Home ஆண்கள் ஆண்குறி ஆண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆணுறை வடிகுழாய்

ஆண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆணுறை வடிகுழாய்

62

ஆணுறை வடிகுழாய் என்பது என்ன? (What is a condom catheter?)

குறிப்பிட்ட சில சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு, சிறுநீர் கழிப்பதற்காகப் பயன்படுத்தும் உபகரணமே ஆணுறை வடிகுழாய் ஆகும். இதில் உருளை வடிவ இரப்பர் உறை இருக்கும், அதை ஆணுறுப்பின் மீது அணிந்துகொள்ள வேண்டும், அது சிறுநீர்த் திறப்பிலிருந்து வரும் சிறுநீரைச் சேகரிக்கும். இந்த உறை ஒரு குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழாய் வழியாக சிறுநீர் ஒரு பையைச் சென்று சேரும்.

ஆணுறை வடிகுழாய்கள் பல்வேறு பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆணுறைப் பகுதி லேட்டக்ஸ் இரப்பர் அல்லது சிந்தடிக் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒருவருக்கு லேட்டக்ஸ் ஒவ்வாமை (அலர்ஜி) இருந்தால், பாலியுரத்தேன் போன்ற சிந்தட்டிக் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆணுறை வடிகுழாய் பரிந்துரைக்கப்படும்.

என்ன பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த உபகரணம் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படும்? (What are the conditions in which a condom catheter is recommended?)

இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும்:

ஆண்களுக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமை – சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வுடன் அல்லது இல்லாமல், சிறுநீர் தானாக கசிதல்
சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமைப் பிரச்சனையுடன் சிறுநீர்ப்பை அதீதமாகச் செயல்படுதல்
ஆண்களுக்கு சில நரம்பிய தசை நோய்த்தொகுப்புகளுடன் சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
கீழ் இடுப்புப் பகுதி எலும்பு இணைப்புகளில் (ஆர்த்தோபெடிக்) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆண்கள், முழுதுமாக சிறுநீரை வெளியேற்ற முடியும் ஆனால் அவர்களால் எழுந்து கழிப்பறைக்குச் செல்ல முடியாது. இதுபோன்றவர்களுக்குப் பயன்படும்.
ஆணுறை வடிகுழாய்களைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் (What are the advantages of condom catheters?)

சிறுநீர் கீழே சிந்தாமல் தடுக்க முடிகிறது, ஒரு பையில் சிறுநீரை சேகரிக்க முடிகிறது
சிறுநீர் துர்நாற்றம் வீசுவது குறையும்
சிறுநீர் தோலில் படாமல் பாதுகாக்கப்படும்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் குறையும்
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு, மலமும் சிறுநீரும் கலந்து சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் (பெரியவர்களுக்கான டயப்பர்களைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சில நோய்த்தொற்றுகளைப் போன்று) ஏற்படுவதைத் தடுக்கலாம்
ஆணுறை வடிகுழாய்களைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் (What are the disadvantages of condom catheters?)
பொதுவாக பின்வரும் பிரச்சனைகள் இருக்கலாம்:

அளவு சரியாக இல்லாத காரணத்தால் இந்த ஆணுறை வடிகுழாய் நழுவிக் கழன்றுவிடலாம்
ஆண்குறியில் எரிச்சல்
உடனடியான அதிக உணர்திறன் – பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை எதிர்விளைவுகள் தொடங்கும்
சிறிது காலத்திற்குப் பிறகு அதிக உணர்திறன் – பயன்படுத்திய ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒவ்வாமை எதிர்விளைவுகள் தொடங்கும்
ஆணுறை வடிகுழாயைப் பயன்படுத்தும் முறை (How to use a condom catheter?)
ஆணுறுப்பிற்குள் செருகும் சிறுநீர் வடிகுழாயை ஒரு மருத்துவர் அல்லது துறை சார்ந்த நிபுணர் உள்ளே செருகுவார். ஆனால் இந்த ஆணுறை வடிகுழாயை சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவரைக் கவனித்துக்கொள்பவரோ அணிவிக்கலாம். ஆணுறுப்பிற்குள் செருகும் வடிகுழாயில் ஒரு சிறிய, வளையும் தன்மை கொண்ட குழாய் இருக்கும். சிறுநீர்த் திறப்பின் வழியே அது சிறுநீர்ப்பைக்குள் செல்லும்படி செருகப்படும். ஆனால் ஆணுறை வடிகுழாயானது சிறுநீர்த்திறப்பிற்குள் செருகப்படாது. அதற்குப் பதில், சிறுநீரைச் சேகரிப்பதற்காக இது ஆணுறுப்பிற்கு மேல் அணிந்துகொண்டு பயன்படுத்தப்படுகிறது.

