Home ஆரோக்கியம் தோல் அரிப்பு (படை) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

தோல் அரிப்பு (படை) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

46

தோல் அரிப்பு என்பது என்ன?

மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் தோல் தடிப்பு (படை) அல்லது வீக்கம் (ஆஞ்சியோடெமா) அல்லது இவை இரண்டும் இருக்கும் நிலையையே தோல் அரிப்பு என்கிறோம். பூச்சி கடித்தது போன்ற அரிப்பு இருக்கும். இதனால் இந்த நோயை யூர்ட்டிக்கா (பூனைக்காஞ்சொறி) என்று அழைக்கின்றனர். இந்தச் செடியின் அறிவியல் பெயர் ‘யூர்ட்டிக்கா டையோக்கா’ என்பதாகும். தோல் அரிப்பு இருக்கும்போது இதே போன்ற அரிப்பு ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்தப் பிரச்சனை 20% பேருக்கு வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் வந்திருக்கிறது என்று அறியப்படுகிறது.

காரணங்கள்

தோலில் இருக்கும் குறிப்பிட்ட செல்கள் ஹிஸ்டமைனை சுரக்கும்போது, இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

பெரும்பாலும், இதற்கான காரணம் தெரிவதில்லை. இந்தப் பிரச்சனையைத் தூண்டும் சில காரணிகள்:

குளிர் அல்லது நோய்த்தொற்று
ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவு (குழந்தைகளுக்கு பசும்பாலால் ஒவ்வாமை ஏற்படலாம், ஷெல் மீன், கொட்டை வகைகள், பீச், ஆப்பிள் போன்றவை)
சில மருந்துகள்
விலங்குகளில் காணப்படும் உன்னிகள்
சூரிய ஒளி படுதல்
லேட்டக்ஸ்
மகரந்தம்
தேனீ மற்றும் குளவி கொட்டுதல்
இரத்தம் மாற்றுதல்
சிலருக்கு, எந்தக் காரணிகளால் இந்தப் பிரச்சனை தூண்டப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியாது, அது போன்ற தோல் அரிப்புகள் உடல் ரீதியாக உருவாகும் பிரச்சனைகளாக இருக்கும். அவற்றுக்கான காரணங்களும் உடலில் உண்டானவையாக இருக்கும்.

குளிர்: அதிக குளிரால் பாதிக்கப்படுவதால் இந்தத் தோல் அரிப்பு வருகிறது.
டெமோகிராபிசம்: உடலில் அதிகம் சொறியும் பகுதியில் (அல்லது உராய்வு ஏற்படும் பகுதியில்) இந்த வகைத் தோலரிப்பு உண்டாகும்.
சூரிய வெப்பத்தால் ஏற்படும் தோலரிப்பு: அரிதாக சிலருக்கு சூரிய வெப்பம் படுவதால் இந்தத் தோலரிப்பு உண்டாகும்.
அழுத்தத்தால் உண்டாகும் தோலரிப்பு: உடலில் குறிப்பிட்ட பகுதியில் உடையின் எடை அல்லது ஏதேனும் கருவியை வைத்திருந்ததன் அழுத்தத்தால் தோலரிப்பு உண்டாகலாம்.
நீரால் ஏற்படும் தோலரிப்பு: நீர் படுவதால் ஏற்படும் தோலரிப்பு, இதுவும் மிக அரிதாக உண்டாவதேயாகும்.
தொடுவதால் ஏற்படும் தோலரிப்பு: செடிகள், விலங்குகளின் உன்னி போன்ற ஒவ்வாமை ஏற்படுத்துபவற்றைத் தொடுவதால் ஏற்படும் தோலரிப்பு.
வியர்வையால் உண்டாகும் தோலரிப்பு: வியர்வை படுவதால் இது உண்டாகும்.
அறிகுறிகள்

தோலரிப்பின் முக்கிய அறிகுறி அரிப்பாகும் (நமைச்சல்).
தோலின் மீது தடித்த, இளஞ்சிவப்பு நிறப் பகுதிகள் காணப்படும், இது பூனைஞ்சொறியால் ஏற்படும் தோல் தடிப்பு போன்று காணப்படும். இந்தப் பகுதிகள் வழக்கமாக வட்ட வடிவில் காணப்படும், சிலசமயம் தடித்த வரிகள் போலவும் இருக்கலாம்.
தோலில் எந்தப் பகுதியிலும் இது உண்டாகலாம்.
நாக்கு மற்றும் உதடுகளில் தோல் ஆழமாக வீங்குதல், ஆஞ்சியோடெமா போன்றவை ஏற்படலாம்.
நோய் கண்டறிதல்

முன்பே குறிப்பிட்டபடி, இந்தப் பிரச்சனை வருவதற்கான சரியான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும்,ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமா என்பதைப் பற்றி அறிய உங்கள் மருத்துவர் அது குறித்த சில கேள்விகளைக் கேட்கலாம். தற்செயலாக உண்டாகும் தோலரிப்புக்கு பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை.

சிலசமயம், இந்தப் பிரச்சனை ஏற்பட ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டால், தோல், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப் பரிந்துரைக்கப்படும்.

சிகிச்சை

பொதுவாக மருத்துவர்கள் இதற்கு ஆன்டிஹிஸ்டமைன் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். பாதிப்பு கடுமையாக இருந்தால், குறுகிய காலத்திற்கு கார்டிக்கோஸ்டிராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

அரிதாக சிலசமயங்களில், ஆஞ்சியோடெமாவால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளுக்கு எப்பினெஃப்ரின் ஊசி போடப்படலாம்.

தடுத்தல்

தோலரிப்பைத் தூண்டும் காரணிகளால் பாதிக்காதபடி இருக்கவும். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். குளிர், வெப்பத்தால் பாதிக்கப்படுவதையும் உணவு, மருந்துகள் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமையையும் தவிர்க்கவும்.

சிக்கல்கள்

தோலரிப்பு நீண்டகாலம் இருந்தால், பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

நாக்கு அல்லது உதடுகள் வீங்குவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
அனாஃபிலாக்சிஸ்: கடுமையான, உயிருக்கே ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினை.
அடுத்து செய்ய வேண்டியவை

உங்களுக்கு தோலரிப்பு பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், பிறகு மருத்துவர் வரச்சொல்லும் நாளில் தொடர்ந்து சென்று பார்த்து ஆலோசனை பெற்று அதன்படி நடக்கவும்.