Home ஆரோக்கியம் பொது மருத்துவம் தூக்க நோய்களை கண்டறிவது எப்படி?

தூக்க நோய்களை கண்டறிவது எப்படி?

42

captureஒருவர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எப்படி தூங்க வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து அதன்படி தூங்கினால் அது உடலுக்கும், புலன்களுக்கும் ஓய்வை அளிப்பதோடு, உடம்பை வலிமைப்படுத்தி, சிந்தனை வளர்ச்சி பெறுவதற்கும் உதவுகிறது. பிறந்த குழந்தை 16 மணி நேரம் தூங்குகிறது. 6 வயது பையன் 9 மணி நேரம் தூங்குகிறான். 12 வயது பையன் 8 மணி நேரம் தூங்குகிறான், வாலிப வயதினருக்கு ஏழரை மணி நேரம் போதும்.

அன்றாட வாழ்வில் ஒரு மனிதனுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை கபத்தின் ஆதிக்கம் இருக்கும். காலை 2 மணி முதல் மாலை 6 மணி வரை வாயுவின் ஆதிக்கம் இருக்கும் (காலையும், மாலையும் இப்படித்தான்). இரவு 10 மணிக்கு முன் தூங்க வேண்டும். இதனால் கபம் உத்கிலேசம் ஆகி தூக்கம் வந்து விடும். கபத்தில் குருத்வம் என்கிற குணமிருப்பதால் அது தூக்கத்தை உண்டாக்கி விடும். 9 மணிக்கு படுத்து விட்டால் நன்றாக தூங்கி விடலாம்.

10 மணிக்கு மேல் பித்த காலம் வந்து விடும். அலெர்ட்டாகி விடுவோம். அந்த நேரத்தில் தூங்குவதற்கு முன் என்னென்ன வேலைகள் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். நேரம் போகப் போக பித்த காலம் முடிந்து வாத காலம் ஆரம்பிக்கும்போது பசி வந்து விடும். ஏதாவது நொறுக்குத் தீனியை சாப்பிடுவோம். தூங்கவும் முடியாது. அஜீரணம் வந்து விடும். காலையில் பசிக்காது. வாய் கசக்கும். பித்தம் மேல் ஏறும். ஆயுர்வேதம் ஒவ்வொரு பிரக்ருதிக்கும் தகுந்தவாறு தூக்க வேண்டும் என்று சொல்கிறது.

அன்றாட வாழ்வில் காலையில் எழுதலும், சரியான நேரத்துக்கு தூங்குவதும் இன்றியமையாததாகிறது. எந்த நேரத்தில் எழுந்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். இரவு பொதுவாக 9 மணி அல்லது 10 மணிக்கு படுத்து விடுவது நல்லது. காலை வேளையில் அலாரம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து நாம் பூரண சக்தியுடன் காணப்பட வேண்டும்.

காலை வேளையில் கடிகாரத்தை அமுக்கி நாம் எழுந்து கொண்டோமேயானால் தேவையான தூக்கம் நமக்கு கிடைக்க வில்லை என்று அர்த்தம். கடிகாரம் இல்லாமல் இயற்கையாக நாம் எழ வேண்டும். அது பழக்கத்தில் வரவேண்டும். இரவு நேரத்தில் தூங்காமல் இருந்தால் உடல் வறட்சியை ஏற்படுத்தி வாதத்தன்மை ஏற்படும். பகல் நேரத்தில் அதிகமாக தூங்கினால் அது கபத்தை கூட்டி கப சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும்.

பகல் தூக்கம் :

பொதுவாக மனிதனுக்கு பகலில் தூங்க நேரம் கிடைக்காது. வெயில் காலத்தில் வறட்சி அதிகமாக இருப்பதாலும், பகல் நீண்டு காணப்படுவதாலும், இரவு சுருங்கியிருப்பதாலும், வாதத்தன்மை மாற்றுவதற்காக பகல் தூக்கம் தேவையானது என புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இது வாதத்தை குறைக்கும். கபத்தை கூட்டும். எனவே கோடையில் இது தேவையாகிறது. மற்ற காலங்களில் பகல் தூக்கம் கூடாது.

அதே நேரத்தில் பேச்சாளர்கள், அதிகமாக பயணம் செய்பவர்கள், மது அருந்துபவர்கள், பளு தூக்குபவர்கள், பயத்தினால் பாதிக்கப்படுபவர்கள், வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், முதியவர்கள், உடம்பில் புண் உள்ளவர்கள், மனநோய் உள்ளவர்கள் பகல் தூக்கம் தூங்கலாம். பகலில் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் சற்று பகலில் தூங்கலாம்.

