Home சூடான செய்திகள் ஐபிஎல் 5: கேத்தி பெர்ரியின் தேன் குரலும், பிரபுதேவாவின் மின்னல் நடனமும்..!

ஐபிஎல் 5: கேத்தி பெர்ரியின் தேன் குரலும், பிரபுதேவாவின் மின்னல் நடனமும்..!

15

சென்னை: இதைவிட பெரிதாக எந்த ‘விருந்தும்’ இருக்கப் போவதில்லை என்று சொல்லலாம். காரணம், உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான கேத்தி பெர்ரியின் வசீகரிக்கும் குரலுடன், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் மின்னல் நடனமும் இணைந்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் பிய்த்துப் போடப் போகிறது நாளை…

ஐந்தாவது ஐபிஎல் தொடர் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னையில் படு பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. வழக்கம் போல சினிமாக்காரர்கள் கூட்டம்தான் அதிகமாக தென்படுகிறது. நடிகர், நடிகையரின் ஹல்லா புல்லா அசத்தல் நடனங்களும், பாடல்களும் பட்டையைக் கிளப்பத் தயாராகி வருகினறன.

இதில் ஹைலைட் என்னென்னா, ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான கேத்தி பெர்ரி பாடப் போகிறார் என்பதுதான். அவருடன் நம்ம ஊர் பிரபுதேவாவும் சில்லுன்னு ஒரு டான்ஸ் போடப் போகிறார் என்பது கூடுதல் குதூகலம். தனியாகவும் 2 பாடல்களுக்கு சோலோ டான்ஸ் ஆடுவார் பிரபுதேவா என்பது எக்ஸ்டிரா போனஸ்.

ஐபிஎல் தொடக்க விழாவுக்காகவே விசேஷமாக கலிபோர்னியாவிலிருந்து பறந்து வருகிறார் கேத்தி பெர்ரி. சர்வதேச பாடகி ஒருவர் சென்னையில் பாட்டுப் பாடப் போவது இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதனால் கேத்தியைத் தரிசிக்கவும், அவரது குரலை ரசிக்கவும் ரசிகர்கள் நிச்சயம் முண்டியடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், கேத்தி பெர்ரியின் பங்கேற்பை காண ஆவலுடன் காத்துள்ளோம். அவரைப் போன்ற ஒரு திறமையான பாடகி மற்றும் நடிகை ஐபிஎல் தொடக்க விழாவுக்கு வருவது என்பது பெரிய விஷயம். சிறப்பானது. வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே குஷியாக உள்ளனர் என்றார்.. சுக்லாவே இப்படி குதூகலமாக சொல்கிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை…

தொடக்க விழா ஏற்பாடுகளைச் செய்துள்ள நிறுவனத்தின் வெங்கட் வர்தன் கூறுகையில், கேத்திக்கு இந்தியாவில் எக்கச்சக்க ரசிகர்கள். தற்போது டுவென்டி 20 ரசிகர்களும் இதில் இணையப் போகிறார்கள். அவரது நரம்பு புடைக்க வைக்கும் பாடல்களையும், நடனத்தையும் காண ரசிகர்களோடு நானும் கூட ஆவலாகவே உள்ளேன் என்றார்.

கேத்தியுடன் நம்ம ஊர் பிரபுதேவா ஒரு டான்ஸுக்கு ஆடுகிறாராம். அதாவது கேத்தி பாட, பிரபுதேவா ஆட… நினைக்கவே ஜில்லுன்னு இருக்குதுல்ல..

இதுதவிர பிரபுதேவா தனியாகவும் 2 பாடல்களுக்கு ஆடப் போகிறாராம். மொத்தத்தில் நாளைய விழாவில் தென்னிந்தியா, வட இந்தியா மற்றும் சர்வதேச வாசனையுடன் மணமணக்கக் காத்திருக்கிறது ஐபிஎல் 5ன் தொடக்கம்.