Home ஆரோக்கியம் அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

36

அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும்.

குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது. அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது.

இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும். காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும்.

அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான்.

உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும்.

முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும்.

உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல் ஆகிவிடும்.