Home குழந்தை நலம் குழந்தைகள் எப்போது எதற்காக அழுகிறார்கள் என்று தெரியுமா!

குழந்தைகள் எப்போது எதற்காக அழுகிறார்கள் என்று தெரியுமா!

34

அழுத குழந்தை தான் பால் குடிக்கும் என்பார்கள்!
அது உண்மை தான். இரண்டு வயது வரை, குழந்தைகள் அழுவதன் மூலம்தான் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். அழுவதன் மூலம் குழந்தை அதிக ஆக்சிஜனை உள்ளிழுக்கும், உடலின் எல்லா தசைகளும் பயிற்சி பெறும், இது குழந்தையின் உடல் நல்ல முறையில் வளர்ச்சியடைய உதவும். வளரும் குழந்தை தகவல் பரிமாறக்கூடிய ஒரே வழி அழுகை மட்டுமே, சொற்களைப் பேசும் திறன் பெறும் வரை, அழுகை மூலமே குழந்தை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
இங்கு நாம் பிறந்த குழந்தை முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் அழுகை தொடர்பான தேவைகளைப் பற்றிப் பார்ப்போம்.

அழுவது என்பது கவனத்தைப் பெறுவதற்கான வழி (Crying, a call for attention)
ஒரு குழந்தை அதன் பல்வேறு தேவைகளுக்காக தாயின் கவனத்தைப் பெறுவதற்காக அழுகிறது. அடிப்படையில், ஒரு குழந்தை அழுதால், அதற்கு தாயிடமிருந்து ஏதோ தேவைப்படுகிறது என்று பொருள், அல்லது பின்வரும் சில காரணங்களால் குழந்தைக்கு ஏதோ அசௌகரியம் உள்ளது என்று பொருள்:
பசி
உடலில் ஏதேனும் வலியின் காரணமாக, அசௌகரியமாக உணரலாம்
ஏதேனும் பொருள் குழந்தையின் உடலில் அசௌகரியம் அல்லது வலியை ஏற்படுத்தலாம், உதாரணத்திற்கு ஈரமான நாப்பி, அல்லது ஆபரணங்கள் போன்றவை
தூக்கத்திற்காகப் போராடலாம்
பசியில் அழலாம் (A call for food)
வளரும் குழந்தையின் அடிப்படையான மூன்று தேவைகளில் குழந்தையின் வளர்ச்சிக்கான உணவும் ஒன்று. தாய்க்கு ஏற்கனவே குழந்தைகளை வளர்க்கும் அனுபவம் இருந்திருந்தால், குழந்தை சத்தமாக அழும் முன்பே, குழந்தையின் தேவை என்ன என்பதை குழந்தையின் அழுகை மற்றும் சில அடையாளங்களை வைத்து அவரால் கண்டுபிடிக்க முடியும். குழந்தை அழும்போது, குழந்தையை தாய் தனக்கு நெருக்கமாக தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் குழந்தை தனது தலையை தாயின் கைகளை நோக்கித் திருப்பினால், குழந்தைக்குப் பசிக்கிறது என்று பொருள். குழந்தை தனது விரலை வாயில் வைப்பதும், இதையே குறிக்கும். இந்த சைகைகள் தாய்க்குப் புரியாவிட்டால், குழந்தை இன்னும் சத்தமாக அழத் தொடங்கும். குழந்தைக்கு உணவளித்ததும் குழந்தை அழுகையை நிறுத்தி அமைதியாகிவிடும். இதை வைத்து, குழந்தை அழுததற்கு பசி தான் காரணம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