ஆணுறை வடிகுழாயை பல்வேறு முறைகளில் ஆண்குறியில் இணைக்க முடியும். சிலவற்றில் வெல்க்ரோ பகுதி இருக்கும், அவற்றைப் பயன்படுத்தி ஒட்டலாம், இன்னும் சிலவற்றில் மெடிக்கல் டேப் இருக்கும். உபகரணத்தை வாங்கும்போது அதனுடன் கிடைக்கும் டேப் அல்லது அதற்கெனப் பரிந்துரைக்கப்படும் டேப் தவிர, வேறு ஒட்டும் டேப்புகள் எதையும் பயன்படுத்த வேண்டாம்.

ஆணுறை வடிகுழாயைப் பொருத்தும் முறை: 

ஆண்குறியின் அடிப்பகுதியில் உள்ள முடி ஆணுறை வடிகுழாயில் மாட்டிக்கொள்ளாமல் தடுப்பதற்காக, அப்பகுதியில் உள்ள முடியை வெட்டவும் அல்லது ஷேவ் செய்யவும்.
நீங்களே அணிந்துகொள்வதாக இருந்தால் உங்கள் ஆண்குறியையும் கைகளையும் சோப்பு போட்டு நீரால் கழுவவும், வேறு ஒருவர் அணிவித்துவிடுவதாக இருந்தால், அவரது கைகளையும் கழுவிக்கொள்ளக் கூறவும்.
ஆணுறுப்பை நீரூற்றிக் கழுவி உலரவிடவும்
உடலில் இருந்து 90 டிகிரி கோணத்தில் ஆணுறுப்பைப் பிடித்துக்கொள்ளவும்
ஆண்குறியில் தோல் சிவந்திருக்கிறதா அல்லது தோலில் விரிசல் ஏதும் உள்ளதா எனப் பார்த்து அப்படி எதுவும் இல்லை என உறுதிப்படுத்திக்கொள்ளவும்
ஆணுறை வடிகுழாயின் முடிவில் 1-2 அங்குலம் இருக்கும் வகையில், ஆணுறுப்பின் மேல் மெதுவாக ஆணுறையை அணிவிக்கவும்
ஆண்குறியின் அடிப்பகுதியில், ஆணுறை வளையத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளும்படி அணிவிக்கவும்உறையைப் பிடிக்கும் பகுதியை மிக இறுக்கமாக அணிவிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம்
ஆணுறையை அணிவித்ததும் சிறுநீர் சேகரிக்கும் பையில் உள்ள குழாயுடன் இணைக்கவும்
வடிகுழாயுடன் ஆணுறை இணைந்திருக்கும் பகுதி முறுக்கிக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்ளவும்
உபகரணத்தை வாங்கும்போது அதனுடனே கொடுக்கப்படும் ஸ்ட்ரேப்பைக் கொண்டு சிறுநீர் சேகரிக்கும் பையை (சிறியதாக இருந்தால்) காலுடன் சேர்த்துக் கட்டி வைக்கவும். குழாயை சற்று நீளமாக விட்டுக் கட்டவும், அப்போதுதான் கால்களை அசைக்கும்போது பை இழுபடாது.
இரவில் ஆணுறை வடிகுழாயைப் பயன்படுத்தும்போது, சேஃப்டி பின்னைக் கொண்டு படுக்கை விரிப்பில் வடிகுழாயைப் பொருத்திவைக்கவும். பின் குழாயைச் சுற்றிச் செல்லும்படி பொருத்தவும், குழாயைக் குத்திவிட வேண்டாம்.
சிறுநீர் சேகரிக்கும் பையை குறைவான உயரத்திலேயே வைக்க வேண்டும், அப்போதுதான் சிறுநீர் கீழ்நோக்கிப் பாயும். இதைப் பொருத்தியிருப்பவர் படுக்கையில் இருக்கும்போது, கட்டிலில் இணைத்துப் பொருத்திவைக்கலாம். நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்போது, நாற்காலியின் குஷனுக்குக் கீழே பொருத்தி வைக்கலாம்.

