Home பெண்கள் தாய்மை நலம் தாயாகப் போகிறீர்களா? மனதளவில் தயாராகுங்கள்!

தாயாகப் போகிறீர்களா? மனதளவில் தயாராகுங்கள்!

29

தாய்மை என்பது திருமணமான அனைத்துப் பெண்களும் எதிர்பார்க்கும் வரம். ஒரு பெண் கர்ப்பமடையும் முன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகவேண்டும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவித மாற்றங்களை பெண்கள் எதிர்நோக்க வேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பிணிகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் பட்டியல் இடுகின்றனர்

உடல் எடை கூடும்

பொதுவாக ஒரு சராசரி பெண் கர்ப்ப காலத்தில் அவளின் அசலான எடையிலிருந்து பத்து சதவீதம் எடை கூடுவாள். ஆரம்பத்தில் அதிக குண்டான பெண்கள் ஒல்லியானவர்களைக் காட்டிலும் எடை கூடுவார்கள். கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். சராசரியாக எடை ஐந்திலிருந்து ஒன்பது கிலோ வரை அதிகமாகும்.

முதல் மூன்று மாதங்களில் வாந்தியும் பசியின்மையும் இருந்தால் கணிசமான எடை கூடுதல் இருக்காது. கர்ப்ப காலத்தின் இரண்டாம் கட்டத்தில், ஒரு வாரத்திற்க அரை கிலோ எடை கூடி மொத்தமாக மூன்றரை முல் நாலரை கிலோ வரை எடை கூடும். மேலும், பிரவசத்திற்கு முன் அரை கிலோவிலிருந்து ஒன்றரை கிலோ வரை எடை குறையும். கர்ப்ப காலத்தின் எடை கூடுதல், கருவின் எடையைப் பொறுத்து இருக்கும்.

நீரின் அளவு அதிகரிக்கும்

கர்ப்பத்தின்போது மொத்த உடல் நீரின் அளவு ஏழு லிட்டர் வரை அதிகரிக்கும். மேலும், கடைசி கட்டத்தில் சிறுநீரகங்கள் அதிக அளவு உட்கொள்ளக்கூடிய தண்ணீரை வெளியேற்ற சிரமப்படும். கணுக்கால்களிலும், கால்களிலும் வீக்கமேற்படுவது சாதாரணமாக நிகழக்கூடியதே. இது சாதாரணமாக மாலை நேரங்களில் ஏற்பட்டு சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்தால் மறைந்துவிடும். இது கால்களில் இருக்கும் இரத்தச் சிரைகளில் ஏற்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடியதாகும்.

உடல்வலி, தூக்கம்

கர்ப்பகாலத்தில் பெண்களில் உடலில் ஆங்காங்கே வலி ஏற்படும். உடல் சோர்வு அதிகரிக்கும். அதேசமயம் அவ்வப்போது தூக்கம் குறைபாடு ஏற்படும். ஒரே பக்கமாக திரும்பி உறங்கமுடியாது. அவ்வப்போது சிறுநீர் பிரச்சினை ஏற்பட்டு கர்ப்பிணிகளுக்கு உறக்கம் பாதிக்கும்.

ஜீரண செயல்பாடுகள்

அதிகபட்சமான பெண்களுக்கு வாந்தி வருவதைப்போன்ற உணர்வு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். குடல் அசைவுகள் குறைதல், குடல் சரப்பு நீர்கள் சுரத்தலின் அளவு குறைதல் கல்லீரல் செயல்திறனில் மாறுபாடு போன்றவை இருக்கும். பசியும் உணவுப் பழக்கங்களிலும் மாறுபாடு இருக்கும். சில உணவுப் பொருட்களின் மீது விருப்பமும் அதிகப் பற்றும் இருக்கும். நெஞ்செரிச்சல், வயிற்று அமிலம் மேல்நோக்கி வருவதால் ஏற்படும்.

தோல் மற்றும் பல்லில் மாறுதல்கள்

கர்ப்ப காலத்தல் எலும்புகளுக்கு அதிகமாக இரத்த ஒட்டமிருக்கும். இடுப்பு எலும்புகள் அதிகமாக அசைவதோடு நடப்பதற்கு சிரம மேற்படுத்தும். தோலில் சில இடங்களில் அதிக நிறச்சேர்க்கை ஏற்பட்டுவிடும். மார்புக்காம்பு, பிறப்புறுப்பு, தொப்புள், முகம் போன்ற பகுதிகளில் நிறச்சேர்க்கை இருக்கும். உடல்களில் ஆங்காங்கே வரிகள் ஏற்படும்.

கால்சியம் குறைபாடு

கர்ப்ப காலத்தில் பல் சொத்தை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். கருவில் உள்ள குழந்தைகளுக்கு கால்சியம் தேவை அதிகமாக இருப்பதால் தாய்க்கு கால்சியம் குறைபாடு ஏற்படும். இந்த சத்துக் குறைவால் பற்கள் சீக்கிரமாகச் சொத்தையாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

நரம்பு மண்டல பிரச்சினைகள்

சிறுநீரக மண்டலத்தில் பல மாறுதல்கள் ஏற்படுவதோடு சிறுநீரில் சர்க்கரை வெளியேறவும் வாய்ப்புகள் உண்டு. நரம்பு மண்டல மாறுதல்களால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாய் இருப்பர். பய உணர்வு, கவலை போன்றவை அதிகமாக இருக்கும். எனவே மனதளவில் இவற்றை எதிர்கொள்ள தயாராகும் பட்சத்தில் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தை கருவில் உருவாகும் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.