ஏதோ அசௌகரியமாக உள்ளது என்பதைத் தெரிவிக்க அழலாம் (Help! It is hurting)
குழந்தைக்கு ஏதேனும் வலியோ, அசௌகரியமோ இருந்தால், குழந்தையால் அதனை வார்த்தையால் கூற முடியாது, அழுவதன் மூலம் அல்லது இன்னும் சத்தமாக அழுவதன் மூலமே தெரிவிக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தை திடீரென்று அழும், தொடர்ந்து அழும். குழந்தை இப்படி அழ பல்வேறு காரணங்கள் இருக்கலாம், இதுதான் காரணமாக இருக்கும் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு மருந்து எதுவும் கொடுக்கக்கூடாது. குழந்தைக்கு மருந்து எதுவும் தேவையில்லை, மேலும் கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான மருந்துகள் மயக்கத்தை வர வழைப்பவையே, அதாவது இந்த மருந்துகளால் குழந்தை நன்கு தூங்கும், அவ்வளவே. குழந்தைக்கு உணவு செரிக்காமல் போவதாலும் வலி இருக்கலாம், வயிறு வலியாக இருக்கலாம் அல்லது காத்து, மூக்கு அல்லது தொண்டையில் ஏதேனும் நோய்த்தொற்று இருக்கலாம். பூச்சி ஏதேனும் கடித்திருந்தாலும் அழலாம். குழந்தையின் உடலில் வெப்பம், தோல் சிவந்து போதல் அல்லது வீக்கம் போன்ற ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்று கவனமாகப் பார்த்துக் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உடலில் எந்தப் பகுதியில் குழந்தைக்கு பிரச்சனை அல்லது வலி உள்ளது என்று கண்டறியலாம்.
குழந்தையின் உடலில் ஏதேனும் பொருள் அழுத்தி, வலியை ஏற்படுத்தலாம், இதனாலும் குழந்தை தொடர்ந்து அழலாம். அப்படி ஏதேனும் பொருள் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படுத்துகிறதா எனப்பார்த்து, அதை அகற்றவும். அது மெத்தையில் இருக்கும் ஏதேனும் சிறிய பொருளால் இருக்கலாம், அல்லது பொம்மைகளில் இருக்கும் சிறு பொருள்கள் ஏதேனும் குத்தலாம், அழுத்தலாம்.

ஈரமான, அழுக்கடைந்த நாப்பியை அணிந்துகொண்டு நீண்ட நேரம் இருந்தால் எந்தக் குழந்தையும் அழவே செய்யும்! சில குழந்தைகள் நாப்பியை உடனடியாக மாற்றாவிட்டால் அழுது கூப்பாடு போடும்! சில குழந்தைகள் சிறிது நேரம் அமைதியாகக் காத்திருக்கும். நாம் அவர்களி­­­­­­­­ன் பொறுமையை சோதிக்கக்கூடாது!
தாயின் அரவணைப்புக்காக! (Hold me close)
குழந்தை களைத்திருக்கிறது தூங்கிவிடும் என்­­­று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவ்வளவு சீக்கிரம் குழந்தைகள் தூங்கிவிடமாட்டார்கள்! குழந்தைக்கு எரிச்சலாக இருக்கும், உடனே அழத்தொடங்கும்! இந்நிலையில் குழந்தைக்கு உங்கள் அரவணைப்பு தேவைப்படும், குழந்தையை உங்களுடன் நெருக்கமாக அணைத்துக்கொள்ள வேண்டும். சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்ற உணர்வு வந்த பிறகே குழந்தைகள் தூங்குவார்கள்.
சில சமயம் ஏன் அழுகிறது என்று யாருக்கும் தெரியாது! (God only knows why the baby cries)
குழந்தைகள் அழ எல்லா நேரமும் ஏதேனும் காரணம் இருக்கும் என்று கூற முடியாது. சில சமயம், எந்த காரணமும் இல்லாமலே குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கலாம். குழந்தைக்கு வேறு என்ன தெரியும்! அழத்தான் தெரியும்!
குழந்தையின் அழுகை எப்போதும் ஒரே மாதிரி இல்லை என்பதை விரைவில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள், ஒவ்வொரு முறை ஒவ்வொரு தொனியில் இருக்கும், எவ்வளவு நேரம் அழுதுகொண்டிருக்கிறது என்பதும் மாறும். சிறிது கால அனுபவத்தில், குழந்தையின் பல்வேறு வகையான அழுகைக்கான காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். குழந்தை அழுவது உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக என்றும், உங்களுடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவே அழுகிறது என்பதையும் புரிந்துகொள்வீர்கள், அது ஓர் அற்புதமான உணர்வும் கூட!