Home ஆரோக்கியம் Tamil X Doctor இளம் வயதினரைத் தாக்கும் மனநோய்

Tamil X Doctor இளம் வயதினரைத் தாக்கும் மனநோய்

33

13 முதல் 19 வயது வரையுள்ளவர்களை பதின்பருவத்தினர் அல்லது இளம் பருவத்தினர் என்கிறோம் (டீனேஜ்). இந்தப் பருவத்தில்தான் அவர்களின் உடலிலும் ஹார்மோன்களிலும் நடத்தையிலும் அதிக மாற்றங்கள் நிகழும். மனநிலை திடீரென்று மாறுதல், கோபப்படுதல், உடலுறவில் ஈடுபடுதல், மதுப் பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்தக் காலகட்டத்தில் நடைபெறுவது சகஜம். எனினும், சிலசமயம் இதுபோன்ற செயல்கள் அவர்களுக்குள் மறைந்திருக்கும் மன இறுக்கம், மனக்கலக்கம் போன்ற உணர்வு சார்ந்த பிரச்சனைகளின் அடையாளங்களாகவும் இருக்கலாம், அதை நாம் கண்டுகொள்ளத் தவறிவிடுவதுண்டு. அமெரிக்க உளவியல் சங்கத்தின் அறிக்கையின்படி, ஒட்டுமொத்த மனநோய்ப் பிரச்சனைகளில் சரிபாதி பெரும்பாலும் 14 வயதில் ஏற்படுகிறது. அதில் 75% நோய்கள் 24 வயதில் வருகின்றன.

உலக சுகாதார அமைப்பு (WHO) பின்வருமாறு கூறுகிறது:

உலகளவில் 20% குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் (WHO 2000).
உலகளவிலான பெரியவர்களின் மரணங்களுக்கு மூன்றாவது மிகப்பெரிய காரணமாக தற்கொலை உள்ளது (WHO 2001).
பல்வேறு நாடுகளில் பெரும் மன இறுக்க நோய் (MDD) பெரியவர்களுக்கு வருகிறது, உளவியல் ரீதியான பலவீனத்திற்கும் தற்கொலைக்கான ஆபத்திற்கும் இந்த நோய்க்கும் தொடர்புள்ளது (வெயிஸ்மேன், 1999)
எனவே, இளம் வயதினருக்கு ஏற்படும் மனநோய்களைப் பற்றித் தெரிந்து வைத்துக்கொண்டால், காலம் தாமதித்து அவற்றைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதைத் தவிர்க்கலாம்.
காரணங்கள் (Causes)

இளம் வயதினரை மன நோய் தாக்குவதற்கான சில காரணங்கள்:

a) மன அழுத்தம் – குழந்தைப் பருவத்தில் நீண்ட காலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் (உதாரணமாக பெற்றோர் விவாகரத்து செய்துவிடுதல், விடுதியில் தங்கிப் படித்தல் போன்ற காரணங்களுக்காக பெற்றோரை விட்டுப் பிரிந்திருத்தல்) பிற்காலத்தில் மன நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

b) உயிரியல் ரீதியான காரணங்கள்: மூளையில் இருக்கும் இரசாயனங்களின் (நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்) சமநிலையின்மை, மூளையில் உள்ள குறைபாடுகள் (பிறவிக் குறைபாடு/விபத்துக் காயம்) நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு (வைட்டமின்கள், மினரல்கள்) போன்றவையும் மன நோய்க்குக் காரணமாகலாம்.

c) போதைப் பழக்கங்கள் – மது/புகைபழக்கம்/போதைப்பொருள் பழக்கம்

d) சுற்றுச்சூழல் மன அழுத்தம் – விபத்துகள், நிலநடுக்கம், கடத்தல், குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் கடத்தல், தற்கொலை போன்ற மன அழுத்தம் தரும் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள்/அனுபவித்தவர்கள், ஒரு நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது அறுவைசிகிச்சைக்குப் நீண்ட நாள் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு மன நோய் வரும் அபாயம் அதிகமுள்ளது.

e) பாரம்பரியம் (மரபுவழி) – குடும்பத்தில் ஒரு சிலருக்கு இருக்கும் சில மன நோய்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுகின்றன.

f) உளவியல்ரீதியான பாதிப்பு – பாலியல் துன்புறுத்தல், பெற்றோரை இழப்பது, விவாகரத்து, குடும்பத்திற்குள் எதிர்கொள்ளும் வன்முறை, பெற்றோர் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருப்பது போன்ற மனதைப் பாதிக்கும் தாக்கங்களினாலும் மனநோய் உண்டாகலாம்.
g) சமூகம் சார்ந்த காரணங்கள் – வறுமை, வேலையின்மை, வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் போன்றவை.

