Home சூடான செய்திகள் திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்

திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்

24

வட இந்திய நடிகை திஷா பாண்டே படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்து வருவதால் ரூ. 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில், மயங்கினேன் தயங்கினேன் படத் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்தவர் திஷா பாண்டே. தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் பெரும்பகுதியை முடித்து விட்டனராம். ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி உள்ளதாம். இந்த நிலையில் திஷா பாண்டே டேக்கா கொடுத்து வருகிறாராம். அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக் கூட்டியுள்ளார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன்.

தனது புகாரில், மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.

இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.

அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன் என்று கூறிவிட்டார்.

அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜேஸ்வரி.

விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிகாரர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திஷா பாண்டேவால் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.