Home குழந்தை நலம் உங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா?

உங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா?

43

உங்கள் குழந்தைகள் பதின் பருவத்திலிருந்து பெரியவர்களாக மாறும் அந்தக் காலகட்டத்தில் பலப்பல உடல்ரீதியான மாற்றங்களும் உணர்வுரீதியான மாற்றங்களும் அவர்களுக்கு நடந்தேறும். தங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் சிலவற்றைக் குறித்து அவர்கள் அசௌகரியமாக உணரலாம், அந்தப் பருவத்தில் தான் அவற்றை சமாளிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இந்த வயதில் அவர்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு இருக்கும், அத்துடன் பிறருடனும் தங்களை அதிகமாக ஒப்பிட்டுக்கொள்வார்கள். அவர்கள் எதிர்பார்க்கும்படி அவர்களின் தோற்றம் இல்லை என்று அவர்கள் நினைத்தால், தங்களைப் பற்றிய சுய அபிப்ராயம் குறைந்துபோகும். இந்தக் காலகட்டத்தில், அவர்களின் சுய மதிப்பீடு நன்றாக இருக்க வேண்டுமானால் அவர்களின் உடலைப் பற்றிய அவர்களது அபிப்ராயம் நன்றாக இருக்க வேண்டும்.

உடல் பற்றிய அபிப்ராயமும் சுய மதிப்பீடும் (Body Image and Self-Esteem)

உங்கள் உடலின் தோற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதே உடலைப் பற்றிய அபிப்ராயம் எனப்படும். உங்களை நீங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறீர்கள், எவ்வளவு விரும்புகிறீர்கள், உங்கள் தரங்கள், ஆளுமை மற்றும் திறன்களுடன் நீங்கள் எந்த அளவு ஒத்திசைந்து இருக்கிறீர்கள் என்பதே உங்களைப் பற்றிய உங்களின் சுய மதிப்பீடு. சுய மதிப்பீடு, உங்கள் உடலைப் பற்றிய அபிப்ராயம் இவை இரண்டுமே மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள், உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அமையலாம். உங்கள் தோற்றத்தை நீங்கள் வெறுத்தால், உங்களுக்கு உங்கள் உடலைப் பற்றிய எதிர்மறையான அபிப்ராயம் உள்ளது என்று பொருள், உங்கள் தோற்றம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அது நேர்மறையாக இருப்பதாகப் பொருள். அதேபோல், தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு ஒருவருக்கு குறைவாக இருந்தால், அவர்கள் நம்பிக்கை குறைவாக இருப்பார்கள், அவர்களின் திறமைகளைப் பற்றி உணராமல் இருப்பார்கள், தன்னைப் பற்றியே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வார்கள். நல்ல சுய மதிப்பீடு கொண்டுள்ளவர்கள், தங்களைப் பற்றிய பெருமிதம் கொண்டிருப்பார்கள், மகிழ்ச்சியாகவும் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உடலைப் பற்றிய ஒருவரது அபிப்ராயம், அவரது சுய மதிப்பீட்டைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை அது மாற்றிவிடக்கூடும்.

உங்கள் பிள்ளைகளின் இந்த முக்கியமான காலகட்டத்தில் பெற்றோர் என்ற முறையில், எதிர்காலத்தில் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக வளருவார்கள் என்பதற்கான அடித்தளத்தை சிறப்பாகக் கட்டமைப்பதில் உங்களுக்கு முக்கியப் பங்குள்ளது. அது அவ்வளவு எளிதானதல்ல என்பது உண்மைதான், ஆனால் சாத்தியமற்றதல்ல!

உங்கள் இளம் பிள்ளைகளின் உடலைப் பற்றிய அவர்களின் அபிப்ராயத்தை நல்லபடியாக மாற்ற சில குறிப்புகளை இங்கு காணலாம்:

