Home சூடான செய்திகள் அந்தரங்க தலையீடு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்

அந்தரங்க தலையீடு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்

12

வீட்டு பிரச்சினைகள் முதல் அலுவலக பிரச்சினைகள் வரை அனைத்தையும் பலர், அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவர்களுடைய நிம்மதிக்கே உலை வைத்து விடும். நீங்கள் மற்றவர்களின் மிக முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும் போது, அதை வைத்து சிலர் உங்களை மிரட்டலாம்.

பணம் பறிக்கவும் செய்யலாம். நிலையை எல்லைமீறி போய் விடும் அந்த நேரத்தில் நீங்கள் வருந்தி பலனில்லை. சிலர் ஓட்டை வாயாக இருந்து, சும்மா போகிறவர்களைக்கூட அழைத்து தங்களுக்கு தெரிந்த (மற்றவர்களைப் பற்றிய) விஷயங்களை சொல்லிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், கல்லில்கூட நார் உறிக்கும் ரகத்தினர்.

தனக்கு தெரிந்த ரகசியங்களை வெளியே சொல்லவேமாட்டேன் என்றுகூறும் மனோபலம் கொண்ட மனிதர்களிடம்கூட பேசிப்பேசி ரகசியங்களை கறந்துவிடுவார்கள்.

ஆணும், பெண்ணும் கலந்து வேலை பார்க்கும் அலுவலகங்களில் சிலருக்கு, அவர்களது குடும்ப ரகசியங்களை தெரிந்துகொண்டு, அடுத்தவர்களிடம் சொல்வது ‘பொழுது போக்காக’ இருக்கும். வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொல்வதைப்போல், எல்லோரது வாழ்க்கையிலும் ரகசியங்களும் இருக்கும். பிரச்சினைகளும் இருக்கும்.

அவைகளை எல்லாம் அறிய முயற்சிப்பது முதலில் அபத்தம். அதை அறிந்துகொண்டு அந்த சம்பவங்களுக்கு கண், காது வைத்து அடுத்தவர்களிடம் போய் சொல்வது பெரும் அபத்தம். வலிய போய் பேசி அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கிறவர்கள், தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

அதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து தேவையற்ற விஷயங்களை திரட்டுவது- மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி இன்னொருவர் சொல்வதை துருவித் துருவி கேட்பது- அவைகளை எல்லாம் தொகுத்து இன்னும் பலரிடம் சொல்வது போன்ற அனைத்துமே ஒருவித மனோவியாதி என்று, மனோ தத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அந்த ‘பழக்கம்’ ஏற்படும் தொடக்ககாலத்திலே, அது தவறு என்பதை உணர்ந்துகொண்டால், அதிலிருந்து ஓரளவு விடுபட முடியும். அதுவே சுபாவமாக மாறிவிட்ட பின்பு, அந்த தவறை அவர்களே புரிந்துகொண்டாலும் அவர்களால் அதை தடுத்து நிறுத்த முடியாது.

அவர்களது மூளை எப்போதும் சுற்றியிருப்பவர்களை பற்றியே சிந்தித்து சுழன்று கொண்டிருக்கும். கிடைக்கும் விஷயத்தை வைத்துக் கொண்டு கூடுதலாக இவர்களே ஆளுக்குதக்கபடி கற்பனைகளை கலந்து புதுப்புது விஷயங்களை தயார்செய்வார்கள்.

அதை மற்றவர்களிடம் சொல்லும் வரை அவர்களுக்கு மண்டை வெடித்துவிடும்போல் இருக்கும். இந்த தீய பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டால்தான் நிம்மதியாக வாழமுடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபக்கத்தில் இருந்துகொண்டிருந்தாலும், அதில் இருந்து மீண்டுவர அவர்களால் முடியாது.

சொறிந்து சுகம் கண்டவர்கள் புண் ஆறிய பின்பும், சொறிந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குவது போன்று அது அமைந்துவிடும். ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் அந்தரங்கங்கள் இருக்கும். அதைப் பற்றி யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருப்பார்கள்.

அப்படியே யாருக்காவது தெரிந்துவிட்டாலும், அது அவரைக் கடந்து மற்றவர்களிடம் போய்விடக்கூடாது என்பதிலும் மிகுந்த கண்டிப்பு காட்டுவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கம் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்றடையும்போது, அது சில நேரங்களில் வன்முறைக்கு காரணமாகிவிடுகிறது.

பொதுவாக இப்படி அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் ஆர்வம் செலுத்தும் மனிதர்களின் மூளை வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி சிந்திக்காது. இது அவர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்பு மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கையையே சீர்குலையச் செய்துவிடும். அவர்கள் குடும்ப உறவுகளும் நன்றாக இருக்காது. அவர்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் சுமையாகிவிடுவார்கள். ஆரோக்கியமற்றவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.