சிறுநீர் சேகரிக்கும் பையை காலி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் (Things to note while emptying the urine bag)

தரையில் ஒரு பெரிய கண்டெய்னரை வைத்துக்கொள்ளவும் அல்லது சிறுநீர் சேகரிக்கும் பையை கழிப்பறையில் வைத்து காலி செய்யவும்.
சிறுநீர் சேகரிக்கும் பையின் அடிப்பகுதியில் உள்ள சிறுநீரை வெளியேற்றும் திறப்பைத் திறக்கவும். அதன் முனையைத் தொட்டுவிடாமல் கவனமாக இருக்கவும்.
திறப்பின் மேல் இருக்கும் ஸ்லைடு வால்வை அகற்றவும்.
சிறுநீர் சேகரிக்கும் பையில் இருந்து கண்டெய்னர் அல்லது கழிப்பறையில் சிறுநீர் வெளியேறும் வரை காத்திருக்கவும்.
வெளியேற்றும் குழாய் எதன்மீதும் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
மீண்டும் ஸ்லைடு வால்வைப் பொருத்தவும், வெளியேற்றும் திறப்பையும் முன்பிருந்தபடியே மீண்டும் வைக்கவும்.
ஒவ்வொரு முறையும் எவ்வளவு சிறுநீரை பையில் இருந்து வெளியேற்றினீர்கள் என்பதைக் குறித்துக்கொள்ளவும். சிறுநீர் வெளியேற்ற அளவை அறிந்துகொள்வதற்காக மருத்துவர் இந்த விவரத்தைக் கேட்கலாம்.
ஆணுறை வடிகுழாயைப் பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி? (How should you prevent an infection when using a condom catheter?)

ஆணுறை வடிகுழாய் உபகரணத்தைப் பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பிறகும் கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவவும்.
ஆணுறை வடிகுழாயை தினமும் மாற்றவும்.
தினமும் ஆணுறை வடிகுழாயை அகற்றிய பிறகு ஆணுறுப்பைக் கழுவவும்.
சிறுநீர் சேகரிக்கும் பையை குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை சோப்பு போட்டு நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.
சிறுநீர் சேகரிக்கும் பை மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியதும் அதனை காலி செய்யவும்.
முழு அளவுள்ள பெரிய பையைப் பயன்படுத்தும்போது, 8 மணிநேரத்திற்கு ஒருமுறை காலி செய்யவும். சிறிய பையைப் பயன்படுத்தினால், 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை காலி செய்யவும்.
எப்போது மருத்துவரைத் தொடர்புகொள்ள வேண்டும்? (When should you contact your doctor?)

ஆணுறுப்பு சிவந்தால், ஊதா நிறமாக மாறினால் அல்லது வீக்கம் ஏற்பட்டால். .
சிறுநீர், கலங்கலாக வந்தால், கெட்டியாக வந்தால் அல்லது சளி கலந்து வந்தால். .
சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வந்தால். .
வடிகுழாயில் இருந்து 6-8 மணிநேரம் வரை சிறுநீர் வெளியேறாமல் இருந்தால். .
சிறுநீர் கடுமையான அல்லது கெட்ட துர்நாற்றம் வீசினால். .
சிறுநீர்த் திறப்பில் எரிச்சல் ஏற்பட்டால் அல்லது சிறுநீர் வெளியேறும்போது வலி இருந்தால். .
அடிவயிற்றில் வலி ஏற்பட்டால். .
காய்ச்சல் (வெப்பநிலை> 101° F) குளிர் இருந்தால். .

Previous articleஉங்கள் மனைவி உச்சமடையாமல் இருக்க என்ன காரணம்?…
Next articleவழக்கத்திற்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபடுதல்