Home ஆரோக்கியம் தினமும் சோர்வின்றி இருங்கள்

தினமும் சோர்வின்றி இருங்கள்

69

சோர்வின்றிஅன்றாட சாதாரண நிகழ்வுகளே இன்று சாதனைகள் போல் ஆகி விட்டன. அலுவலகத்தினை நேரத்தில் சென்றடைவதும், பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் ஒருவரை பரபரப்புடனேயே வைக்கின்றன. ஊருக்குப் போவதும், கல்யாணம், திருவிழா, பண்டிகைகள் போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சிக்குப் பதில் டென்ஷன் கொடுக்கின்றன.

உடலும், மனமும் சோர்ந்து விடுகின்றது. 40 வயதில் 60 வயது போல் சக்தி இல்லாமல் ஆகிவிடுகின்றது. இதனை சரி செய்ய நமக்குத் தேவை அதிக சக்தி. இந்த சக்தி உணவினால் மட்டுமே வந்து விடாது. சத்து மாத்திரைகள் மட்டுமே போதாது. இவற்றுடன் சில வழி முறைகளையும் நாம் பின் பற்றினால் அன்றாடம் சோர்வின்றி நிறைந்த சக்தியுடன் பல வேலைகளைச் செய்யலாம். சாதனையும் புரியலாம். கீழ்கண்ட எளிய முறைகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.

* அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடியுங்கள்: வேலை செய்யும் இடத்தில் திடீரென சோர்வு ஏற்பட்டால்  க்ளாஸ் நீர் குடியுங்கள். இவ்வாறு அடிக்கடி செய்யுங்கள். இது உங்கள் இரத்த ஓட்டத்தினை சீராக வைப்பதால் சோர்வு ஏற்படாது. கைவசம் எப்பொழுதும் ஒரு பாட்டிலில் சுத்தமான தண்ணீர் வைத்துக் கொண்டு அவ்வப்போது சிறிது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* அலர்ஜி தொந்தரவு இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்: தூசு, புகை, அதிக வாசனை இப்படி ஏதாவது ஒரு விஷயம் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தலாம். சில உணவு வகைகளாலும் அலர்ஜி ஏற்படலாம். எவ்வகை அலர்ஜியாயினும் அவை ஒருவரின் சக்தியினை உறிஞ்சி விடும். வெகுவில் சோர்ந்து விடுவர். ஆக அலர்ஜி பாதிப்பு இல்லாமால் ஒருவர் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.

* ஓய்வு அவசியம்: 7&9 மணி நேர தூக்கம் ஒருவருக்கு அவசியம். உங்களது தூக்கமின்மை உங்களது சக்தியினை வெகுவாய் இழக்கச் செய்யும். கண் விழித்து வேலை செய்கிறேன் என்ற பெயரில் நிரந்தர நோயாளி ஆகுபவர் அநேகர். இது இன்றைய சூழ்நிலையில் மாணவ சமுதாயம், ஐ.டி. கம்பெனி வேலை செய்வோர் சிலரிடையே காணப்படுகின்றது. அதே போல் இன்னொன்றையும் உணர வேண்டும். அதிக தூக்கமும் ஒருவரை சோர்வாய் வைக்கும்.

* தினமும் சிறிதளவு சாக்லேட் சாப்பிடுங்கள். ஓரிரு துண்டு சாக்லேட்டுகள் உங்களை அமைதியாய், படபடப்பின்றி வைக்கும். ஆனால் அதிக அளவு சாக்லேட் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.

* ஆரோக்கியமான சிற்றுண்டி உண்ண பழகுங்கள். மாலை 4 மணி அளவில் சற்று சோர்வாகத் தோன்றினால் சிறிதளவு உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா கொட்டைகள் சிறிதளவு எடுத்தக் கொள்ளுங்கள். தினமும் ஏதாவது ஒன்றினை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளலாம். வேர் கடலையும் நல்லதே. பகல் நேரங்களில் கொழுப்பு குறைவான தயிர் எடுத்துக் கொள்ளலாம். பஜ்ஜி, போண்டா, வடை இவைகளை எப்பொழுதாவது ஒருமுறை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தினம் இது போன்ற எண்ணை உணவு உடலை சோர்வாக்கி விடும்.

* பகலில் சோர்வாக இருக்கின்றதா? 10&20 நிமிடங்கள் கண்ணை மூடி சற்று சாய்ந்து இருங்கள். உடலின் படபடப்பு அடங்கட்டும். மூச்சு தானாய் சீர்படும். உடல் சக்தி பெறும். ஆனால் அதிக நேரம் இவ்வாறு இருந்தால் உடல் மேலும் சோர்வுறும். எனவே 20 நிமிடங்களுக்கு மேல் ஓய்வு வேண்டாம்.

