Home பெண்கள் தாய்மை நலம் சுகப்பிரசவம் ஆக வேண்டுமா? இசை கேளுங்கள்!

சுகப்பிரசவம் ஆக வேண்டுமா? இசை கேளுங்கள்!

20

இசை மகிழ்ச்சி தருவது என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்த இசை இப்போது மருத்துவமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மியூசிக் தெரபி என்ற பெயரில் பிரபலமாகி வரும் இந்த சிகிச்சை பற்றி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து வரும் டாக்டர் டி.வி.சாய்ராமிடம் கேட்டோம். இவர் ‘நோய் தீர்க்கும் இசை’, ‘செல்ஃப் மியூசிக் தெரபி’ உட்பட பல புத்தகங்களை எழுதியதோடு, சர்வதேச அளவில் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்.
மியூசிக் தெரபி என்பது என்ன?
‘‘இசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் பல இசைக் கலைஞர்களை மருத்துவமனைக்கு வரவழைத்து இசைக்கருவிகளை வாசித்தும் பாடல் பாடியும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார்கள். அதன்பிறகு, சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இதை கவனித்த அமெரிக்கர்கள் இசைக்கும் மருத்துவத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்கள். அறிவியில் ரீதியாகவும் இசை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பதைத் தெரிந்த பிறகே, ‘மியூசிக் தெரபி’ என்ற சிகிச்சை முறையை உருவாக்கினார்கள்.’’
யார் யாருக்கு இந்த சிகிச்சை முறைகள் பயன்படும்?
‘‘நோய்க்கு நேரடி மருந்தாக இது இருக்காது. ஆனால், நோயை குணப்படுத்த பக்கபலமாக இருக்கும். அதனால், இதை ‘காம்ப்ளிமென்ட்ரி தெரபி’ என்றும் சொல்வார்கள். மன அழுத்தமும் பதற்றமும் அதிகமாகிவிட்ட இன்றைய வாழ்வில் உடலால் வரும் நோய்களைவிட மனதால் வரும் நோய்கள் அதிகமாகிவிட்டன. ரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்களுக்குக் கூட மனமே காரணமாக இருக்கிறது. கோபம், பொறாமை அதிகமாகி வருகிறது. இந்த எதிர்மறை விஷயங் களையெல்லாம் தவிர்த்து அமைதியான முறையில், வெற்றிகரமாக ஒருவர் வாழ்வதற்கு மியூசிக் தெரபி பெரிதும் உதவி செய்யும். முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்குக் கூட மியூசிக் தெரபி நல்ல பலனைக் கொடுத்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மியூசிக் தெரபி பெரிய உதவியாக இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். அதனால், நோயாளிகளுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் மியூசிக் தெரபி தேவை.’’
இந்த சிகிச்சையை எப்படி அளிப்பார்கள்?
‘‘இசையைக் கேட்க வைப்பது, இசைக்கருவிகளை வாசிக்க வைப்பது, மற்றவர்களுடன் சேர்ந்து பாடுவது, மற்றவர்கள் பாடுவதைக் கேட்பது என்று இதில் பல வகைகள் இருக்கின்றன. நோயாளிக்குத் தகுந்தாற்போல் இந்த சிகிச்சை முறைகள் மாறுபடும்.’’
கர்ப்பிணிகளுக்கு மியூசிக் தெரபி அளிப்பது நல்லதாமே?
‘‘கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு கதை கேட்டதாகப் புராணக் கதை உண்டு. கருவைச் சுற்றியிருக்கும் அம்னியாட்டிக் திரவம் மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையால் நாம் பேசுவதைக் கேட்க முடியும் என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மியூசிக் தெரபியை தாய்க்கு அளிப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனுடன் சுகப்பிரசவமாவதற்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதற்கும் மியூசிக் தெரபி உதவுகிறது.’’
இந்தியாவிலிருந்து சென்றதுதான் மியூசிக் தெரபி என்று எப்படி சொல்கிறீர்கள்?
‘‘நம் நாட்டில் 5,000 வருடங்களாக இருக்கும் நாத யோகத்தையே அமெரிக்கர்கள் மியூசிக் தெரபி என்கிறார்கள். இந்த நாத யோகத்தினால் மூளையை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அமைதிப்படுத்தவும் முடியும். இதன் அடிப்படையில் மூளையின் நிலைகளை பரநாதம், பஸ்யந்தி நாதம், மத்யமம் நாதம், வைகரி நாதம் என்று நான்காகச் சொல்கிறார்கள். அதைத்தான் இன்று ஈ.ஈ.ஜி. தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பீட்டா அலைகள், ஆல்பா அலைகள், தீட்டா அலைகள், டெல்டா அலைகள் என்று நான்கு நிலைகளில் மூளையின் அதிர்வலைகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மியூசிக் தெரபி இந்த அமைதி நிலைகளுக்குத்தான் நம்மைக் கொண்டு செல்கிறது. நம் நாட்டில் இருக்கும்போது அதற்கு மரியாதை இல்லை. ஆனால், அதே விஷயம் வெளிநாடு சென்று அங்கிருந்து வேறு பெயரில் வந்தால் அதற்கு இருக்கும் மரியாதையே வேறு.’’
மியூசிக் தெரபிஸ்ட் இல்லாமல் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியாதா?
‘‘மியூசிக் தெரபிஸ்ட்டின் ஆலோசனைகட்டாயம் இல்லை. எந்த மாதிரியான இசை நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அது சினிமா பாடல்களாக இருந்தாலும் சரி, பக்திப் பாடலாக இருந்தாலும் சரி… அது உங்களுக்குப் பிடித்த மானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இதில் முக்கியம். இந்த பரபரப்பான வாழ்க்கையில் தினமும் அரை மணிநேரம் தியானம் போல இசையை அனுபவித்து செய்தால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். பாடல்கள் கேட்பதைப்போல நமக்குப் பிடித்த இசைக் கருவிகளை வாசிக்கலாம், பாடல்களைப் பாடலாம். இதைப் பற்றி பிரத்யேகமாகக் கற்றுக்கொண்ட தெரபிஸ்ட்டு களுக்கு நமக்குத் தெரியாத பல நுட்பங்களும் வழிமுறைகளும் தெரியும். சுறுசுறுப்பு குறைவாக இருப்பவரை வேகமான பாடல்களைக் கேட்க வைத்தால் உற்சாகமாகிவிடுவார். பதற்றமாக இருப்பவரைக் கொஞ்சம் நிதானப்படுத்த,அதற்குத் தகுந்த மாதிரி இசையைக் கையாண்டால் கூடுதல் பலன் கிடைக்கும், இரவு நேரத்தில் உற்சாகமான பாடல்களைக் கேட்டால் தூக்கம் வராது. அதனால், தெரபிஸ்ட்டுகளிடம் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நாம் எதிர்பார்க்கும் பலனை முழுமையாகக் கொடுக்கும்!’’