Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று சிக்கலை ஏற்படுத்துமா?

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று சிக்கலை ஏற்படுத்துமா?

48

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, சிறுநீர் போகும்போது எரிச்சல், கடுப்பு, அரிப்பு, அடிவயிற்றில் வலி, முதுகில் விலாபகுதிகளில் வலி ஏற்படுவது, கஞ்சி அல்லது பால்போல் சிறுநீர் போவது, சிறுநீரில் ரத்தம் கலந்துபோவது, சிறுநீர் துர்நாற்றம் எடுப்பது, குளிர் காய்ச்சல் வருவது, வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படுவது ஆகியவை சிறுநீர்த் தொற்றுக்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.

கர்ப்ப காலத்தில், சிறுநீர் வெளியேறும் பகுதியை சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும், நீரிழிவு நோய் இருந்தாலும் சிறுநீர்த் தொற்று ஏற்படும். வீட்டில் கழிப்பறை வசதியும் தண்ணீர் வசதியும் இல்லாத ஏழை கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவார்கள். அப்போது அவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட வழி கிடைக்கிறது. காரணம், இந்த சந்தர்ப்பங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகமாக சேர்ந்துவிடுவதால், அங்கே பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகி, நோயைக் கொண்டு வரும்.

இது தவிர, கருத்தரித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ந்துகொண்டே போவதால், கருப்பை அதற்கேற்றாற் போல் தன்னை விரித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அப்போது அருகில் உள்ள சிறுநீர்ப்பையின் இடத்தையும் கொஞ்சம் அபகரித்துக் கொள்கிறது. குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை உள்நோக்கி அழுத்துவதால், சிறுநீர்ப்பையில் சிறிய வளைவு ஏற்படுகிறது. அந்த வளைவில் சிறுநீர் தேங்குகிறது. தேங்கும் சிறுநீரில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ள காரணத்தால், கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் கர்ப்பிணியின் உடலில் பல ஹார்மோன்கள் மாற்றம் அடைகின்றன. இவற்றின் விளைவால், குழந்தை பிறந்து வெளியேறும் கர்ப்ப வாயில் உள்ள சருமம் விரிவடையும். அந்த இடத்தில் சரும வறட்சி இருந்தால் வெடிப்புகள் உண்டாகும். அப்போது அந்த வெடிப்புகளிலும் பாக்டீரியாக்கள் புகுந்துகொண்டு சிறுநீர்த் தொற்றை ஏற்படுத்தும்.

சிறுநீர்ப்பையில் மட்டும் கிருமித்தொற்று இருந்தால் அதை சிறுநீர்ப்பை அழற்சி(Cystitis) என்றும், சிறுநீரகத்திலும் தொற்று காணப்பட்டால், அதை சிறுநீரகச்சீழ் அழற்சி(Pyelonephritis) என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். புதிதாகத் திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றுக்கு தேனிலவுச் சிறுநீர்ப்பை அழற்சி(Honeymoon cystitis) என்ற பெயரும் உண்டு.

கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையில் மட்டும் நோய்த்தொற்று ஏற்படுமானால், அது கருவில் வளரும் குழந்தையை பாதிக்காது. கர்ப்பிணியின் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது என்றால், சிலருக்கு குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பிரசவம் ஆகலாம். சிறுநீரைப் பரிசோதிக்காமல் தோராயமாக ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுக்கும்போது நோய் முழுவதும் கட்டுப்படாமல், கர்ப்பிணியின் பொது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

இது பிரசவ நேரத்தில் தாய் சேய் இருவருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். முதல் டிரைமஸ்டரில் இது ஏற்படுமானால், கருச்சிதைவு ஏற்படவும் வழி உண்டு. மேலும், கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர்த்தொற்று ஏற்படும்போது, கர்ப்பிணிக்கு ரத்தசோகை நோய் உண்டாகும். இதுவும் பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.