* முடிந்தால் தரமான அகர்பத்தி, சாம்பிராணி, வாசனை மெழுகுவர்த்தி வாசனைகள் அளவாய் உங்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள். சோர்வு உடனே நீங்கும். இதனை நாள் முழுவதும் செய்யக் கூடாது. காலை, மாலை ஏதேனும் ஒரு நேரத்தில் 10 நிமிடங்கள் இவ்வாசனை மிதமாய் கிடைத்தால் போதும்.

* சூயிங்கம் மெல்லுங்கள். இது உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். தாடைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். ஆனால் இதனை கண்ட இடங்களில் மற்றவருக்கு தொந்தரவாகத் துப்பக் கூடாது. முறையாய் பேப்பரில் சுற்றி குப்பை தொட்டியில் போடும் நாகரீகம் உங்களிடம் இருக்க வேண்டும்.

* சுறுசுறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இது இருதயத்தினை நன்கு இயங்கச் செய்யும். ரத்த ஓட்டத்தினை சீராக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.

* பளிச்சென்று கண்ணுக்கு இதமான நிறங்களில் உடை அணியுங்கள். இது மக்களை உங்கள் மீது நல்ல முறையில் அணுகச் செய்யும். நீங்கள் செல்லும் இடங்களில் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். இது உங்களின் மனதினை மகிழ்வாய் வைப்பதால் உடலின் சக்தி கூடும்.

* வாய் விட்டு சிரியுங்கள். சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்: வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று ஆக ‘உம்’மென்று இருப்பதை விட்டு நன்கு சிரியுங்கள்.

* தூங்கி எழுவதும் தூங்க செல்வதும் முடிந்த வரை குறிப்பிட்ட நேரத்தில் இருக்கட்டும். அதாவது நீங்கள் தூங்க செல்வது 10 மணி என்றால் தினம் இரவு 10 மணிக்கு தூங்க செல்வதை முடிந்த வரை கடைபிடியுங்கள். தூங்கி எழுவது 6 மணி என்றால் தினம் தூங்கி எழுவது 6 மணியாகவே இருக்கட்டும்.

இதை விட்டு நினைத்த நேரத்தில் தூங்குவது நினைத்த நேரத்தில் எழுவது உடலுக்கு மிகுந்த பாதிப்பினையும், சோர்வினையும் கொடுக்கும். முறையான நேர தூக்கம், விழிப்பு என்பது சிறந்த ஆரோக்கியம் அளிக்க வல்லது. இதனையே வார விடுமுறை நாட்களிலும் கடை பிடியுங்கள். சனி இரவும், ஞாயிறு இரவும் விடிய விடிய சினிமா, தமாஷ் மற்றும் தவறான கேளிக்கைகள் உடலை ஆரோக்கியத்தினை வெகுவாய் கெடுக்கும்.

* தூங்கி எழுந்ததும் காபியின் உதவியினை நாடாதீர்கள். மேலும் மதியம் 2 மணிக்குப் பிறகு காபி அருந்துவது இரவு தூக்கத்தினை கெடுக்கும். அடிக்கடி காபி ஆரோக்கிய கேடு. சோர்வினையும் கூட்டும்.

* காலை இட்லி, தோசை, மதியம் அரிசி சாதம், இரவு இட்லி, தோசை அல்லது அரிசி சாதம் என மாவு சத்திலேயே உடலை உருவாக்காதீர்கள். உடல் ஊளை சதை கொண்டு, தொய்ந்து, எப்பொழுதுமே சோர்வாய் ஆக்கி விடும்.

* பாட்டிலில் அடைக்கப்பட்ட பல பானங்கள் உறுதியாய் உடலை கெடுக்கும், ஸ்டைல் வேண்டாம் தவிர்த்து விடுங்கள். இல்லையெனில் இளம் வயதிலேயே சக்தியற்றவராக ஆகி விடுவீர்கள்.

* காய்கறி சாலட், பழ சாலட், நார்சத்து என்று சாப்பிட்டாலே நிறைய சக்தி இருக்கும்.

* கை, காலை நீட்டி மடக்கி யோகாசனம் செய்யுங்கள். மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* வைட்டமின் சி சத்து தேவையான அளவு உடலில் இருந்தால் மட்டுமே சத்தினை உடலால் நன்கு எடுத்துக் கொள்ள முடியும். பழ உணவுகளை நன்கு எடுத்துக் கொள்ள முடியும். பழ உணவுகளை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்படின் வைட்டமின் ’சி’ சத்து மாத்திரையினையும் எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ’சி’ சத்து வைட்டமினைப் போல வைட்டமின் ’பி’ பிரிவு வைட்டமின்களும் உடலுக்கு அவசியம். இவையே ரத்தத்தில் சர்க்கரையை உபயோகிக்கும் சக்தியாக ஆக்கவல்லவை.

