Home ஆரோக்கியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க!

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க!

34

கடுமையான வலியைத் தரக்கூடியவை தான் சிறுநீரக கற்கள். அதிலும் சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலியுடன் சிறுநீர் கழிக்கக்கூடும். எனவே இந்த சிறுநீரக கற்கள் யாருக்கு உள்ளதோ அவர்கள் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரக கற்களானது உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும் ஏற்படும்.
பொதுவாக சிறுநீரக கற்களானது ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்களால் உருவாகக்கூடியது. அதுமட்டுமிமன்றி, உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரிக்கும் போது, ஒரு கட்டத்தில் அவை கற்களாக மாறி சிறுநீரகத்தில் உருவாகும். மேலும் கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அப்படி உப்பு உருவாகும் போது, போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், அவை சிறுநீரகத்தில் கற்களாக படிந்துவிடும். பின் அவை எப்போது சிறுநீர்பைக்கு நகர்கிறதோ அப்போது தாங்க முடியாத வலியை உணரக்கூடும்.
எனவே சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
1. சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது.
2. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றால் செய்யப்பட்ட ஜூஸ் குடித்து வருவதும் நல்லது. ஏனெனில் இவையும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கக்கூடியவை ஆகும்.
3. உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் சோடியம் நிறைந்த உப்பை குறைவாக சேர்த்து வருவது, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதுடன், உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமலும் இருக்கும்.
4. மாட்டிறைச்சி, முட்டை, கோழி போன்றவற்றை அளவாக எடுத்து வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஏனெனில் இவற்றில் விலங்குகளின் புரோட்டீன் அளவுக்கு அதிகம் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்து, உடலில் உள்ள சிட்ரேட்டின் அளவை குறைத்து, சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். எனவே இந்த அசைவ உணவுகளை அளவாக எடுத்து வருவது மிகவும் நல்லது.
5. சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகக்கற்கள் கரைந்துவிடும். சிறுநீரக கற்கள் இல்லாவிட்டாலும், வாரம் ஒரு முறை இந்த ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
6. சில வகையான உணவுப் பொருட்கள் சிறுநீரக கற்களை உருவாக்கும். அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம். அந்த உணவுகளாவன பீட்ரூட், பசலைக்கீரை மற்றும் சாக்லெட் போன்றவையும், ஆக்சலேட் அதிகம் நிறைந்த நட்ஸ் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த கோலாக்கள் போன்றவையும் சிறுநீரக கற்கள் உருவாக்கும்.
எப்போதும் ஒரு பிரச்சனை வந்த பின் அதற்கான தீர்வுகளை கண்டறியாமல், அந்த பிரச்சனை வராமல் இருக்க என்னவெல்லம் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டு, அந்த பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதே நல்லது. எனவே சிறுநீரக கற்கள் வராமல் இருக்க தண்ணீர் அதிகம் குடித்து, காய்கறிகள் மற்றும் பழங்களை சரியான அளவில் உட்கொண்டு வந்தாலே, சிறுநீரக கற்கள் வருவதைத் தடுக்கலாம்.