திடீரென்று இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அது கபத்தை அதிகரித்து உடல் பருமனுக்கும், ஏதுவாக அமையும். கப பிரக்ருதி உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். அதிகமாக கபம் உள்ளவர்கள், உண்பவர்கள் பகலில் அதிகமாக தூங்க கூடாது. தொண்டை நோய் உள்ளவர்களும், விஷ நோய் உள்ளவர்களும், பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்றும் பகலில் தூங்க கூடாது.

இரவு நேரத்தில் அதிகமாக விழிக்க வேண்டி வந்தால் அடுத்த நாள் சற்று தூங்கிக் கொள்ளலாம். அதிக உணவு உட்கொள்ளாமல் சற்று நேரம் பகலில் உறங்குவது நல்லது.

அதிக உறக்கம் :

அதிகமாக தூங்கினால் அஜீரணம் என்கின்ற ஜலதோஷ நோய், உடல் கனத்துப் போதல், சோம்பேறித்தனம், கொழுப்பினால் ஏற்படும் நோய்கள், பசியின்மை, தலைவலி, இருமல், தொண்டை வலி போன்றவை வரும். அதிகமாக தூங்கினால் உடை எடை நோய், சர்க்கரை நோய், சிந்திக்கும் ஆற்றல் குறைதல், இருதய நோய்கள், சோம்பேறித்தனம் போன்றவை ஏற்படும்.

அதிகமாக தூங்குகிறவர்கள் நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சத்வ குணத்தை அதிகரிக்கின்ற நல்ல செயல்களை செய்ய வேண்டும். புத்தகங்களை படிக்க வேண்டும். துளசி, தும்பை போன்றவற்றால் மூக்கிற்கு நஸ்யம் செய்தல் சாம்பிராணி புகையினால் முகர்ந்து கொள்ளுதல் போன்றவை தூக்கத்தை குறைப்பதற்கு பயன்படுகின்றன.

தூக்கமின்மை :

தூக்கமின்மை என்பது படுத்த பின்பும் தூக்கம் வராமை, தூங்கும்போது விழித்து விழித்து உறங்கும் தன்மை, கனவுடன் கூடிய தூக்கம் என்று 3 விதமாக காணப்படுகிறது. ஒருவருக்கு ஒரு நாள் தூக்கமில்லாமல் இருக்கிறது எனில் சிலருக்கு இரண்டு நாட்கள் தூக்கமில்லை. சிலருக்கு சில வாரங்கள் தூக்கமில்லை. சிலருக்கு சில மாதங்கள் தூக்கமில்லை.

அதிக மனச்சோர்வு உள்ளவர்கள் மிக அதிகாலையில் எழுந்திருப்பார்கள். அல்லது காலையில் எழுந்திருக்க முடியாமல் தவிப்பார்கள். ஆகாய விமானத்தில் அதிக நேரம் பயணம் செய்து வந்தவர்களுக்கும் தூக்கம் மாறுபடும். நைட் ஷிப்ட் உள்ளவர்களுக்கும், ஆல்கஹால் சாப்பிடுபவர்களுக்கும் தூக்க பிரச்சினை வரலாம். உடலில் வாதம், பித்தம் ஆகியவற்றின் செயல்பாடுகள் அதிகரிப்பதால் தூக்கமின்மை வருகிறது. வாதம் அதிகரிக்கும் போது சிந்தை வளருகிறது. சிந்தை வளரும்போது கவலை அதிகரிக்கிறது. இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்படுகின்றன.

தூக்கமின்மை ஒரு முக்கிய பிரச்சினையே. சரியான நேரத்தில் சரியான அளவு தூங்கவில்லையெனில் உடம்பு முழுவதும் வலி ஏற்படும். தலைவலி, கொட்டாவி, சோம்பல், அசதி மற்றும் தலைச்சுற்று ஏற்படும். குறித்த நேரத்தில் பசி ஏற்படாது. இதனால் வாதம் அதிகரித்து வாதத்தினால் ஏற்படுகின்ற நோய்கள் வரும்.

இதில் முதல் இரண்டு வகையான தூக்கமின்மையானது சுற்றுப்புற சூழல் வேறுபாடு இருந்தாலோ, அதிகமான சூடு இருந்தாலோ, வேலையில் பிரச்சினையிருந்தாலோ, மருந்துகளின் பின் விளைவினாலோ ஏற்படலாம். தைராய்டு நோய் மற்றும் மூட்டு வாத்தின் வலிகாரணமாக தூக்கமின்மை ஏற்படுகிறது..

