Home ஆரோக்கியம் உளவியல் அநாவசியமா பயப்படாதீங்க! ஆபத்தாயிடும்!!

அநாவசியமா பயப்படாதீங்க! ஆபத்தாயிடும்!!

28

எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள். தண்ணீரைக் கண்டால் பயம், உயரமான இடத்தில் ஏற பயம், யாராவது கத்தினால் கூட பயந்து நடுங்குவார்கள். இதற்கு போபியா என்று பெயர். இதனை இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபியா என்பது அசாதாரணமான பயம். அளவுக்கு மீறிய பயம்..

பயம் அவசியம். ஆனால் போபியா அநாவசியம். வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந்த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தான். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

எதனால் இந்த போபியா ?

நூற்றுக்கணக்கான போபியா வகைகள் இருக்கின்றன.சிலர் திறந்த வெளியிலோ பொதுமக்கள் மத்தியிலோ போவதற்கும் பேசுவதற்கும் பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மாறாக சிலர் தனிமையிலே இருப்பதற்கு பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம். பகலில் கூட வீட்டிலே தனியாக இருக்க பயப்படுவார்கள். சிலருக்கு இரத்தத்தைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும். சிலருக்கு பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி, தேள் போன்றவற்றைக் கண்டவுடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். சிலர் உயரமான கட்டிடங்கள், மலை போன்றவற்றைக் கண்டதும் அலறுவார்கள். சிலர் கிருமிகள் கிருமிகள் என்று அளவுக்கு மீறி பயந்து நடுங்குவார்கள். ஒரு நாளைக்கு நூறு முறை கைகளைக் கழுவுவார்கள். ஒன்றும் வேண்டாம். ஹெல்மட்டைக் கண்டாலே அலறும் போபியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.

போபியாக்கள் ஆபத்தானவை.

எல்லா நாடுகளிலுமே 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை மக்கள் ஏதோ ஒரு போபியாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அமெரிக்காவில் மட்டும் 6 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மற்றொரு புள்ளிவிபரம் கூறுகிறது.

அளவுக்கு மீறிய பயம்தான் போபியாவாகும். இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வரை கொண்டு போய்விடும். ஒரு தடவை நாய் பயத்தினால் நீங்கள் பாதிக்கப்படும் போது நல்ல நாயைக் கண்டாலும் அலறி ஓடுவீர்கள்.

போபியாவின் அறிகுறிகள்

போபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் சில அறிகுறிகள் உண்டாகும். அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக்கவே திணறுவது போன்ற உணர்வுகள்தான் போபியாவினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும்.

எப்படி குணமாக்குவது?

உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவ்வித போபியாக்களினால் பாதிக்கப்பட்டிருப்பார்களானால் தகுந்த மனோதத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சை அளியுங்கள். பாதிப்பின் விதத்தைப் பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.