Home சூடான செய்திகள் நான் கண்ணால் தானே பார்த்தேன்…! எப்படியடி கர்ப்பமானாய் ? காரணம் நானில்லை

நான் கண்ணால் தானே பார்த்தேன்…! எப்படியடி கர்ப்பமானாய் ? காரணம் நானில்லை

31

கண்ணாடிக்கு முன்னாடி நின்று கழுத்தின் கீழ் அப்பியிருந்த கிரீமினை சரி செய்து கொண்டிருந்தேன்.பெண்ணாக என் மனதை கொள்ளையிட்ட அவளைப் பார்க்கச் செல்வது போல, இப்பூவுலகில் எனக்கு வேறெந்தச் செயல்களும் பெருமை தரவில்லை எனும் நினைப்பு வர, பேர் அண்ட் லவ்லி கீரிமைத் தேடினேன். ஏலவே 15 வெளிநாட்டு கிரீம்களை உறவினர்களின் உதவியுடன் இறக்குமதி செய்து மூஞ்சியில் அப்பிப் பார்த்தும் என் ஸ்கின் ட்ரை ஸ்கின் என்பதால் ஏதும் ஒத்துப் போகவில்லை என்பதால் எனக்கு ஏத்தது உள்ளூர் தயாரிப்புத் தான் என உணர்ந்து உருப்படியான காரியம் செய்தேன். கைகளில் இப்போது Fair and lovely கிரீம். மூஞ்சியில் அப்பி, மீண்டும் மீண்டும் இன்று நான் ஸ்மார்ட்டா இருக்கேனா என செக்கப் செய்து கொண்டேன். பேரழகியினைத் தரிசிக்கச் செல்வதற்கும், பேர் அண்ட் லவ்லி கை கொடுக்கிறதே என நினைத்து மனதினுள் சிரித்துக் கொண்டேன்.

ப்ரியங்கனி! ஒரு முறைக்கு இரு தரம் உதடுகள் உச்சரிக்கத் துடிக்கும் ப்ரியம் நிறை பெயர் அது. மேலுதடும் கீழுதடும் ஒட்டி, அவள் இதழ்கள் நாவின் செல்லக் கடியிலிருந்து விலகிச் செல்லத் துடிப்பது போன்று அவள் பெயரும் இருக்கிறதே என நினைக்கையில் எனக்குள் இனம் புரியாத ஓர் புன்முறுவல் வந்து போகிறது. அவள் பெற்றோர்கள் சயன்டிபிக்கலாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களோ என நினைத்து; விடை காணும் பொருட்டு பல முறை என் மூளையை குடைந்து குடைந்து யோசித்திருக்கிறேன்.ப்ரியம் நிறைந்தவளாகவும், கனி (Honey) போல இனிப்பாகவும் அவள் இருப்பதனால் தான் ப்ரியங்கனி எனப் பெயர் வந்ததோ! என என் நெஞ்சம் சில வேளை எண்ணும். அவள் கனி தான் என்பதில் ஐயமில்லை என்பதனால் அவளை கனிவாய் ரசித்துக் குடிக்க மனமோ ஆவல் கொள்ளும்.எனக்கும் அவளுக்குமான இடை வெளி பெயரளவிலும் இல்லை என்பதனால் பேரழகி எனக்குப் பொருத்தமானவள் தான் என நினைத்துப் பார்ப்பேன். எனை மறந்து சிரிப்பேன். பகல் கனவில் மிதப்பேன்! அப்போதெல்லாம் வயிற்றிலிருந்து ஏதோ ஓர் அமிலம் சுரந்து மெதுவாய் மெதுவாய் மேல் நோக்கி வந்து என் மூளையினை அசைத்துச் செல்லும்.

