Home பெண்கள் அழகு குறிப்பு கைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்

கைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்

22

பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். உங்கள் உடலில் இளமை விலகி, முதுமை நெருங்குவதை உங்கள் கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். சில இயற்கை வழிமுறைகளில் உரிய கவனம் கொடுத்தால், இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யலாம்

சூழலின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப சருமத்தின் தன்மை எண்ணெய்ப்பசை, வறட்சி என்று மாறிக்கொண்டேஇருக்கும். ஆனால், உங்கள் கைகள் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் வறட்சியாக இருந்தால், தட்பவெட்பம் தாண்டி, ஆரோக்கியத்தில் பிரச்னையென்று அறிய வேண்டும்.

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக் குறைவது, சருமப் பராமரிப்பின்மை என அதற்கான காரணங்களை அறிந்து கவனம் கொடுக்க வேண்டும். சிலருக்கு, அடிக்கடி கை கழுவிக்கொண்டேயிருக்கும் பழக்கத்தால்கூட கைகள் வறண்டுபோகலாம். கைகளில் வறட்சி நீண்ட காலம் நீடித்தால், சருமம் சுருங்கத் தொடங்கும். இதனால் உங்கள் கைகள் உங்கள் வயதைவிட உங்களை மூப்பாகக் காட்டும்.

வறண்ட கைகளுக்குக் கற்றாழை மூலப்பொருள் கொண்ட க்ரீம்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும்போது லோஷனாக இல்லாமல் க்ரீமாகப் பயன்படுத்துங்கள். லோஷனைவிட க்ரீம் சற்று கெட்டியாக இருக்கும் என்பதால் கைகளில் நீண்ட நேரம் நீடிக்கும்.

அதிக நேரம் வெயிலில் இருக்க நேரும்போது, சில பெண்களுக்கு அது கைகளில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தும். இதற்கு வீட்டிலேயே இருக்கும் சிறந்த மருந்து பால். பாலை காட்டனில் தோய்த்தெடுத்து உங்கள் கைகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் துடைத்து எடுங்கள். தொடர்ந்து செய்துவர, கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

அதிக தூரப் பயணம், இரு சக்கர வாகனப் பயணம் போன்ற காரணங்களால் சில பெண்களுக்குச் சூரிய ஒளியின் பாதிப்பு கைகளில் அதிகம் வெளிப்படும். பொதுவாகக் கைகளில் அதிக அளவில் சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது, அது தன் ‘எலாஸ்டிக்’ தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும். இதனால் சருமத்தில் தளர்ச்சி ஏற்படும். இதனை ஆரம்பகட்டத்திலேயே தவிர்க்க, தினமும் வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.