Home பெண்கள் அழகு குறிப்பு அகம் அழகாக நகத்தை கவனிங்க!

அகம் அழகாக நகத்தை கவனிங்க!

22

அக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடி நகங்கள். உடலின் ஆரோக்கியத்தையை நகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த நகத்தை சரியாக பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை. அழகு நிலையங்களில் நக பராமரிப்புக்கு அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது தவிர அங்கு சென்று காத்திருந்து நகத்தை அழகு படுத்தி வரவேண்டும். இது தேவையில்லாத நேர விரையத்தையும் ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே செலவில்லாமல் நகத்தை சீராக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

நகத்தை சீராக்குங்கள்

கை, கால் நகங்களில் நெய்ல் பாலீஸ் போட்டிருந்தால் அவற்றை ரிமூவர் பயன்படுத்தி மென்மையாக எடுக்கவும். நெயில் கட்டர் பயன்படுத்தி அதிக அளவில் வளர்ந்துள்ள நகங்களையும், தேவையற்ற சதைகளையும் வலி ஏற்படுத்தாத அளவிற்கு வெட்டி எடுக்கவும்.

அகலமான பாத்திரத்தை வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சிறிதளவு கடல் உப்பு, சோப் கிரீம், போட்டு நுரை வருமாறு கலக்கவும். அதில், கால்களையும், கைகளையும் நகங்கள் நனையுமாறு ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து கடல் உப்பைக் கொண்டு அழுக்கு, இறந்த செல்கள் இருந்தால் போகுமாறு நன்கு உரசி கழுவவேண்டும்.

மென்மையான பாதங்கள்

பித்தவெடிப்பு நீக்க பயன்படுத்தப்படும் சொர சொரப்பான கல் கொண்டு நன்கு தேய்க்கவேண்டும். கை, கால்களை நன்கு தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் இருந்தால் முற்றிலும் உதிர்ந்து விடும். வெடிப்புகள் இருந்தாலும் குணமாகும்.

கை, கால்களில் சிறிதளவு சோப் கிரீம் போட்டு தேய்த்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவவேண்டும் இதனால் கை, கால் சருமங்கள் ரிலாக்ஸ் ஆகும். அப்போது அரோமெட்டிக் ஆயில் தேய்த்து மாசாஜ் செய்து நன்றாக ஊறவைத்து கழுவவேண்டும். இதனால் கை, கால்கள் மென்மையாகும். இவை மொத்தமும் செய்து முடிக்க 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும். இதனால் அதிகம் செலவில்லாமல் வீட்டிலேயே கை, கால் நகங்களை அழகாக பராமரிக்கலாம்.

மாதம் இருமுறை இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். இதனால் இயற்கையிலேயே அழகான ஆரோக்கியமான நகங்கள் கிடைக்கும்.