Home குழந்தை நலம் குழந்தைகள் பிற குழந்தைகளை அடிப்பது எதனால்?

குழந்தைகள் பிற குழந்தைகளை அடிப்பது எதனால்?

15

captureகோபம் என்னும் உணர்ச்சி மனிதனின் மனதில் இயற்கையாகவே உண்டு. பிறப்பிலேயே நாம் பெறும் பல குணங்களில் கோபமும் ஒன்று. குழந்தகளுக்கு அது சற்று அதிகம். பக்குவப்பட்ட மனிதன் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வெளிக்காட்டுவதில்லை. குழந்தைகளுக்கு எந்த உணர்ச்சியையும் அடக்கத் தெரியாது.

கோபத்தையும் எல்லா உணர்ச்சிகளையும் போலவே வெளிப்படுத்தி விடுகிறார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் திடீரென அடித்து சண்டை போட்டுக் கொள்வது இதனால் தான். உணர்ச்சித் தூண்டலுக்குக் காரணமான அமிக்டாலா என்னும் மூளைப் பகுதி பெண்களை விட ஆண்களுக்கு சற்று பெரிதாக இருப்பதால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் இக்கோபம் சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகள் கோபப்பட்டு அடிக்கடி பிற குழந்தைகளை அடித்து விடுவதால் பிரச்சனைகளும் அதிகம்.

பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் விதங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதைச் சரியாக கற்றுக் கொடுக்காத போது தான் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன.

ஒரு வீட்டில் செல்லப் பிள்ளையாக ஒரு குழந்தை ஒன்று வளரலாம். அவ்வீட்டில் வளரும் வேறு சில குழந்தைகளை இக்குழந்தை அடிக்கும் போது சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் உடனடியாக அவ்வாறு பிறரை அடிப்பது தவறு என்பதை தன் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஏன் சண்டை வந்தது, எதற்காக அடிதடி நடந்தது என்பதை பெற்றோர் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனைகள் தோன்றும்போது அடிக்காமல் தன் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகள் அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது போன்றவைகளெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியவை. இவைகள் நடக்கும் போது அவரவர் குழந்தைகளை பெற்றோர் கண்டிப்பதில்லை.

தன் குழந்தை தவறு செய்யும் போதெல்லாம் ‘குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும்’ என்று சாக்குபோக்கு சொல்லும் பெற்றோர்களே அதிகம். அதே பெற்றோர் பிற குழந்தைகள் தவறு செய்து தன் குழந்தைக் பாதிக்கப்படும்போது குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதில்லை என்று பிற குழந்தையின் பெற்றோர்களிடம் ஆதங்கப்படுவர்.

இந்த மனப்பான்மை அறவே கைவிடப்படவேண்டிய ஒன்று. யார் குழந்தை என்ற கேள்வியை விட்டுவிட்டு பொதுவான மனநிலையில் பிரச்சனைகளை அணுகினால் ஒரே வீட்டில் எல்லா குழந்தைகளுமே மகிழ்ச்சியாக வளர முடியும். பெற்றோர்களிடையேயும் சங்கடங்கள் வளராது.

சிறு குழந்தைகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து எப்போது விளையாடினாலும் பெற்றோர் யாராவது ஒருவர் அவர்களின் அருகில் இருந்து மேற்பார்வையிடுவது நல்லது. தீவிரமாக கண்காணித்து வரும்போது எந்த குழந்தையாவது கோபம் கொண்டு வெறிச்செயல்களில் ஈடுபட்டாலும் துவக்கத்திலேயே அதனை தடுத்துவிட வேண்டும்.

தொடர்ந்து பிரச்சனைகள் இன்றி விளையாட ஏதுவான சூழ்நிலையை உருவாக்க பெற்றோர் உதவ வேண்டும். சிறுவயதில் இவ்வாறு விளையாட பழக்கி விட்டால் பின்னர் பெரியவர்களானதும் நல்ல நட்புடன் மற்றவர்களுடன் இருக்கும் குணம் குழந்தையின் ஆளுமையில் ஊறிப்போய்விடும்.

உங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பியின் குழந்தைகள் உங்கள் குழந்தைகளை அடித்து விளையாடுகிறார்கள் என்றால் அதைக் கண்டு மன எரிச்சல் அடைய வேண்டாம். நேரடியாக அவர்களின் குழந்தைக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் உரிமையும், அதையும் மீறி தவறு செய்யும் போது கண்டிக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு.

நம் குழந்தை என்ற பாசத்தின் போர்வையில் குழந்தைகளின் ஆளுமையை அழிப்பது பெற்றோர் தான். நல்ல குழந்தைகளை உருவாக்குவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால் வருங்கால மனங்கள் வளமானதாக இருக்கும்.

தவறான வழிமுறைகளை கடைபிடித்து வன்முறைக் குழந்தைகளை உருவாக்காதீர்.