Home குழந்தை நலம் ஒரு வயது முதல் ஒன்றரை வயதுவரை குழந்தையின் செயற்பாடுகள்

ஒரு வயது முதல் ஒன்றரை வயதுவரை குழந்தையின் செயற்பாடுகள்

11

நிற்க ஆரம்பித்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தது போலத்தான் இருக்கும். சட்டென்று ஓட ஆரம்பித்துவிடும். அவர்களது சுறுசுறுப்புக்கு நாம் ஈடுகொடுக்கக் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை:

1. பொம்மைகளைக் குழிவான பாத்திரத்தில் போட்டு எடுத்து விளையாடுவதன் மூலம் ‘உள்ளே’, ‘வெளியே’, ‘மேல்’, ‘கீழ்’ போன்ற விஷயங்களைக் குழந்தை கற்றுக்கொள்ளத் தொடங்கும்.

2. நாம் செய்யும் எல்லா விஷயங்களையும் குழந்தை அப்படியே பின்பற்றும். அந்தச் செயல்களில் தேர்ச்சி பெற, அதற்குத் தேவை மேலும் பல வாய்ப்புகள்தான்.

3. இந்தப் பருவத்துக் குழந்தைகள் நடப்பது, ஓடுவது, உயரமாக ஏறுவது என எப்போதும் சுறுசுறுப் பாக இருப்பார்கள். அவர்களைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சுய உணர்வு: குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களும் புதிதாகத் தோன்றும். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் எழும். ஒன்றின் விளைவால் ஏற்படும் விபரீதம் புரியாது. ஆனால், குழந்தை செய்வதை யாராவது தடுத்தால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும்.

அப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருளைக் கொடுத்தோ, வேறொரு விஷயத்தைக் காட்டியோ திசைதிருப்ப வேண்டும்.

உடல்: கையில் பேனா, பென்சில் என எது கிடைத்தாலும் உடனே எல்லாவற்றிலும் கிறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அவசரப்பட்டு அதைத் தடுத்துவிடாதீர்கள். இப்படித்தான் விரல்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது ஒரு குழந்தை.

உறவுகள்: தண்ணீரை எடுத்துத் தரையில் ஊற்றுவது, உணவைச் சிதற அடிப்பது எனப் பல குறும்புத்தனங்களைக் குழந்தைகள் செய்வார்கள். இவற்றைக் கண்டு எரிச்சல் அடையாதீர்கள். இப்படித்தான் அவர்களின் கற்றல் திறன் வளரும்.

புரிதல்: வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் பில்டிங் பிளாக்குளை வைத்து விளையாடக் குழந்தைக்கு ரொம்பவும் பிடிக்கும். பிற்காலத்தின் கணிதம் பயிலவும், வாசிப்பு திறனை மேம்படுத்தவும் இவை உதவும்.

கருத்துப் பரிமாற்றம்: குழந்தை உங்களோடு இணைந்து புத்தகம் வாசிக்கும்போது, சொற்களைக் கற்றுக்கொண்டு திரும்ப உச்சரிக்க முயலும்.