Home சூடான செய்திகள் இளம்பெண்களின் அலைபாயும் மனது கெட்டுப்போகவே வழிவகுக்கும்

இளம்பெண்களின் அலைபாயும் மனது கெட்டுப்போகவே வழிவகுக்கும்

262

சூடான செய்திகள்:இந்த பகுதி, பெண் ஒருவர் தான் கண்ட மிகவும் மோசமான அனுபவத்தை வெளியிட்டுள்ளார். இந்த அனுபவத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளவர்கள் அனைவரும் பெண்கள் ஆவார்கள். படித்துப்பாருங்கள். புரியும்.

ஒரு தேர்வு எழுதுவதற்காக, ‘அந்த’ பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்தேன். தேர்வு மையத்தில் அறிமுகமான ஒரு சிநேகிதி, அவள் தோழியை சந்திப்பதற்காக, விடுதிக்கு அழைத்துச் சென்றாள். நெருங்கிய சிநேகிதிகளான அவர்கள், மனம் விட்டு பல விஷயங்கள் பேசலாம் அல்லது பேசப் பிரியப்படலாம்… நான் இருப்பது தர்மசங்கடமாக இருக்கும் எனக் கருதி, விடுதி வளாகத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அருகில் சில பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பெண்களாய்த் தான் இருக்க வேண்டும். அவர்கள் அணிந்திருந்த உடை, ‘சினிமா நடிகைகள் பரவாயில்லை…’ என்று சொல்வது போல் இருந்தது. அவர்கள் உடையை விட, அவர்கள் பேச்சு ரொம்ப ஆபாசமாக இருந்தது. அஜித், விஜய், தனுஷ் என்று, ஒவ்வொரு நடிகரையும் அங்கம், அங்கமாக வர்ணித்து, ‘என் ஆள்… உன் ஆள்…’ என்று கூறி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு இந்த மாதிரி பேச்சுகள் புதிது என்பதால், அருவருப்பாக இருந்தது.

என்னே கேவலம்! எவனோ ஒரு நடிகன், கொடுத்த பணத்துக்கு திரையில் கூத்தடிக்கிறான். அவனைப் போய் அங்கம், அங்கமாக வர்ணித்து, ‘என் ஆள்… உன் ஆள்’ என்று கூச்சலிடுகின்றனரே… என்ன பெண்கள் இவர்கள் என்று இருந்தது. அடுத்து, அவர்களுடைய பேச்சு, அவர்களுடைய ஆண் நண்பர்களைப் பற்றி திரும்பியது. ‘உன் ஆள் எப்படி? என் ஆள் இப்படி’ன்னு (இங்கே சினிமா நடிகனும் என் ஆள், ஆண் நண்பனும் என் ஆள், கணவனும் என் ஆள் தானா? பாவம், இவர்களை மணக்கப் போகும் புண்ணியவான்கள்.) கொச்சையாக பேசி சிரித்தனர்.

அதில் ஒரு பெண், விடுமுறையில் இருந்து விடுதிக்கு வந்த பெண்ணா அல்லது வீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கு வரும் பெண்ணா என்று தெரியவில்லை… ‘அடியே… இன்னைக்கு பஸ்சுல ஒரு ஜோக் நடந்தது. ஒருத்தன் நான் ஏறினதிலிருந்து என்னையே உத்து உத்துப் பாத்துகிட்டு வந்தான். நானும் கண்ண எடுக்காம, அவனையே பார்த்தேனா… அவன் அப்பவும் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பல! படக்கென்று கண் அடித்து, வாயைக் குவித்தேன் பாரு… அவ்வளவு தான்! ஆளு அரண்டுட்டான். இன்னைக்கு நைட் இத நினைச்சு நினைச்சு பாயைப் பிராண்டிக்கிட்டு இருப்பான்…’ என்று சொல்லி, கெக்கேபிக்கே என சிரிக்க, அவள் தோழியரும் கோரசாக ஓவென்று கத்தி, அந்த கட்டடமே அதிரும் அளவுக்கு பலமாக சிரித்தனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனநிலையை விளக்க, ஒரு குயர் பேப்பர் பத்தாது. அவர்கள் சிரிப்புக்கு பொருள், உங்களுக்கு விளங்கி இருக்கும் என்றே நினைக்கிறேன். பெண்களின் இத்தகைய முன்னேற்றம், சினிமா, தொலைக்காட்சிகளின் தாக்கத்தின் விளைவு. அத்துடன், பெற்றோரின் வளர்ப்பு முறை மற்றும் பெற்றோரே பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்கத் தவறுவது, தெளிவான சிந்தனை இல்லாதவர்களுடைய தோழமை… இன்னும் பிற காரணங்களால், இளவயதிலே சில பெண்கள் இத்தகைய மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர்.

பெண்களின் பருவ வயதில் உடல், மனம் என்று பலவித குழப்பங்கள். இதில், சினிமாக்காரர்கள் வேறு கண்டதும் காதல், காணாமலே காதல், சொல்லாமலே காதல், சொன்னால் தான் காதலா என்று, காதலை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் படத்து கதாநாயகிகள், ஆடை எங்கே என்று தேடுவது போல், ஆடை அணிந்து நடப்பர். அதைப் பார்த்து சின்னப் பையன் முதல், 90 வயது முதியவர் வரை, ‘ஆ’வென்று பார்ப்பர். இந்த கதாநாயகி, அவர்களைப் பார்த்து கண்களை சிமிட்டியும், கன்னத்தை தட்டியும் ஒய்யாரமாக நடந்து செல்வார்.

இந்த இயக்குனர்கள், எந்த நாட்டில் தான் வாழ்கின்றனரோ! இவர்கள் வீட்டுப் பெண்கள், ஒரு வேளை, இப்படித்தான் ஆடை அணிந்து காட்சி அளிப்பரோ என்னவோ! இந்த சினிமா, தொலைக் காட்சிகளின் தாக்கம்தான், நான் பல்கலைக்கழகத்தில் கேட்டது. படிக்க வேண்டிய வயதில், தம்மை நிலை நிறுத்திக் கொள்ள, கல்வி கற்கும் வயதில் உள்ள பெண்கள், எவ்வளவோ உயரத்திற்கு செல்ல வேண்டிய இளம் மொட்டுகள், கருகி விடாமல் இருக்க, நீங்களும், உங்களைப் போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கிட்டே இருக்கணும்… எனக் கூறி விடைபெற்று எழுந்தார். காபி கொடுத்து வழி அனுப்பினேன்!

இந்தக் கால இளம் பெண்கள், சினிமா, தொலைக்காட்சியின் தாக்கத்தால், பலத்த மனச்சிதைவுக்கு உள்ளாகியுள்ளனர். இளம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தணும்.