Home ஆண்கள் ஆண்குறியின் முன்தோல் குறுக்கம் – காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுத்தல்

ஆண்குறியின் முன்தோல் குறுக்கம் – காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுத்தல்

80

ஆண்குறியின் முன்தோல் மோட்டுக்குப் பின்புறமாக சிக்கிக்கொண்டு, சிக்கிக்கொள்ளும் திசுக்களால் பட்டை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நிலையை, ஆண்குறியின் முன்தோல் குறுக்கம் (மருத்துவத் துறையில் இதனை பாராஃபிமோசிஸ் என்பார்கள்) என்கின்றனர்.

இந்தப் பிரச்சனை, மொட்டு முனைத்தோல் அகற்றப்படாத அல்லது பகுதியளவு அகற்றப்பட்ட ஆண்களுக்கே ஏற்படுகிறது. இறுக்கமான மொட்டு முனைத்தோலை பின்னுக்கு இழுக்க முடியாத பிரச்சனையும் (ஃபிமோசிஸ்) இதுவும் ஒன்றல்ல.இதற்கு சிகிச்சையளிக்காமல் விட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

காரணங்கள் (Causes)
இது பெரும்பாலும் மருத்துவ செயல்முறைகளால் ஏற்படுகிறது. உதாரணமாக, ஆண்குறி சோதனை செய்த பிறகு ஏற்படலாம், சிறுநீர் வெளியேற்றத்திற்காக குழாய் செருகப்பட்ட பிறகு அல்லது சிஸ்டோஸ்கோப்பி (சிறுநீர் பை மற்றும் சிறுநீர்க்குழாயைக் காட்சியில் பார்ப்பதற்காக செய்யப்படும் ஒரு மருத்துவ செயல்முறை) போன்றவற்றுக்குப் பிறகு ஏற்படலாம்.

பெரும்பாலும், நோயாளிகளுக்கு சிறுநீர் வெளியேறுவதற்காக சிறு குழாயை ஆண்குறிக்குள் செருகும்போது, மருத்துவர் மொட்டு முனைத்தோலை பின்னோக்கி இழுத்துவிட்டு, செருகி முடித்த பிறகு மீண்டும் முன்னோக்கி இழுத்துவிட மறந்துவிடுவதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.
சிலசமயம், சிறுநீர் கழித்த பிறகு அல்லது ஆண்குறியைக் கழுவிய பிறகு மீண்டும் முனைத்தோலை முன்னுக்கு இழுத்துவிட மறந்துவிடும்போதும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
சுத்தமாக இல்லாததால் நோய்த்தொற்று ஏற்பட்டு, அதனாலும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.
அரிதாக, சிலருக்கு ஆண்குறி விறைக்கும்போது இப்படி ஆகலாம், ஆண்குறி வளையங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்
அறிகுறிகளும் அடையாளங்களும் (Signs and symptoms):
அடையாளங்கள்:
ஆண்குறியின் முனைத்தோலானது மொட்டைத் தாண்டி பின்னோக்கி இழுக்கப்பட்டு, அதே நிலையிலேயே இருக்கும்.

மொட்டுப் பகுதியும் முனைத்தோலும் வீங்கியிருக்கும், இதனால் மீண்டும் முனைத்தோலை பழையபடி இழுத்துக் கொண்டு வர முடியாது.
அறிகுறிகள் (Symptoms):
மொட்டைத் தாண்டி பின்னுக்கு இழுக்கப்பட்ட முனைத்தோலை மீண்டும் முன்னுக்கு இழுக்க முடியாது.
ஆண்குறியின் முனைப் பகுதி வீங்கியிருக்கும்.
ஆணுறுப்பில் வலி
கண்டறிதல் (Diagnosis)
மருத்துவர் ஆண்குறியை வெளிப்புறம் ஆய்வு செய்து, ஆண்குறியின் தண்டு மொட்டுப் பகுதியில் மெதுவடை வடிவத்தில் வீக்கமாக இருக்கிறதா என்று பார்த்தே இந்தப் பிரச்சனை உள்ளதா என உறுதிப்படுத்துவார்.
சிகிச்சை (Treatment)
கைமுறையாகக் குறைத்தல்: வீக்கத்தைக் குறைப்பதற்காக, மருத்துவர் கையுறை அணிந்து, பிளாஸ்டிக் அல்லது எலாஸ்டிக் பட்டையை வைத்து ஆண்குறியைச் சுற்றிக் கட்டு கட்டுவார்.ஐஸ் பேக்கும் வைக்கப்படலாம். வீக்கம் குறையும்போது, முனைத்தோல் அதன் இயல்பு நிலைக்கு மீண்டும் வரும்.
மருந்துகள்: வீக்கத்தைக் குறைப்பதற்கு, ஹையலூரோனிடேஸ் ஊசி அல்லது சிறு துகள்களாக்கப்பட்ட சர்க்கரையையும் சில மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பங்ச்சர் முறை: உள்ளீடற்ற ஊசி (சிரஞ்சிகளில் பயன்படுத்தப்படும் ஊசி) கொண்டு வீங்கியிருக்கும் முனைத்தோலைக் குத்தி, அதில் சிக்கியிருக்கும் திரவத்தை வெளியேற்றி, அதன் பின்னர் முனைத் தோலை கையாலேயே மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள்.
அறுவை சிகிச்சை: எளிய பிற அனைத்து முறைகளும் தோல்வியடைந்தால், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருக்கலாம். இதில், முனைத்தோலில் ஒரு சிறிய வெட்டு போடப்பட்டு உள்ளிருக்கும் திசுப் பகுதி வெளியேற்றப்படும், அதன் பின் வெட்டுக்குத் தையல் போடப்படும்.

தடுத்தல் (Prevention)
மீண்டும் இது நிகழாமல் இருக்க, மொட்டு முனைத்தோல் அகற்றப்படலாம்.
சிக்கல்கள் (Complications)
ஆண்குறியின் மொட்டு முனைத்தோல் குறுக்கப் பிரச்சனைக்கு தகுந்த சிகிச்சையளிக்காமல் விட்டால், ஆண்குறியின் முனைப்பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடலாம்.இது மோசமானால் (அரியது), பின்வரும் பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும்:
ஆண்குறி முனையில் காயம் ஏற்படுதல்
தசை அழுகல்
தானாக அங்கம் நீங்குதல் – ஆண்குறியின் முனை தானாக துண்டாகி விழுந்துவிடுதல்
எச்சரிக்கை (Red Flags)
மொட்டு முனைத்தோலை மீண்டும் முன்னோக்கி இழுக்க முடியாவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும் அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும். இது ஓர் அவசர கவனிப்புத் தேவைப்படும் பிரச்சனையாகும்.