Home வீடியோ குழந்தைகள் ஒரு மொழியை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்?

குழந்தைகள் ஒரு மொழியை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்?

27

‘எந்த ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதும் உள்ளார்ந்த செயலாகும். அதாவது, ஒருவரது ஆர்வம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு மொழியைக்கற்றுக்கொள்வது அவசியமாகிறது’ என்கிறார் அவ்ரம் நோம் சோம்சுக்கி என்ற அமெரிக்க மொழியில் அறிஞர். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து தன்னைச்சுற்றி பேசப்படும் மொழியை கூர்ந்து கவனிக்கிறது. மேலும் வார்த்தைகளையும் கோர்த்து வாக்கியங்களாக மாற்றி பேசும் திறனை குழந்தைகள் இயல்பாகவே பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு மொழியை கற்றுக்கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் வளரும்போது அதை தாங்களாகவே கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள், அவர்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்ன மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அந்த மொழியை கற்றுக்கொள்வதில் எந்த வயது வித்தியாசமும் இருப்பதில்லை. எல்லாக்குழந்தைகளும் ஒரே வயதில் தான் தங்களது முதல் வார்த்தையை பேசவும், சொற்களை சேர்த்து வாக்கியங்களாக பேசவும் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் மொழியியல் வல்லுனர் நோம் சோம்சுக்கி.

அதேநேரத்தில் இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறார் பி.எப். ஸ்கின்னர் என்ற மற்றொரு மொழியியல் அறிஞர். ஒரு குழந்தை தனது அனுபவம், தனக்கு அளிக்கப்படும் பயிற்சி, தனக்கு அளிக்கப்படும் வெகுமதி, மற்றும் தண்டனை போன்றவற்றில் இருந்து மொழிகளை கற்றுக்கொள்கிறது என்று குறிப்பிடுகிறார் ஸ்கின்னர். இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

அதாவது, ஒரு அறையில் நாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு தாய் தன் குழந்தையிடம் இது நாய் என்று கூறுகிறார். இதை அந்தக் குழந்தை நன்கு கவனித்துக்கொள்கிறது. பின்னர் அந்த தாய் இது என்ன? என்று நாயை சுட்டிக்காட்டி கேட்கும்போது, அந்தக்குழந்தை நாய் என்று சரியாக பதில் அளித்தால், அதை பாராட்டி அந்த தாய் ஒரு இனிப்பு பரிசளிக்கிறார். அப்போது அந்தக்குழந்தையின் மனதில், இது ஒரு நாய், இதன் பெயரை சரியாக சொன்னால் தனக்கு இனிப்பு கிடைக்கும் என்ற உணர்ந்துகொள்கிறது.

எனவே அடுத்த முறை நாயை பார்த்ததும் அந்தக் குழந்தை நாய் என்று சரியாக பேசுகிறது. இங்கே பாராட்டு என்பது இனிப்பாக மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு அன்பான புன்னகை, ‘ஹை நீ சரியாகச் சொல்லி விட்டாய்’ என்று ஒரு பாராட்டு போன்றவற்றின் மூலமும் குழந்தையை உற்சாகப்படுத்தலாம். இவ்வாறாகத்தான் குழந்தைகள் ஒவ்வொரு சொல்லாக கற்றுக்கொள்ளத்தொடங்குகிறது.

இதன் அடிப்படையில், வீட்டில் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஒரு மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் பிழையாக எதையும் உச்சரித்தால் அதையும் திருத்துகிறார்கள். மேலும் அவர்கள் சரியாகச்செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பரிசளித்து, பாராட்டி ஊக்கப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் சிறிய தண்டனைகள் மூலமும் அவர்களது தவறுகளை திருத்துகிறார்கள்.

ஒரு மொழியைக்கற்றுக்கொள்ள எந்த வயது ஏற்றது?

ஒருவர் ஒரு மொழியை பேசுவதற்கு கற்றுக்கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. எந்த வயதிலும் யாராலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் ஒரு மொழியை புதிதாக கற்றுக்கொள்ள வயது ஒரு தடையாக இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள். 5 வயதிற்குள் ஒரு மொழியை கற்றுக்கொள்வது மிக எளிது, அது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.