சைவ உணவில் பொதுவில் வைட்டமின் ’பி’ சத்து மாத்திரைகளை சிபாரிசு செய்வதுண்டு. இருப்பினும் இக்குறைபாடு ஏற்படும்போது ஊசி மூலம் இந்த வைட்டமின் சத்தினை செலுத்த உடலுக்கு சக்தி ஏற்படும். புகை பிடிப்பதால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று இரவு தூக்கமில்லாதிருப்பது. எனவே புகை பிடிப்பதனை எப்படியாவது விட்டு விடுங்கள். உணவினை சிறுசிறு பகுதியாக உண்ணுங்கள். கனமான உணவு ஒருவரை சோம்«பறியாகவும், நோயாளியாகவும் ஆக்கி விடும்.

மூன்று முறை உண்பதனை பிரித்து ஐந்து முறையாக உண்ணுங்கள். சாதாரண குளியலை விட ’ஷவர்’ முறையில் குளிப்பது உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் தரும். காரணம் இம்முறை குளியல் ரத்த ஓட்டத்தினை சீராக்கும். முறையான முறையில் வேலை செய்வோர் அதிக சக்தியினை இழக்க மாட்டார்கள். ஒவ்வொரு வேலையையும் பாதியில் விட்டு இன்னொரு வேலை பிறகு அதனை பாதியில் விட்டு இன்னொரு வேலை எனச் செல்வோர் அதிக சக்தியினை இழப்பர். உங்களை மிஷன் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

சிறு சிறு இடைவெளி ஓய்வு இவை உங்களை சிறந்த முறையில் வேலை செய்ய வைக்கும். நிறுத்தாமல் செய்யும் தொடர் வேலை உங்களை நோயாளியாகவும், முதிய தோற்றம் உடையவராகவும் ஆக்கி விடும். ஆரோக்கியமான காலை உணவினை அநேகர் மறந்து விட்டனர். காலை முதல் பட்டினியாக இருப்பதும் மதியம் மனம் போன படி சாப்பிடுவதும் பள்ளி, காலேஜ் மாணவ சமுதாயத்தின் வழக்கம் ஆகி விட்டது. பலருக்கு காலை 7 மணிக்கே கிளம்ப வேண்டி உள்ளதால் அவர்களால் முறையான உணவினை எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

தானிய சத்து மாவு கஞ்சி, தயிர், பழம் போன்றவைகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவே ஒருவரை நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். காலை உணவினை மகாராஜாவினைப் போல உண்ணுங்கள் என்று முன்னோர்கள் சொன்னதின் பொருள் நல்ல புரதமும், வைட்டமின் சத்து இருக்க வேண்டும் என்பதாகும். 9 மணிக்கு அலுவலகம் செல்பவர்கள் நன்றாகவே சத்துணவாக கொள்ளமுடியும். வெறும் மாவு சத்தாக கொள்ளாமல் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

புரதம் அவசியம் தேவை என்பதால் பருப்போ, பன்னீர், சீஸ், முட்டை வகைகளையோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காலை உணவை தவிப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பர் என்பதனை அனைவரும் நன்கு உணர வேண்டும். அதிக எடை மனிதனுக்கு அதிக சுமை. மூச்சு விடுவதில் சிரமம், வேலை செய்வதில் கடினம் என மனிதனை அதிக இயலாமைக்கு அழைத்துச் சென்று விடும். நோயாளி ஆக்கி விடும். எடை குறைப்பினைப் பற்றி மருத்துவ ஆலோசனை பெற்று உடனடி எடையினை குறைத்து விடுங்கள்.

* யோகா மனிதனின் அடிப்படை அவசியம். இன்றே கற்றுக் கொள்ளுங்கள். மொழி, எழுத்து போல் யோகாவும் அடிப்படை அவசியம். இதனை பழகாதவர் கல்லாதவர் போல் ஆவர்.

* காலை, மாலை இளம் வெயில் உடலுக்குத் தேவை. சற்று நேரம் வெளியில் வாருங்கள். உடம்பில் வெயில் படட்டும்.

* உங்கள் இரும்பு சத்து, தைராய்டு, இரத்த கொதிப்பு இவற்றினை பரிசோதித்துக் கொள்வது அவசியம். சோர்வின்றி இருக்க இதனை படிப்பது மட்டுமே பயனளிக்காது. நடைமுறை படுத்தவும் செய்ய வேண்டும்.