அடையாளங்கள் (Signs)

பின்வருபவை மனநோய்க்கான சில எச்சரிக்கை அறிகுறிகளாகும், அவற்றைக் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அது மன நோய் உள்ளது என்பதற்கான உறுதியான அடையாளம் என்று கூறிவிட முடியாது. ஆனால், இவற்றில் சில பல அறிகுறிகள் சில வாரங்களையும் தாண்டி தொடர்ந்து நீடித்திருந்தால், தவறாமல் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

உடல் சார்ந்த அறிகுறிகள் (Physical level):

சாப்பிடுதல், தூங்குதல் போன்ற பழக்கங்களில் மாற்றம் (தூக்கமின்மை)
சோர்வு அல்லது தெம்பில்லாமல் இருத்தல்
காரணமில்லாத வலிகள் (வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி)
எடை குறைதல் / பசியின்மை
நடத்தை / உணர்வு சார்ந்த அறிகுறிகள் (Behavioural/Emotional level):

கவனம் செலுத்த முடியாமை, நினைவாற்றல் பிரச்சனை
சந்தேகப்படுதல்
எரிச்சலடைதல், கோபம், பதற்றம்
உற்சாகமின்மை, ஊக்கமின்மை, சுய மரியாதை குறைதல்
தன்னுடைய தோற்றம் அல்லது சுத்தம் பற்றி அக்கறையின்றி இருத்தல்
தொடர்ச்சியான கெட்ட கனவுகள்
அமைதியின்மை, கலக்கம்
வருத்தம், நம்பிக்கையின்மை
மற்றவர்களுக்குத் தெரியாதவையும் கேட்காதவையும் இவர்களுக்கு மட்டும் தெரிவது, கேட்பது
எப்போதும் கண்ணீர் அல்லது அடிக்கடி அழுவது
மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள்
வகைகள் (Types)

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, குழந்தை வளரும் பருவத்தில் பல்வேறு காலகட்டங்களில் பின்வரும் பல்வேறு மனநோய்கள் உருவாகின்றன:

குழந்தைப் பருவம்:

கற்றல் குறைபாடுகள் (டிஸ்லெக்ஸியா, டிஸ்கிரேஃபியா, டிஸ்கால்குலியா, டிஸ்பிராக்ஸியா).
ஹைப்பர்கைனட்டிக் குறைபாடுகள் (ADHD – கவனம் குறைகின்ற அதீதச் செயல்பாட்டுக் குறைபாடு)
குழந்தைப் பருவத்தின் நடுப்பகுதி:

நடுக்கங்கள் (டாரட் சின்ட்ரோம்).
வளரும் இளம்பருவம்:

மன இறுக்கம் மற்றும் அதோடு தொடர்புடைய தற்கொலை.
மனநோய் (மனச்சிதைவுநோய்)
பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்ற நோய்கள் சில:

பரவக்கூடிய வளர்ச்சிக் குறைபாடு (பெர்வேசிவ் டெவலப்மென்ட் டிசார்டர்) (ஆட்டிச நோய்த்தொகுப்பு)
மனக்கலக்கக் கோளாறுகள் (பொது மனக்கலக்கக் கோளாறு, பிரிவு மனக்கலக்கக் கோளாறு, பயம், பீதியடைதல், பலவந்தப் பழக்கங்கள் (ஒபிசிவ் கம்பல்சிவ் டிசார்டர்), விபத்துக்குப் பிறகான மன அழுத்தக் கோளாறு).
பிணைப்புக் கோளாறுகள் (எதிர்வினை கொண்ட பிணைப்புக் கோளாறு).
நடத்தைக் கோளாறு / சமூக விரோத ஆளுமை (உந்துதலின் படி நடந்துகொள்ளுதல், பொறுப்பற்ற நடத்தை மற்றும் குற்றங்களில் ஈடுபடுதல்).
உணவு உண்பதிலான குறைபாடுகள் (பயத்தால் உண்ணாமல் இருப்பது (அனரெக்சியா நெர்வோசா) மற்றும் அதிகமாக உண்டு வாந்தி வரவழைத்தல் (புலிமியா நெர்வோசா))
சிகிச்சை (Treatment):

மன நோய்க்கு மருந்துகள் கொண்டும் உளவியல் சிகிச்சை மூலமும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

உளவியல் சிகிச்சைக்கான மருந்துகள் – இந்த மருந்துகள் மூளையிலுள்ள மனநிலை, நடத்தை சம்பந்தப்பட்ட இரசாயனங்களில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மைய நரம்பு மண்டலத் தூண்டு மருந்துகள், மன இறுக்கத்திற்கு எதிரான மருந்துகள், மனக்கலக்கத்திற்கு எதிரான மருந்துகள், மனநோய்க்கு எதிரான மருந்துகள், மனநிலையை நிலைப்படுத்தும் மருந்துகள் போன்றவை இவற்றிலடங்கும்.

உளவியல் சிகிச்சை (பேச்சு/நடத்தைக்கான சிகிச்சை) – இந்தச் சிகிச்சையானது மனநோய் பாதிக்கப்பட்ட இளம் வயதினரும் அவர்களின் பெற்றோர்களும் அதனைச் சமாளிக்க உதவுகிறது. இதில் அறிவுசார்ந்த நடத்தைச் சிகிச்சை வழங்கப்படும். இந்தச் சிகிச்சையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமது சீர்குலைந்த சிந்தனைப் போக்குகளையும் ஆரோக்கியமற்ற பழக்கங்களையும் மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

எச்சரிக்கை (Red flag):

எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்க முடியாது, குறிப்பாக மரண அச்சுறுத்தல்களை மிகவும் கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆகவே உங்கள் குழந்தையிடம் தற்கொலை சம்பந்தப்பட்ட நடத்தை இருப்பதைக் கவனித்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.