Home குழந்தை நலம் குழந்தைகள் எடை குறைவாக அதிகமாக பிறப்பது ஏன்?

குழந்தைகள் எடை குறைவாக அதிகமாக பிறப்பது ஏன்?

21

சிசேரியனா? சுகப்பிரசவமா?ஆணா? பெண்ணா? இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, ‘குழந்தையோட வெயிட் என்ன?’ என்ற கேள்வியையும் எதிர்கொள்வார்கள் அம்மாக்கள். முதல் இரண்டு கேள்விகளைப் போலவே மூன்றாவதும் அத்தனை முக்கியமானது! சராசரிக்கும் குறைவான எடை… சராசரியைவிட அதிகமான எடை… இவை இரண்டுமே பிரச்னைக்குரியவைதான். குறைவான எடையுடன் குழந்தைகள் பிறக்கும்போது கவலை கொள்கிற பலரும், சராசரியைவிட அதிக எடையுடன் பிறக்கும்போது அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. ‘குண்டுக் குழந்தைதான் ஆரோக்கியமானது’ எனக் காலங்காலமாக மக்கள் மனதில் ஊறிப் போன தவறான கருத்தே காரணம்!

சமீபத்தில் சென்னையில் 5.5 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்து, தமிழகத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை என செய்திகளில் இடம் பிடித்தது. ஆரோக்கியமான குழந்தை எத்தனை கிலோ எடை இருக்க வேண்டும்? சராசரிக்கும் குறைவான அல்லது அதிகமான எடையுடன் குழந்தைகள் பிறக்காமல் இருக்க, கர்ப்ப காலத்தில் தாய் செய்ய வேண்டியது என்ன? மகப்பேறு மருத்துவர் ப்ரியா செல்வராஜிடம் பேசினோம்.

‘‘கர்ப்ப காலத்தில் தாயின் உடல்நிலையில் பிரச்னைகள் எதுவும் இருந்தால் அது பிறக்கும் குழந்தையின் எடையில் பிரதிபலிக்கும். குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்காமல் இருக்க குழந்தைப்பேற்றுக்கு முன் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். தைராய்டு, ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருப்பின், முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பின் அதை நிவர்த்தி செய்து கொள்வதும் அவசியம். தாயின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்த அளவு இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் குழந்தை, குறைந்த எடையுடன் பிறக்கும்.

ஃபோலிக் அமிலம் என அழைக்கப்படும் ‘வைட்டமின் பி’ மாத்திரைகளை குழந்தைப்பேற்றுக்கு முன் 4 மாதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைத் தண்டுவடக் கோளாறுகள் எதுவும் இல்லாமல் குழந்தைகள் பிறக்க இது அவசியம். கர்ப்ப காலத்தில் தாய்க்கு உணவில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி12, தேவையான கொழுப்பு அமிலம் போன்றவை அவசியம். கர்ப்பிணிக்கு சத்துக் குறைவு இருப்பின், ரத்த நாளங்களில் சத்துத் திரவங்களை செலுத்தியும் சரி செய்யலாம். தாயின் எடை, ரத்த அழுத்த நிலை ஆகியவற்றை சரிபார்ப்பதுடன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அறிந்து சரி செய்து கொள்ள முடியும்.

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்ணின் பி.எம்.ஐ. எனப்படும் உடல் சுற்றளவு மற்றும் பருமனை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ற அளவில் உணவு கொடுப்பது அவசியம். பச்சைக் காய்கறிகள், சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ரெட் கரோட்டின் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். கேரட், தக்காளி, குடை மிளகாய், ஆப்பிள் போன்றவை நல்லது. பிராக்கோலி மற்றும் பசலைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. புரதம் அதிகம் உள்ள பால், மீன், முட்டை போன்ற உணவுகளும் எடுத்துக் கொள்ளலாம். பதப்படுத்தப் பட்ட உணவுகள், ஜங்க் உணவு வகைகள், கேன்களில் அடைக்கப்பட்ட பானங்கள் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

பிரசவத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் பருமன் அதிகமுள்ள பெண்கள் பிரசவத்தில் ஏராளமான பிரச்னை களை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு எடை அதிகமுள்ள குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். இவர்களால் கர்ப்ப காலத்தில் எந்த வேலையும் செய்ய இயலாமல் போவதும், அதிக எடை கொண்ட குழந்தை பிறக்க காரணமாக அமைகிறது. அதிக எடை கொண்ட குழந்தை பிறப்பதை ‘மேக்ரோசொமியா’ என்கிறோம். எடை அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க சிசேரியன் தேவைப்படலாம். பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். அதிக எடையுள்ள குழந்தை பிறந்தால், பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உண்டாகலாம். கர்ப்பத்துக்கு முன்பே நீரிழிவையும் எடையையும் கட்டுக்குள் வைத்திருந்தால் இந்தப் பிரச்னை வராமல் தப்பிக்க முடியும்.

எது சரியான எடை?

பிறக்கும் குழந்தையின் சராசரி எடை 2.5 கிலோ முதல் 2.8 கிலோ வரை இருக்க வேண்டும். 2.5 கிலோவுக்கு குறைவாக இருந்தால் குறை எடை உடைய குழந்தைகள். இந்தியாவில் 20 சதவிகிதம் குழந்தைகள் 2.1 கிலோ முதல் 2.2 கிலோ வரை மட்டுமே பிறக்கின்றன. 4 கிலோவுக்கு மேல் இருந்தால் அதிக எடையுள்ள குழந்தைகள். தாய்வழி பருமனால்தான் பெரும்பாலும் அதிக எடையுடன் பிறக்கிறார்கள்.