Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தாய்மை அடைய உதவும் யோகாசனம்!

தாய்மை அடைய உதவும் யோகாசனம்!

32

பெண்களை முழுமையடையச் செய்வது தாய்மை. இது பெண்களுக்கு இறைவன் அளிக்கும் மிகப்பெரிய வரம். தாய்மையடைவது பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும் போற்றப்படுகிறது. எனவேதான் குழந்தையின்மை என்னும் குறை பெண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. குழந்தையின்மை குறைபாட்டினை யோகா மூலம் நிவர்த்தி செய்யலாம் என மருத்துவர்களே தெரிவித்துள்ளனர்.

குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம். குழந்தையின்மை குறைபாடும் ஆண்மை, பெண்மை குறைபாடும் வேறு வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தாம்பத்ய உறவே மேற்கொள்ள முடியாத நிலைதான் ஆண்மை, பெண்மை குறை எனப்படும்.

குழந்தையின்மையின் காரணங்கள்

விபத்தினால் பிறப்புறுப்பில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடுகள், பிறப்புறுக்களின் வளர்ச்சியின்மை போன்றவையும் உயிரணு குறைபாடு உயிரணு செல்லும் பாதை அடைப்பு, விந்து அசாதாரணமாக, இயற்கைக்கு மாறாக இருப்பது, குறைந்த அளவே உற்பத்தியாவது அல்லது விந்துக்களே இல்லாமல் போவது அல்லது விந்து நகர முடியாமல், ஆணுறுப்பை அடையமுடியாமல் போவது போன்ற காரணங்கள் ஆண்களுக்கு உரிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன.

உயிரணு பின்னோக்கி செல்லுதல்

ஸ்டீராய்ட் மருந்துகள் ஹார்மோன் அளவுகளை குறைத்து விந்து உற்பத்தியில் தலையிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும். அபூர்வமாக விந்து முன்னே செல்லாமல், பின்னால், ரிவர்ஸில் சென்று விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும், இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இது ஏற்படலாம்.

கருமுட்டை பாதிப்பு

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள். மாதம் ஒரு முறை சினைமுட்டை வெளியாகாமல் போவது குழந்தையின்மைக்கு காரணமாகும். அதேபோல் புரோஜிஸ்டெரோன் ஹார்மோன் சுரக்காமல் போவது முக்கிய குறைபாடாகும். இந்த ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன், மாதா மாதம் கருப்பை பையின் உட்படையை, கெட்டியாக்கும். முட்டையின் வரவை எதிர்நோக்கி இந்த வேலையை அது செய்கிறது. மூளை, பிட்யூட்டரிக்கு தேவையான கோனாடோட்ரேபின் என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், முட்டை உற்பத்தியாகாது. தைராய்டு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக உடல் பருமன் போன்றவையும் குழந்தையின்மையை ஏற்படுத்தும்.

குறைபாடுகளை நிவர்த்தி செய்ய

பெண்களின் பிறப்பு உறுப்புகளின் பிறவிக்கோளாறுகள், கருப்பப்பை பாதைகளில் கட்டி ஏற்படுதல் போன்ற குறைபாடுகளை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உடல் கோளாறுகளை சரி செய்தபின், குழந்தை உண்டாகும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. புரதம் அதிகமுள்ள மீன், வெண்மாமிசம், முட்டைகள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெங்காய சாற்றுடன், தேன் நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகாசனம்

குழந்தையின்மை பிரச்சினையை யோகாசனம் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக்கொண்ட பின்னர் யோகாசனம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். தினசரி சூர்ய நமஸ்காரம், பத்த கோனாசனம், கூர்மாசனம்,அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம், மூலபந்தாசனம்,சர்வாங்காசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்வதன் மூலம் உடலில் உள்ள குழந்தையின்மை குறைபாடு நீங்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.