முதன் முதலில் அறிவியல் நகரில் அவளைப் பார்த்தேன். என்னைத் தொலைத்தேன். என்னை தொலைத்தேனா என்று தேடித் தெளிய முன்னர் என் எண்ணத்தையும் அவள் மேல் தொலைத்தேன். சிந்தையில் அவளின் சின்ன முகம் வந்து காதல் மொந்தையை கூட்டிச் செல்கிறது. மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல் அவளைப் பற்றிய நினைப்பால் என் மனமோ விந்தையாய் சுழல்கிறது என எண்ணியவாறு, கன்னியை நினைத்து என் சைக்கிளின் பெடலை இறுக்கி மிதித்தேன். இலகுவாய் உழக்கிச் சைக்கிளை செலுத்தலாம் என எண்ணினாலும், அவள் என் சைக்கிள் கரியரில் இருப்பது போன்ற நினைப்பில் டபுள்ஸ் ஏத்தியவாறு நானும் பறந்தேன். “நல்ல வேளை இப்பவே ஐயாவிற்கு றிபிள்ஸிற்கு ஆசை வரவில்லை!” என அவள் என் பின்னே இருந்து செல்லக் கடி கடிப்பது போல உணர்ந்தேன். எங்கள் முதற் சந்திப்பு, எதேச்சையாக இடம் பெற்றாலும், என் இச்சையோ அவள் மீது தான் குவியப் புள்ளிகளை ஒன்று திரட்டி குவிந்திருந்தது.

மரியதாஸ் மாஸ்டரின் வகுப்பு முடித்து கிளிநொச்சி அறிவியல் நகரில் அவள். நானோ வெட்டியாய் சைக்கிளில் கன்னியர் மனதை கொத்திச் செல்லலாம் எனும் நினைப்பில் வீதியில். கடைக் கண்ணால் அவளைப் பார்த்தேன். காலடி ஒன்றை எடுத்து வைத்தவள் இடக் கண்ணால் எ(ன்)னைப் பார்த்தாள். நிலை கொள்ளா என் மனமோ அவள் பின்னே செல்லத் தொடங்கியது.

“விலை கொடுத்தும் வாங்க முடியாத
விண்ணகத் தேவதையாய்
அவள் எனக்கு தோன்றியதால்
மனமோ அவள் பின்னே சென்றால்,
பெற்றோர் உறவினர் என்னை கண்டால்;
தரும அடி கிடைக்கும் பின்னால்!”

எனும் எண்ணத்தினை விட்டு, அவளைப் பற்றி அறிந்தே தீருவது எனும் ஏக்கத்தில் அலையத் தொடங்கியது. பேரைக் கேட்டேன். பேசாமல் சென்றாள். மீண்டும் ஹலோ என்று அழைத்தேன். மூக்கை சுழித்து, நாக்கை கடித்து என்னை முறைத்துப் பார்த்தாள். ஆனாலும் அப்போது அழகாய் தெரிந்தாள். இப்படிப் பல நாள் சென்று இரண்டு மாத இடை விடாத முயற்சியின் பின்னர் தான் என் ப்ரியங்கனியின் பெயரைப் ப்ரியமாய் அறிந்து கொண்டேன்.

இன்றோ, ஒரு நிமிசம் அவளைப் பார்க்கும் வழியில் தாமதித்தாலும் பொய்க் கோபம் கொள்கிறாள். கற்பனையில் மனம் பறக்க, கண்களிலே அவள் உருவம் வந்து நடனமிட, கற்பகமாய் எனக்குள் காதல் தேனூற்றும் கனியினைக் காணச் சென்றேன். அவளோ வழக்கம் போல வன்னேரிக் குளத்தின் பின் புறமாய் காத்திருந்தாள்.அக்கம் பக்கம் யாராச்சும் அன்னத்தினைக் காணச் செல்லும் அரிய செயலினைக் கண்காணிக்கிறார்களா என உற்றுப் பார்த்தேன். சற்றுத் தெளிந்தேன். மெதுவாய் குளக்கட்டிற்கு அருகே சைக்கிளை நிறுத்தினேன். அவள் அருகே சென்றேன். சீறினாள்! சினந்தாள்!பொங்கியெழுந்து பெரும் அலையாய் எனைச் சாய்க்காத குறையாக வண்டியைத் தடவினாள். “கனியன், நான் கர்ப்பமாய் இருக்கிறேன்” என்றாள். எனக்கோ நம்ப முடியவில்லை என்பதால், காரணம் நான் இல்லை என்றேன். நமக்குள்ளும் இதுவரை ஏதும் இல்லையே என நடந்தை மறந்ததாய் நடித்தேன். “அப்படீன்னா என் கற்பில் களங்கம் உண்டென சந்தேகம் வந்திட்டுதா ஐயாவிற்கு?” என்று நக்கலும், விக்கலும் கலந்த தொனியில் கேட்டாள். “இல்லை ; ஒரு பேச்சிற்கு சொன்னேன் என்றேன்.”

