Home பாலியல் மூன்று நாட்களும் அதன்போது ஏற்படும் மாற்றங்களும்

மூன்று நாட்களும் அதன்போது ஏற்படும் மாற்றங்களும்

28

தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய், சுகமில்லை… பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள், பயங்கள்..

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம்படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்… இப்படி பல கூடாதுகள்.
கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்! இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, “ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ” என்ற சலிப்பு தட்டுகிறது.
மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக் கட்டுரை

அந்த மூன்று நாட்களில் (சிலருக்கு கூடலாம், குறையலாம்) உண்டாகும் அத்தனை பிரச்னைகளை பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி, டாக்டர் தமிழிசை, டாக்டர் சுமதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு சுலபமான கேள்வி-பதில் வடிவில் விபரங்கள் தரப்பெற்றுள்ளன.

கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் நாம் எப்படி எம் பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறோம்? நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி தாய்மர்கள்தான் தயங்காமல் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பூப்பெய்துதல் என்கிற பருவமடையும் கட்டம் எப்படிப்பட்டது? அது எவ்வாறு நிகழ்கிறது? பூப்பெய்துதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி. முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. 10-11 வயதில் (இப்போது 9 முதல் 13) இது துவங்கும். ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். பின்பு உடல் வளர்ச்சியில் வேகம் தென்படும். அந்த வயது பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்தவளாக தெரிவாள். இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிக மாகும். பூசினாற்போல் சதைப் பற்று ஏற்படும். அக்குளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது. அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக மாத விலக்கு நேர்கிறது.

உடம்பினுள்ளே என்ன நடக்கிறது இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள். உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?
பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்து வரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பை மீதும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் ஹார்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்.
இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் முதல் மாத விலக்கு நிகழ்கிறது.

ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். அதனால் தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாக வராது. இந்த கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம். போகப் போக சரியாகிவிடும்.

இன்ன வயதுக்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?
18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரை பார்க்க வேண்டும். நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள் கூட உண்டு. அதெல்லாம் அபூர்வம். 7 முதல் 9 வயதுக்குள் பூப்படைதலை ‘விரைவுபடுத்தப்பட்ட பூப்பெய்தல்’ என்கிறோம். அதிக உடல் வளர்ச்சியால் அல்லது பரம்பரை காரணமாக இது நிகழலாம். மிகச்சிறிய வயதில் பூப்படைந்தாலும் அதிகப்படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே மாதா மாதம் விலக்காக முடியும். சிறு வயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம்?
அதை சுழற்சி என்போம். சைக்கிள். சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக வரலாம். அது தப்பில்லை.

அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக் கூடிய, உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எவை என்று எப்படி வகைப்படுத்துவது?
அந்த 28 நாட்களை பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1 முதல் 5 மாதவிலக்கு நாட்கள்.
5 முதல் 10 ஆரம்ப நாட்கள்.
அப்போது ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். கருமுட்டை வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள்
அதே வளர்ச்சி வேகமாகி 14-ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும். எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28-வது நாள் வரைபின்பகுதி நாட்கள்.
ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கர்ப்பப்பையின் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாக தென்படும். (ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தை போல!) கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் அளவும் குறைந்துவிடும்.

தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லை யென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பை யில் வளர்ந்திருக்கும் நடுசதை (Endometrium) சுருங்கி, அந்த சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக் காக வெளிவரும். மறுபடியும் ஐந்து நாள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்,.

மாதவிலக்கு எத்தனை நாட்கள் நீடிக்கலாம்?
3 முதல் 6 நாட்கள் இருக்கலாம். 3க்கு குறைவாக அல்லது 6க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.

எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை நார்மல் எனலாம்?
சுமார் 50 மில்லி லிட்டர். குறைந்தது 20 மில்லி லிட்டர் அதிகபட்சம் 80 மில்லி லிட்டர் என இந்த அளவும் வேறுபடலாம். அப்போது தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மி.கி. வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது. உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.

ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் என்றும் கூறலாம்.

இந்த காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது?.
ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 30 குமிழ்கள் உருவாக ஆரம்பித்து, பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒரு குமிழ் பெரிதாகி, அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14-ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்த குமிழ் வெடித்து கரு வெளிவந்து விந்துவை எதிர் கொள்ள தயாராகிறது.

மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
மார்பகம் பாரமாக தோன்றும், பெரிதாவது போல் தெரியும், வலி ஏற்படும். இவை மாதவிலக்கு ஏற்பட 2 அல்லது 4 நாள் முன் ஏற்படும். இது சகஜம். சிலருக்கு இந்த அறிகுறிகள் சற்று அதிக மாக இருக்கலாம். வயிறு 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வலி இருக்கலாம். வருமுன் வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம். எடை உடல், நீர் கோர்த்தது போல, எடை அதிகமானது போல தோன்றும். கர்ப்பப்பை வாயில் 14-ம் நாளிலிருந்து வளவள என்ற திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.

இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.

உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே?
நிச்சயமாக! கவலை, பதற்றம், ஆர்வமின்மை, ஈடுபாடின்மை, அசதி, கோபம், டென்ஷன், எரிச்சல், தூக்க மின்மை, குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல், தற்கொலை எண்ணம், தனிமை விரும்புதல், தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள். இந்த பிரச்னைகளுக்கு காரணம் இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம், பி-6 என்ற வைட்டமின் பற்றாக் குறையாக இருக்கலாம், தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளின் தாக்கம், டசுச்நூஹஷபீகூபி, டசுச்சூபீச்யுநூஹபிக்ஷகூபிசூ போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகலாம். அதிகப்படி நீர் சுரப்பதும், சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணங்களாக இருக்கலாம்.

இதற்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?
தனிப்பட்ட சிகிச்சை கிடையாது.. வைட்டமின்கள், மனநல ஆலோசனை, உடற்பயிற்சிகள் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்தலாம்.
பிரச்னைகளில் இத்தனை வகை
பொதுவாக என்ன மாதிரியான மாத விலக்கு பிரச்னைகள் உள்ளன?
1. குறைந்த அளவு உதிரப்போக்கு
2. உதிரப்போக்கே இல்லாமை.
3. அதிகப்படியான உதிரப் போக்கு
4. சுழற்சி முறையில் மாறுதல்
5.வலியுடன் கூடிய உதிரப்போக்கு.. இப்படி பல.

குறைந்த அளவு உதிரப்போக்கு
இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம். மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுவது. உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது (உ-ம்: அதிக உடற்பயிற்சி, பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது) எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம்.

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, வேறு நோய் இருந்தாலும் (உ-ம்: சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம்.
சினைப்பையில் PCOD (Poly Cystic Ovarian Disease) என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம். சில நேரங்களில் மிகச் சிறிய வயதி லேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.

பரிசோதனைகள் என்ன? இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஈஸ்ட் ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவை கணக்கிட வேண்டும். ஸ்கேன் செய்து கர்ப்பப்பை, சினைப்பை சரியான அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் D & C செய்து கர்ப்பப்பையின் உள்சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.

எல்லாமே லேட்டானால்..?
சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில்தான் பருவம் அடைகிறார்கள். இதனால் பிள்ளைப்பேறு பாதிக்குமா? சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50வயதை தாண்டிதான் விலக்கு நிற்குமா?
உடல்வாகு, உணவு, வளர்கிற சூழ்நிலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை பொறுத்து பூப்பெய்தும் வயது மாறுபடலாம். சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும், சில சமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம். தாமதமாக பூப்பெய்துவதால் பிள்ளைப் பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. பூப் பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை.

சிலருக்கு உதிரப்போக்கு 10நாள் வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே… ஏன்?
பெரிய மனுசியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை. பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும், உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான். உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்ச்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம்.

சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோகூட ஏற்படலாம். இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும். ரத்தப் போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூப்புக்குப் பின் ஒரு மாதத்துக்குள் பலமுறை வந்தாலும், பல மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.

கல்யாணம் செய்வதால் பலன்
சில பெண்கள் ஆரோக்யமாக, உடல் வளர்ச்சி சரியாக இருந்தாலும் பூப்பெய்தாமலே இருந்துவிடுகிறார்களே, அதற்கு காரணம் என்ன? திருமணமானால் சரியாகி விடும் என்று சொல்லி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது சரியா? அவர்களுக்கு குழந்தை பிறக்குமா? இதை அறிய என்ன சோதனை செய்யவேண்டும்?
18 வயதை தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால், கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும். பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால், மாதவிலக்கு தோன்றுகிறது. அது தொடங்கவே இல்லை என்றால், பரிசோதனை அவசியம்.

நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். தாயின் வயிற்றுக்குள் பெண் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கரு முட்டைகளை உள்ளடக்கிக் கொண்டு வளர்கிறது. இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக (Streak Ovary) அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும், இதனால் பூப்பெய்துவது இல்லை.

இப்பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டால் மாதவிலக்கு தோன்றும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு மாத்திரை உட்கொண்டால்தான் மாதவிலக்கு மாதந்தோறும் வரும். இவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம்.

ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும். கர்ப்பப்பை இல்லாமல், யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் வடிவமைப்பு ஆபரேஷன் செய்துகொண்டால் தாம்பத்ய உறவில் சிக்கல் இருக்காது.

காசநோய், இளம்பிராய நீரிழிவு நோய் (Juvenile Diabetes) ஆகியவற்றால் கர்ப்பப் பை பாதிக்கப்பட்டிருந்தாலும் மாதவிலக்கு வராது. துளையற்ற கன்னிப்படலம் (Imperforate Hymen), யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும். இவ்வாறு பூப்பெய்தியும் சூதகம் (Pelvis) மறைந்திருந்து மாத விலக்கிற்கு தடையேற்படுத்துவதை மறை சூதகம் (Cryptorchidism) என்று கூறுவர். ஆபரேஷன் செய்து தடையை அகற்றி வழி செய்தால் இவர்கள் பூப்பெய்தலாம். குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு.

Previous articleதினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும்..?
Next articleஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்க!