Home அந்தரங்கம் ‘ச்சீ..! இப்படி ஒரு புருஷனா..!’ இந்த குணாதிசியம் உடைய ஆணை பெண்கள் விரும்ப மாட்டார்களாம்!

‘ச்சீ..! இப்படி ஒரு புருஷனா..!’ இந்த குணாதிசியம் உடைய ஆணை பெண்கள் விரும்ப மாட்டார்களாம்!

139

அருணும் ஆர்த்தியும் நிச்சய மாலையை மாற்றிக்கொண்டதும், ஆர்த்தியின் பெற்றோர்கள் ஒருவழியாக நல்ல பையனை மகளுக்கு நிச்சயம் செய்துவிட்டோம் என்ற மனநிறைவுடன் இருவரையும் ஆசீர்வதித்து கொண்டிருந்தனர். பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணத்தை பொறுத்தவரையில், நிச்சயத்திற்கு பின்னர் திருமணத்திற்கு முன்னர் இருவரும் தங்களது காதலை பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் அழகானது. ஆர்த்திக்கும் அப்படியே அமைந்தது. கல்யாண தேதி நெருங்க நெருங்க காதலும் வளர்ந்தது, கூடவே பெற்றோர்களை பிரிந்து செல்லப்போகிறோம் என்ற வருத்தமும் அதிகரித்தது. திருமணமும் நடந்து முடிந்து, இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர்.

அடுத்து, அருணின் தங்கை நித்யாவிற்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அருணின் பெற்றோருக்கு வயதாகிவிட்டதால், திருமண விவகாரங்களை தனியாக கையாளும் அளவிற்கு ஆர்த்தியும் அருணும் இப்போது பக்குவமடைந்து விட்டார்கள். அருணுக்கு பக்கபலமாக ஆர்த்தி ஒவ்வொரு சடங்கையும் சம்பிரதாயத்தையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தாள். நித்யாவின் திருமணமும் நல்ல முறையில்,ஒரு குறையும் இன்றி நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் முடிவதற்குள் ஆர்த்திப்பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல..

திருமணத்தில் தன்னால் ஏற்பட்ட சின்ன சின்ன பிழைகளை மறைக்க, தன்னுடைய கவுரத்தை காப்பாற்றிக்கொள்ள ஆர்த்தி மீது குறை சொல்லி கொண்டிருந்தார் அருண். அப்படித்தான் ஒருமுறை, வீட்டில் உறவினர்கள் முன்னர் ஆர்த்தியை கத்திவிட்டார். ஆர்த்தியும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சங்கடத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.எந்த ஒரு நல்லது நடந்தாலும் தன் பெயரை முன்னிறுத்தி கொள்ளும் அருண் , வீட்டில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் ஆர்த்தியை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்டார்.இதனாலே ஆர்த்திக்கு அருண் மீது இருந்த காதல் மெல்ல மெல்ல தேய ஆரம்பித்தது.

அந்த சமயம் நித்யாவின் திருமண விருந்து தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. அருணின் சித்தப்பாவிற்கு அருண் வீடு பழக்கப்பட்ட இடம் தான். இருப்பினும் உறவினர்கள் வீடு என்பதால் சித்தி கூடவே சித்தப்பா இருப்பதை கண்ட அருண், “சித்தப்பா,சித்தி எங்கயும் போயிட மாட்டாங்க” என கிண்டல் செய்ய ஆரம்பித்தார். பின்னர் தனியாக சித்தப்பா அருணிடம் , “நாங்க லவ் மேரேஜ்,கல்யாணம் ஆகி இவ்ளோ வருடம் ஆனாலும் நம்ம வீட்ல யாரும் அவளை குறை சொல்லிட கூடாதுனு நினைப்பேன், நான் பக்கத்துல இருக்கிறப்போ யாரும் அவளை மரியாத குறைவா பேசிட முடியாது,அதனாலே சொந்தக்காரங்க வீட்டுக்கு போனா நான் உங்க சித்தி கூடவே இருப்பேன்” என கூறிக்கொண்டிருந்தார்.

இப்போது தான் அருணுக்கு தனது தவறு புரிந்தது. அந்தநேரம் ஆர்த்தி, அருண் கண்முன்னே பரபரப்பாக விருந்து வேலையை கவனித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார் அருண். குடும்பத்திற்காக ஆர்த்தி விட்டுக்கொடுத்து போவதையும் மனைவியை தான் நோகடித்து கொண்டிருப்பதையும் உணர்ந்தார் அருண்.. ஆர்த்தியிடம் செல்லமாக கொஞ்சி பேசுகிறார்,ஆர்த்திக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்கிறார். ஆனால் ஆர்த்திக்கு அருண் மீது இருந்த பழைய காதல் காணாமல் போனது, கணவர் என்ற கடமை மட்டுமே இருந்தது..