Home அந்தரங்கம் உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!

உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!

21

தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ’ என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பூக்கள் சொல்லும் காதல்

அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவியின் முகம் புன்னகையில் மலரும்.

காலையில் எழுந்த உடன் காதலை சொல்ல வேண்டுமா? மனைவி படுத்திருந்தால் எழுப்ப வேண்டாம். சுவையாய் ஒரு கோப்பை தேநீரோடு சென்று மனைவியின் நெற்றியில் முத்தமிடுங்கள். அப்புறம் தேநீருக்குப் பரிசாக அன்றைக்கு நாள் முழுவதும் முத்தமழை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

நான் பேச நினைப்பதெல்லாம்

சொல்ல நினைப்பதை வார்த்தைகளால் சொல்வதை விட மனதிற்குப் பிடித்த பாடல்களை ரெக்கார்ட் செய்து மனைவியின் காதுகாளுக்கு மட்டும் கேட்கும் வகையில் செட் செய்து கொடுங்களேன். அந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவார். அன்பால் உணர்த்திய இந்த காதல் ஆயுளுக்கும் மறக்காது.

தேடல் சொல்லும் காதல்

சின்னதாய் விளையாடுங்கள். உங்கள் மனைவிக்கு பிடித்தமான இடங்களில் க்ளுவை எழுதி வையுங்கள். அதிகம் புழங்கும் அஞ்சறைப் பெட்டி, படுக்கை அறை, பீரோ, டிரஸ்சிங் டேபிள் என ஒவ்வொரு இடத்திலும் ஒரு க்ளு இருக்கட்டும். கடைசியில் உங்கள் நேசத்தை உணர்த்தும் காதல் வார்த்தைகளை தலையணைக்குள் ஒளித்து வையுங்கள். நிச்சயம் அவர் கண்டுபிடிக்கும் பட்சத்தில் விலைமதிப்பற்ற பரிசினை கொடுங்களேன். கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. போட்டியில் பங்கேற்றதற்கு ஆறுதல் பரிசாவது அளியுங்கள். அது அன்பினை மிகையாய் உணர்த்தும்.

புன்னகை தரும் பொன்னகை

தங்கம் விற்கும் விலை நகை எங்கே வாங்குவது என்று நினைக்காதீர்கள். பவுன் கணக்கில் இல்லாவிட்டாலும் கிராம் கணக்கில் சின்னதாய் வாங்கி பரிசளிக்கலாம். அதை கண்டதும் உங்கள் மனைவியின் கண்கள் விரியுமே. அதை பார்க்கவேணும் பரிசளித்துப் பாருங்களேன்.

முதல் சந்திப்பின் நினைவுகள்

இருவரும் எங்கே, எப்பொழுது சந்தித்தீர்கள் என்ற நினைவு இருக்கிறதா? அப்படி எனில் அந்த இடத்திற்கு அவரை சர்ப்ரைசாக அழைத்துச் செல்லுங்கள். அதே நேரம், அதே இடம் அந்த சந்திப்பு மீண்டும் நிகழும் போது அந்த இடத்தில் எழும் அற்புத தருணத்தை விவரிக்க வார்த்தை இருக்காது. அப்பொழுது உங்கள் மனைவி பார்ப்பாரே ஒரு காதல் பார்வை அது நூறு வார்த்தைகளுக்கு சமம்.

கடற்கரை மணலில் காதல்

கடற்கரை பகுதிக்கு பிக்னிக் அழைத்துச் செல்லுங்கள் வாக்கிங் செல்லும் போது மனைவியை விட்டு சற்று முன்னதாக நடந்து செல்லுங்கள். கண்களில் படுமாறு காதலை எழுதி பதிவு செய்யுங்கள். அலைகள் அடித்துச் செல்லும் முன் உங்கள் மனைவி பார்த்து விடட்டும். அப்புறம் மனைவியின் மனதில் அலை அலையாய் காதல் பொங்குமே.