பொருமினாள்! விம்மி அழாத குறையாக; “உன் ஆண் புத்தியை காட்டி விட்டாய் என வீ(ரி)றிட்டாள். “இல்லை! பொறுமையாக இரு என்றேன்!” “முடியாது எனச் சொல்லி, இப்பவே வீட்டிற்கு விசயம் தெரிய முன் பெருமையாக வந்து பொண்ணு கேள்” என்றாள். மாட்டேன் என்றேன். “மரணாயே, மாட்டேன் என்பதற்கான காரணம் என்ன என்றாள்?” இன்னமும் வயசாகலை என்றேன்.

�ஓகோ…ஒரு பூ…உனது புயலை அடி வயிற்றிச் சுமக்கிறதே! நீயோ புத்தி தெளிவின்றி பகிடி செய்கிறாயா?� என்றாள். மீண்டும் வண்டியைத் தடவினாள். நானோ மீண்டும் சில நிமிடங்கள் மௌனமாய் இருந்து விட்டு �வாந்திக்கு முன் கலைத்திடு� என்றேன். வைத்த கண் வாங்காது என்னைப் பார்த்தாள். “நீயும் உன் காதலும்” என அக்கினித் தீயாய் வார்த்தைகளை அனலாய் பொரி(ழி)ந்து தள்ளினாள். நானோ மேலும் பேச முடியாது நின்றேன். “கனி, என்னை மன்னிச்சிடு!” என்று கட்டி அணைக்கப் போனேன். “சனியன்” எனச் சொல்லி சற்றுத் தூரம் செல்லுமளவிற்கு தள்ளி விட்டாள்.

குளக்கட்டு மணல் புழுதியின் மேல் நான் விழுந்தும், விழி அசைக்காதவனாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ, ஆதரவாய் வந்து என்னை அணைத்து தூக்கினாள். நான் ஆச்சரியம் பொங்க அவளைப் பார்த்தேன். “எனக்கு வாந்தியும் இல்லை. வண்டியும் இல்லை. எல்லாம் உன்னை டெஸ்ட் செய்ய போட்ட நாடகம்” என்றாள். நான் சிரித்தேன். அவள் சிலாகித்து காரணம் கேட்டாள். நான் சொல்ல முடியாது செல்லம் பொங்கினேன். அப்போது சொன்னாள் ஓர் வார்த்தை! “கனியன் ஆம்பிளைங்க எப்பவுமே சேறு கண்ட இடத்தில மிதித்து தண்ணி கண்ட இடத்தில கால் கழுவிட்டு போற ஜாதி! என் காதலை நான் நேசித்தேன். ஆனால் கர்ப்பத்தை வைத்து நீ உன் கானல் நீர் குணத்தை காட்டிட்டாய்” என்றாள். ஆம்பிளையளின் அற்ப புத்தி பற்றி அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீசினாள். இனியும் அவ் இடத்தில் நின்றால் இடக்கு முடக்காகி விடும் என நினைத்து இலகுவாய் கழர வேண்டும் என முடிவெடுத்தேன். முறைத்துப் பார்த்து விட்டு, வாயை மூடும் எனச் சொல்லி விட்டு நான் அவ் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அப்போது எம் ஊரில் செல்போனும் இல்லை. காதல் மொழி அனுப்ப செல் சேதியும் இல்லை. ஆனால் சில் வண்டாய் அவள் குரல் மாத்திரம் என்னுள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நினைப்பில் நாட்களை நகர்த்தினேன். நாட்கள் நகர்ந்தன. நானும் கால் போன திசையில் போர் எம் ஊரை நோக்கி வர நகரத் தொடங்கினேன்.ஒரு நாள் காலை ஈழநாதம் பேப்பரில அவள் போட்டோவினைப் பார்த்தேன். ஈழம் காணும் வேகத்துடன் அதே முகம்! ப்ரியங்கனியின் முகம் மாதுமையாக மலர்ந்திருந்தது.அதே புன்னகை நிறைந்த இதழ்கள். வரி உடுப்பு. தூக்கிக் கட்டிய பின்னல். கையில் ஓர் துப்பாக்கி! “என்னை அவள் பார்த்துக் கொண்டிருப்பாளா?” என நினைக்கையில் விழியில் இருந்து ஓர் துளி நீர் பேப்பரில் விழுந்து அவள் நெற்றியில் தெறித்தது. அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.