Home ஜல்சா ஒலிம்பிக் நகரில் நடந்தது இது ‘வேறு’ விளையாட்டு!

ஒலிம்பிக் நகரில் நடந்தது இது ‘வேறு’ விளையாட்டு!

31

Olympic-cityOtherSportsநடந்து முடிந்திருக்கிற ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டி, ஸிகா வைரஸ், சுகாதாரச் சீர்குலைவு, பிக்பாக்கெட் தொந்தரவு போன்ற அச்சங்களைத் தாண்டி சில உச்சங்களையும் தொட்டிருக்கிறது.

அந்த உச்சங்களில் ஒன்று, விளையாட்டு வீரர்– வீராங்கனைகள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள்.

இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே அதிகபட்ச ஆணுறை ஏற்பாடு ரியோவில்தான். ஒரு ‘சராசரி’ கணக்குப் பார்த்தால், ஒரு வீரருக்கு 42 ஆணுறைகள்.

ஒரு மைக்ரோ செகண்டில் தவறிப் போகிற பதக்கத்துக்காக உயிரைக் கொடுத்து உழைக்கிற ஒலிம்பிக்கில், ‘இதுக்கெல்லாம்’ நேரம் இருக்குமா என்று தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் போட்டிகள் ஒருபக்கம் களைகட்டுகின்றன என்றால், மறுபக்கம் பாலியல் லீலைகளும் பலே ஜோராகத்தான் நடக்கின்றன.

‘இதையெல்லாம் ஒரு ஜாலியான விளையாட்டாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் நடப்பதை விளையாட்டு கிராமத்திலேயே விட்டுவிட வேண்டும்’ என்ற மனோபாவம் பலருக்கும் இருப்பதால், செக்ஸ் சாகசங்களுக்குக் குறைவில்லாமல் போய் விட்டது.

இதற்கு முன் ஆணுறை விஷயத்தில் அசத்தியது, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிதான். இங்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள் தயாராக இருக்க, வீரர், வீராங்கனைகள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.

எவ்வளவு ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றன என்ற முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில்தான். அப்போதைய கணக்கான 8500, இன்றைய எண்ணிக்கைகளுடன் ஒப்பிடும்போது வெகு சொற்பம்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இன்னொரு சுவாரசியம், ஆஸ்திரேலியர்கள் ‘ஸிகா வைரஸ் தாக்காத’ ஆணுறைகளை கொண்டுவந்தார்களாம்.

ஆக, ஒலிம்பிக் கிராமத்தில் ‘மஜா’வுக்குக் குறையில்லை என்று சிலர் கண்ணடித்தாலும், வேறு சிலர், அதெல்லாம் அவ்வளவு எளிதில்லை என்கிறார்கள்.

இதுதொடர்பாகக் கூறும் ஒரு வீரர், ‘‘ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் தங்கியாக வேண்டும். அது உசேன் போல்ட்டாக இருந்தாலும் சரி, மைக்கேல் பெல்ப்ஸாக இருந்தாலும் சரி. இன்னொரு வீரர் உடன் தங்குவார். இந்நிலையில், ஜோடியை வளைத்துக்கொள்வதும், ‘அதற்கு’ அமைத்துக்கொள்வதும் எளிதான விஷயமில்லை. ஒலிம்பிக் கிராமத்தில் நிறைய ஆணுறைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் ‘பயன்படுத்தப்படுகின்றன’ என்று உறுதியாய் கூற முடியாது’’ என்கிறார்.

ஒரு வீரருக்கு இவ்வளவு ஆணுறைகள் என்று பிரித்துக்கொடுக்கிறார்களா என்ன? இதுபற்றி, சுவிட்சர்லாந்து நீச்சல் வீரரான அலெக்சாண்டர் ஹால்டுமேன் கூறுகிறார்…

‘‘ஒரு வீரருக்கு இத்தனை ஆணுறைகள் என்ற கணக்கில் ஒதுக்கீடா என்று எல்லோரும் வியப்பாகப் பேசுகிறார்கள். ஆனால் வீரர்கள் எவருக்கும் நேரடியாக கையில் ஆணுறைகள் கொடுக்கப்படுவதில்லை. ஆணுறை டெலிவரி எந்திரத்தில் நாமாகத்தான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருவர் எவ்வளவு விருப்பப்படுகிறாரோ அவ்வளவு ஆணுறைகளை எடுத்துக்கொள்ளலாம்’’ என்கிறார்.

ஆனால், ஆணுறைகளைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்கிறது இன்னொரு தரப்பு. என்னதான் ஆங்காங்கே ஆணுறை டெலிவரி எந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும்போது சத்தம் எழும், நாம் ஆணுறை எடுப்பது பிறரின் கவனத்தை ஈர்க்கும் என்கிறார்கள் இவர்கள்.