உதாரணமாக வாழ்ந்துகாட்டுங்கள்: இது நம்ப முடியாததாக இருக்கலாம், குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு இது நம்ப முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெற்றோரைத் தான் முன்னுதாரணமாகக் கருதி வளர்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் நல்ல விதமான உதாரணமாகத் திகழ்கிறீர்களா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கே உங்கள் உடலைப் பற்றிய அபிப்ராயம் சரியில்லை என்றால், அதையே தான் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத்தருகிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்! தேவைப்பட்டால், உங்களையும் நீங்கள் சில விஷயங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் உடலையும் உங்கள் திறன்களையும் குறித்து மகிழ்ச்சியடையுங்கள், உங்கள் தோற்றத்தைக் குறித்து மட்டும் திருப்தியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்க உரிய உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள், சரியான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுங்கள். உங்கள் தரங்களைப் பற்றி நம்பிக்கையோடு இருங்கள், அவற்றைப் பற்றி உங்கள் பிள்ளைகளுடன் பேசுங்கள். மற்றவர்களின் ஆளுமையைக் கண்டு பாராட்டுங்கள், அவர்களின் தோற்றங்கள் குறித்தல்ல. இது போன்ற குணங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த உதாரணங்களாக அமையும். சிலசமயம், உடலைக் குறித்த எதிர்மறையான அபிப்ராயத்தை உணர்த்தும்படியாக நம்மையே அறியாமல் நாம் பேசிவிடுவோம் அல்லது ஏதேனும் செய்துவிடுவோம், ஆகவே எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள், குறிப்பாக உங்களருகில் உங்கள் இளம் வயதுப் பிள்ளைகள் இருக்கும்போது மிகுந்த கவனம் தேவை.
எப்போதும் நேர்மறையான மனப்போக்கைக் கொண்டிருங்கள்: உங்கள் இளம் வயதுப் பிள்ளைகளின் உடலைக் குறித்து கிண்டல் செய்யவோ, மோசமாக விமர்சிக்கவோ செய்யாதீர்கள், குறிப்பாக அவர்களின் உடல் எடை பற்றி இப்படி செய்யக் கூடாது, இது அவர்களை பெரிதும் பாதிக்கலாம். பதின் பருவத்துப் பிள்ளைகள், ஏற்கனவே பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதால் பெரும் மன அழுத்தத்தில் இருப்பார்கள், நீங்களும் இப்படி நடந்துகொள்ளும்போது அது அவர்களுக்கு இன்னும் வருத்தத்தைக் கொடுத்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அவர்களின் நிறைகளைக் குறித்து அவர்கள் கருதும்படி செய்ய முயற்சி செய்யுங்கள், அவர்களிடம் உள்ள சிறு சிறு நல்ல விஷயங்களையும் உதாரணமாக, அவர்களின் அழகிய புன்னகை, மின்னும் கண்கள் என சிறு சிறு விஷயங்களைப் பாராட்டுங்கள். ஆரோக்கியமான பழக்கங்கள், தனிப்பட்ட சுகாதாரம், பராமரிப்பு, ஆரோக்கியமான உணவு மற்றும் உறக்கப் பழக்கங்கள், உடற்பயிற்சி போன்றவை குறித்து அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள், அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்க முயலுங்கள்.
ஊடகங்களைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்: பொதுவாக பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பார்ப்பவை அவர்களை பெரிதும் பாதிக்கும். அவர்கள் இது போன்ற ஊடகங்களில் காண்பவற்றில் பெரும்பாலும் டிஜிட்டல் வித்தைகள், புகைப்படக்கலையில் செய்யும் திருத்தங்கள், மென்பொருள் மெருகூட்டல்கள், அழகு அறுவை சிகிச்சைகள் மூலம் கிடைப்பவை அல்லது மேக்கப் மூலம் வருபவை என்று அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஊடகங்களில் அவர்கள் காண்பவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது என்று கூறுங்கள்.
உடல் அழகுடன் சம்பந்தமற்ற தரமான அம்சங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்:குழந்தைகளாக இருக்கும்போது அவர்களைக் கவனித்துக்கொள்வது போலவே, பதின்பருவத்திலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது முக்கியம். தோற்றத்தை விட தரமான குணங்கள் முக்கியம் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது வலியுறுத்திக் கூறுங்கள். அவர்களின் ஆர்வங்கள், திறமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுங்கள், அவற்றை இன்னும் மேம்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளைக் கொண்டிருக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அழகாகத் தோன்றுவதை விட நல்ல மனிதராக இருப்பது முக்கியம் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். ஒருவரது தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடாமல் அவரது தரங்கள் மற்றும் குணங்களை வைத்து மதிப்பிட வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பதை குடும்பப் பழக்கமாக மாற்றுங்கள்:உடலைப் பற்றிய நல்ல அபிப்ராயம் என்பது, ஆரோக்கியமான உடல் மற்றும் ஆரோக்கியமான மனம் ஆகியவற்றைப் பொறுத்தே பெரிதும் அமைந்துள்ளது. அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். முழு குடும்பமும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தூக்கப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கும்போது உங்கள் பிள்ளைகளும் அதே கண்ணோட்டத்தைப் பெறுவார்கள், அவர்களுக்குள்ளும் இந்தப் பண்புகளும் பழக்கங்களும் வேரூன்றும்.

குறைவான சுய மதிப்பீடும் உடலைப் பற்றிய குறைவான அபிப்ராயமும் சரி செய்யப்படாமல் விட்டா, பிற்காலத்தில் பெரிய பிரச்சனையாகக்கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் தென்படுகிறதா என கவனமாகக் கண்காணியுங்கள். வழக்கமாக உங்கள் பிள்ளைகள் ஆர்வமாக ஈடுபடும் விஷயங்களில் எல்லாம் ஆர்வமின்றி இருக்கிறார்களா, நண்பர்களிடம் எப்போதும் போல இல்லாமல் விலகி இருக்கிறார்களா, கெட்ட பழக்கங்கள் ஏதேனும் புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்களா, சாப்பிடும் பழக்கத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா, மன இறுக்கத்தின் அறிகுறிகள் தென்படுகிறதா என்றெல்லாம் கவனமாகப் பாருங்கள். தேவைப்பட்டால் உரிய நேரத்தில் மனநல நிபுணரிடம் உதவி பெறுங்கள். உங்கள் அன்பும் வழிகாட்டலும் இருந்தால் அவர்களின் உடல் பற்றிய எதிர்மறையான அபிப்ராயத்தையும் குறைவான சுய மதிப்பீட்டையும் மாற்றி நேர்மறையான அபிப்ராயத்தையும் நல்ல சுய மதிப்பீட்டையும் பெறச்செய்யலாம்.