரி நாப்கின்களை எப்போதும் கழிவறைக்குள் பிளஷ் செய்யக் கூடாது. கழிவறை அடைத்துக் கொள்ளும்.

உபயோகித்த நாப்கின்களை நன்றாக அலசிச் சுற்றி, அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்தும் நாப்கின்களை நாய், மாடு போன்றவற்றால் குதறப்படாமலிருக்கும்படி ஜாக்கிரதையாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் அப்புறப்படுத்தப்படும் அந்த நாப்கின்களால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்குத் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமாம்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை முக்கியம்.
இரத்தப் போக்கு அளவுக்கதிமாக இருந்தாலோ,
அது உங்கள் சராசரி வாழ்க்கையை பாதித்தாலோ.
கட்டிக் கட்டியாக இரத்தம் வெளியேறினால்.
மாதவிடாய் நாட்களில் மயக்கமாக உணர்ந்தால்.
அடுத்த மாதவிலக்கு சுழற்சிக்கு முன்பாகவே திடீரென உதிரப் போக்கு தென்பட்டால்.
நீண்ட நாட்களுக்கு உதிரப் போக்கு தொடர்ந்தால்.