‘‘ஆம்… அது உண்மைதான். ஒருமுறை நான் ஆணுறை எந்திரத்தை தேடிச் சென்று, அங்கே இன்னொருவர் நிற்பதைக் கண்டு திரும்பிவந்து விட்டேன்’’ என்று தனது அனுபவத்தைச் சொல்கிறார், நியூசிலாந்து குதிரையேற்ற வீரர் கிளார்க் ஜான்ஸ்டன்.

இவர்களைப் போன்றவர்களுக்காகத்தான், ஆணுறை பைகளோடு சிலரை உலா வர விட்டிருந்தார்கள்.

‘‘ஒலிம்பிக்குக்கு என்று ஒரு தாரக மந்திரம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதைப்போல விளையாட்டு கிராமத்துக்கு என்றும் ஒரு தாரக மந்திரம் இருக்கிறது. அதாவது, விளையாட்டு கிராமத்தில் நடப்பதை விளையாட்டு கிராமத்திலேயே மறந்துவிட வேண்டும் என்பதுதான் அது’’ என்கிறார், பார்சிலோனா ஒலிம்பிக்கில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற நீச்சல் வீராங் கனை சம்மர் சாண்டர்ஸ்.

இவர் இப்படி பொத்தாம்பொதுவாக ஒரு போர்வையைப் போட்டு மூடிவிட்டாலும், சில ஒலிம்பிக் வீரர்கள் வெளிப்படையாக வாய்திறக்கத் தயங்கவில்லை.

உதாரணத்துக்கு, அமெரிக்க துப்பாக்கி சுடுதல் வீரர் ஜோஷ் லகட்டோஸ் தனது அனுபவத்தைச் சொல்கிறார்…

‘‘2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் எனது போட்டிகள் முடிந்ததுமே விளையாட்டு கிராம அறையை காலி செய்துவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப எனக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நான் உடனே புறப்படாமல், அப்படியும் இப்படியுமாக சில நாட்களை ஓட்டினேன். அப்போது ‘அவசரமாக’ அறை தேவைப்பட்ட ஜோடிகளுக்கு எனது அறையை ஒதுக்கிக்கொடுத்தேன். அந்த விஷயம் பரவ, பல இணைகள் எனது அறைக்குப் படையெடுத்துவிட்டார்கள். அந்த ஜோடிகள் வருவதும் போவதுமாக இருக்க, நான் ஒலிம்பிக் கிராமத்திலேயே ஏதோ ஒரு விபசார விடுதி நடத்துவதைப் போலிருந்தது’’ என்று சிரிப்பை அடக்குகிறார்.

கவர்ச்சியும் கலக்கலுமாய் ஒலிம்பிக் விளையாட்டுக் கிராமமே ஒரு மாதிரி ஜிலுஜிலுவென்று இருக்கும் என்கிறார், அமெரிக்க வாட்டர் போலோ வீரர் டோனி அஸ்வேடோ.

‘‘எல்லோரும் பரபரப்பாய் அடுத்தடுத்த நபர்களை சந்தித்துப் பேசுவார்கள். யாரையாவது ‘வளைக்க’ முடியுமா என்று அலைவார்கள்’’ என்று உண்மையை உடைக்கிறார் இவர்.

‘‘வாழ்வில் ஒரே ஒருமுறை கிடைக்கும் அனுபவம் என்கிற வகையில் பெரும்பாலானவர்கள் ஒரு மிதப்பில், எது நடந்தாலும் தப்பில்லை என்ற தெம்பில்தான் இருப்பார்கள். இங்கிருந்து புறப்படும்போது ஒரு புதிய அனுபவத்துடன், மறக்க முடியாத அனுபவத்துடன் புறப்பட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அது ஆடுகளமாக இருக்கலாம், கொண்டாட்டமாக இருக்கலாம், செக்ஸ் லீலைகளாக இருக்கலாம். புல்வெளியில், கட்டிடங்களுக்கு இடையில் என்று திறந்தவெளியில் எல்லாம் ‘உறவு’ வைத்துக்கொண்டவர்களை நான் கண்டிருக்கிறேன்’’ –இது அமெரிக்க கால்பந்து வீராங்கனை ஹோப் சோலோ கூறும் தகவல்.

மற்றொரு அமெரிக்கரான கேரி சீன்பெர்க், ‘‘ஒலிம்பிக் ஏரியாவே ஒரு மாயாஜால லோகம் போலத்தான். இங்கு, ஒரே நாளில் தங்கம் வென்று உலகத்தின் உச்சிக்கும் போகலாம், அதிர்ஷ்டமிருந்தால் அழகான ஒரு வீரர், வீராங்கனையுடன் படுக்கையையும் பகிர்ந்துகொள்ளலாம்’’ என்று சிலிர்க்கிறார்.

ஆக, ஒலிம்பிக்கில் விளக்குகளின் வெள்ளமான வெளிச்சத்தில், காமிராக்களின் கவனிப்பில் பல சாதனைகள் அரங்கேறின என்றால், இருட்டிலும் ‘சில சாகசங்கள்’ நடக்கத்தான் செய்திருக்கின்றன!