Home உறவு-காதல் சுயநலம் இல்லா உண்மைக் காதல் தான் ஜெயிக்கும்!

சுயநலம் இல்லா உண்மைக் காதல் தான் ஜெயிக்கும்!

21

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலைப்பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப்போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. எந்த வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாததுதான் உண்மைக்காதல் என்கின்றனர் நிபுணர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுயநலம் பார்க்காது

உண்மையான காதல் சுயநலம் பார்க்காதது. உண்மை காதலுக்கு கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. தான் நேசிக்கும் நபரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், அவர்களின் மனதையோ, உடலையோ ஒருபோதும் காயப்படுத்த நினைக்காது. தெய்வீகமான அன்பு இருந்தால் எத்தகைய வலிகளையும் தாங்கிக் கொள்ளும் என்கின்றனர் காதலில் மூழ்கிய அனுபவசாலிகள். எனவே உங்கள் துணையிடம் சுயநலமற்ற அன்பை செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுக்கு அந்த அன்பு இருமடங்காக கிடைக்கும்.

எதிர்பார்ப்பு அற்ற அன்பு

காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் ஏற்படுவது இன்றைக்கு அபூர்வமாகிவிட்டது. இன்றைக்கு பெரும்பாலான காதலர்களுக்கிடையே ஏற்படும் எதிர்பார்ப்புகள்தான் பிரச்சினைக்கு மூலகாரணமாகிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் சண்டையிட்டு பிரிவதற்கு காரணம் இத்தகைய எதிர்பார்ப்பும், நிபந்தனைகளும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.

நிபந்தனை வேண்டாமே

மனைவி அல்லது காதலியிடம் நிபந்தனை விதிப்பதை தவிருங்கள். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு விசயத்திலும் கட்டுப்பாடு விதிக்கப்போய் அது சிக்கலில் கொண்டு போய் விடும். எனவே நம் அன்பிற்குரியவர்கள் நாம் சொல்லும் பேச்சை கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களை நிர்பந்திக்காமல் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு.

முழுமனதோடு நேசியுங்கள்

அன்பிற்குரியவர்களை முழு மனதோடு நேசியுங்கள். அவர்களின் மனது நோகும் படியாக ஒரு வார்த்தையோ, செயலோ இருக்கவேண்டாம். அத்தகைய வார்த்தைகளும், செயல்களும்தான் அன்பிற்குரியவர்களின் மனதை நொறுக்கிவிடும். எனவே பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தினமும் என்னை கவனி

சின்னக்குழந்தைகளுக்கு எப்படி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும்முக்கியமோ அதைப்போலத்தான் அன்பிற்குரியவர்களும் எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு நொடியும் நம்கவனம் அவர்கள் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது இடைவெளி ஏற்பட்டால் சுணங்கி போய்விடுவார்கள். எனவே அன்பானவர்களை அக்கறையுடன் கவனிப்பாது காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

காதல் வாழ்க்கையில் இவற்றை பின்பற்றினால் அது கசந்து போகாமல் என்றைக்கும் புதிதாய் பூத்த மலராய் மணம் வீசும் என்கின்றனர் நிபுணர்கள் முயற்சித்து பாருங்களேன்.