Home ஆரோக்கியம் ஆண்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை..!

ஆண்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை..!

49

download (3)சிறுநீர் காலடியில் சிந்துகிறதா?

“அடிக்கடி சலம் போகுது, நித்திரை குழம்பிச் சினமாகக் கிடக்கு, நீரிழிவாக இருக்குமோ என்று யோசிக்கிறன். சலம், இரத்தம் சோ திச்சுப் பார்ப்போமோ” எனக் கேட்டார், அறுபது வயது மதிக்கக் கூடிய அந்த முது இளைஞர்.

ஆண்களில் சிறு நீர் அடிக்கடி கழிவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.

நீரிழிவு,
புரஸ்ரேட் சுரப்பி வீக்கம்,
மனம் அமைதியின்மை,
சிறுநீரில் கிருமித் தொற்று,
பிரஸர் மற்றும் இருதய நோய்களுக்கு உட்கொள்ளும் சில மாத்திரைகள் போன்ற பல.
சலப்பை, புரஸ்ரேட் ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்களும் காரணமாகலாம்
எனவே, அவரது சிறுநீர் எப்படிப் போகிறது என்பது பற்றி சற்று விபரமாக விசாரித்தேன்.

அறிகுறிகள்

” அடிக்கடி போக வேண்டும் போலிருக்கும். ஆனால் அதிகம் போவதில்லை”
“சலம் விட்டிட்டு வந்தாலும் முழுக்க போன உணர்வில்லை- கொஞ்ச நேரத்திலை திரும்பப் போக வேணும் போலிருக்கும்.”
“போக வேணும் போல இருக்கும், போனால் டக்கெண்டு போகாது கொஞ்சம் முக்கினால்தான் போகும்”
“முந்தின மாதிரி முழுவீச்சிலை போகாது. மெதுவாகத்தான் போகும்.
சிலவேளை காலடியிலை சிந்துகிற மாதிரி மிக மெதுவாகப் போகும்.”
சிறுநீரில் அல்லது விந்தில் இரத்தம் கலந்திருக்கக் கூடும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிவு இருக்கலாம்.
ஆண்குறி விறைப்படைவதில் சிரமம் இருக்கலாம்.
சிறுநீர் வெளியேற முடியாது தடைப்பதுவும் உண்டு.
அவர் கூறியவையும் ஏனவையுமான மேற்கூறிய அறிகுறிகள், பொதுவாக புரஸ்ரேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படுவன.

இவை பொதுவாக 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே தோன்றுவதுண்டு.

புரஸ்ரேட் என்பது எமது சலப்பைக்குக் கீழே, சலக் குழாயைச் சுற்றியிருக்கும் ஒரு சுரப்பி. ஆண்களில் மாத்திரம் இருக்கிறது. இதிலிருந்து சுரக்கும் திரவமானது உறவின்போது வெளியேறும் விந்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வயதாக, ஆக அது சற்று வீக்கமடைவதுண்டு. அப்படி வீங்கினால் சிறுநீர் சுலபமாக வெளியேறுவது தடைப்பட்டு மேற் கூறிய அறிகுறிகள் வரக்கூடும்.

கையுறை அணிந்து, மலவாயின் ஊடாக விரலைச் செலுத்தி புரஸ்ரேட் வீக்கம் அவருக்கு இருப்பதை உறுதிப்படுத்தினேன். ஸ்கான் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டன.

“இது புற்று நோயாக இருக்குமோ” என்பது அவரது சந்தேகம்.

உண்மைதான்.

புரஸ்ரேட் வீக்கத்தில் வயதாகும் போது எற்படும் (Benign Prostrate Hypertrephy) சாதாரண வீக்கமும் உண்டு
அல்லது புற்று நோயும் இருக்கலாம்.
இவற்றைத் தவிர புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்றாலும் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. (Acute Prostatitis, Chronic Prostatitis)

மலவாயில ஊடாக விரல் விட்டுச் சோதித்த போது அவ்வீக்கம் மெதுமையாகவும் வழுவழப்பாகவும் இருந்ததால் புற்று நோயாக இருக்க வாய்ப்பில்லை.

இருந்தபோதும் இரத்தப் பரிசோதனை செய்து புற்று நோய் இல்லை என நிச்சயப்படுத்தினோம். இதற்கு PSA என்ற இரத்தப் பரிசோதனை உதவும்.

புரஸ்ரேட் வீக்கப் பிரச்சினையைக் குணப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சத்திர சிகிச்சை, மற்றது மாத்திரைகள்.

புற்றுநோயல்லாத சாதாரண புரஸ்ரேட் வீக்கத்திற்கு பொதுவாக மருந்து மாத்திரைகளே கொடுப்பார்கள். ஆயினும் இது மருத்துவர் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும்.

மாத்திரைகளை குறைந்தது ஆறுமாதம் உபயோகித்தால்தான் சுகம் தெரியும்.மேலும் தொடர்ந்து உபயோகிக்க நேரிடும்.

சிறு நீர் வாயிலூடாக குழாயைச் செலுத்தி, வெளிக்காயமின்றி சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. ஆபத்தற்ற, உடலுக்குத் துன்பம் விளைவிக்காத சத்திரசிகிச்சை, நோயின் நிலைக்கு உகந்த சிகிச்சை முறையை வைத்தியர் தீர்மானிப்பார்.

மேலே குறிப்பிட்ட நோயாளிக்கு சத்திரசிகிச்சை தேவைப்படவில்லை.