Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகள் முதல் 3, 4 மாதங்களில் உணவில் கவனம் செலுத்துங்க

கர்ப்பிணிகள் முதல் 3, 4 மாதங்களில் உணவில் கவனம் செலுத்துங்க

18

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சமயங்களில்பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் – மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

நீர்ச்சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும்.

இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது.

நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது.

உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!