தூக்கமின்மைக்கு பயன்தரும் மருந்துகள் :

பாலிலே கற்கண்டு சேர்த்து குடிப்பது. 5 கிராம் வல்லாரை சூரணம் பாலில் சேர்த்து சாப்பிடுவது தூக்கத்திற்கு நல்லது. எருமைப்பால், எருமைத்தயிர் மிகவும் நல்லது.

கரும்புச்சாறு சாப்பிடுவது. ஆட்டு மாமிசத்தால் செய்த சூப்புகளை குடிப்பது.

சர்க்கரையிலான (வெல்லம்) உணவுகளையும், மாவுப்பொருட்களையும் சேர்த்து உண்பது.

உளுந்தினால் தயாரிக்கப்பட்ட ஆகாரங்கள், தயிர் மற்றும் தயிர் சேர்ந்த உணவுப்பொருட்கள் சாப்பிடுவது. உடம்பில் எண்ணெய் தேய்த்து குளித்தல், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது. ஷவரில் குளித்தல், நறுமணமுள்ள நல்ல சுகமான படுக்கையில் படுப்பது இவையும் தூக்கத்திற்கு நல்லதே. உடம்பில் மசாஜ் செய்வது.

அடபதியன் கிழங்கை பாலில் காய்ச்சி குடிப்பது, பால் குடிப்பது, பாலிலே ஒரு சிட்டிகை ஜாதிபலச் சூரணம், 2 தோல் நீக்கப்பட்ட பாதாம், 2 ஏலக்காய் சேர்த்து சாப்பிடுவது. தான்வந்தரம் தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது.

சுத்தமான பசுநெய் ஒரு சொட்டுஎடுத்து இரண்டு மூக்கிலும் ஒவ்வொரு சொட்டு உறங்குவதற்கு முன்பு விட்டு கொள்வது நல்லது.

சத்தமில்லாத அறை, மெல்லிய இசை, ஒலி இவை இருந்தாலும் தூக்கம் வரும். தூங்கும் இடம் மிக முக்கியமானது.

சிரோ தாரை, சிரோவஸ்தி, தலைப் பொதிச்சல் என்று சொல்லக்கூடிய தலையில் போடுகின்ற பத்து போன்றவை நாட்பட்ட தூக்கமின்மைக்கு பலன் தரும். மிகவும் அதிகமான சிந்தனை உள்ளவர்கள் தியானம் பண்ணலாம். சிந்தனை தெளிவடையும். உணவில் பொதுவாக காரம், புளிப்பு, உப்பு அதிகமாக சேர்க்கக்கூடாது.

தவிர்க்க வேண்டியவை :

தூக்கம் வராதவர்கள் காபியை தவிர்க்கவும், இதில் உள்ள கபெய்ன் என்ற பொருளானது தூக்கத்துக்கு உகந்ததல்ல. சாக்லெட், சோடா, டீ போன்றவற்றையும் இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். இவை தூங்குவதை தள்ளிப்போடும். இரவில் நடுவில் எழச் செய்து தூக்கத்தை கெடுத்து விடும்.

படுத்துக் கொண்டே டி.வி. பார்ப்பதையும், படுத்துக் கொண்டே படிப்பது போன்றவற்றையும் தவிர்க்கவும். தூங்கும் முன் ஆன்மீக புத்தகங்களையோ, நல்ல விஷயங்களையோ பார்த்து விட்டு தூங்குவது நல்லது. தூங்குவதற்கு முன் அன்றாடம் செய்த செயல்களை நினைத்து பார்த்து நாளை செய்ய வேண்டிய செயல்களை நினைத்து பார்ப்பது நல்லது.

தூங்குவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். தூங்குவதற்கு வெறும் வயிற்றுடன் செல்ல வேண்டாம். மிக அதிகமாகவும் சாப்பிட்டு விட்டு தூங்க செல்ல வேண்டாம். தூங்குவதற்கு முன் இறைவன் பெயரையோ அல்லது ஒன்று முதல் ஆயிரம் வரை எண்ணிக் கொண்டிருந்தால் எண்ணுவதற்கு நடுவிலேயே நாம் தூங்கி விடுவோம்.

மது அருந்தி விட்டு உறங்குவது பல பின் விளைவுகளுக்கு காரணமாக இருப்பதால் மது அருந்தி விட்டு தூங்குவதை தவிர்க்கவும், உறக்க நோய் உள்ளவர்கள் அருகில் தூங்குபவரிடம் நாம் குறட்டை விடுகிறோமா, கால்களை அசைக்கிறோமா, மூச்சு விடும்பொழுது ஏதாவது தடை ஏற்படுகிறதா? என்பதை குறிப்பிட்டு சொல்லவும். தூக்கத்திற்கான சில பரிசோதனைகளை செய்து கொள்ள தூக்க நோய்களை கண்டறிய இது உதவும்.