Home இரகசியகேள்வி-பதில் “வைத்துக்கொண்ட தாம்பத்தியத்தால், ஏற்படும் விபரீத விளைவுகளை சந்திப்பது எப்படி?”

“வைத்துக்கொண்ட தாம்பத்தியத்தால், ஏற்படும் விபரீத விளைவுகளை சந்திப்பது எப்படி?”

52

download,அன்புள்ள அம்மா,
என் வயது 29; நானும், என் உறவுப் பெண்ணும் கடந்த 10ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் வீட்டில், நான்கு ஆண்கள்; என் இரண்டாவது அண்ணனுக்கு திரு மணமாகி விட்டது. என் அப்பா, ஓரிரு மாதங்களுக்கு முன், உடல் நலக் குறைவால் தவறி விட்டார்.
அவளது வீட்டில், அவள் கடைசிப் பெண். மற்றவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நாங்கள் இருவரும், உயிருக்குயிராக நேசித்தோம்; எங்களுக்குள் நல்ல புரிதலும் இருந்தது.
அவள் மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல நேர்ந்தது. விடுதியில் தங்கி படித்தாள். அங்கு, அவளது தூரத்து உறவினர் வீட்டிற்கு, அவளது பெற்றோர் விருப்பத்தால், வார விடுமுறை நாட்களில் செல்வாள். விடுதியில் இருக்கும்போது, நாங்கள் போனில் பேசிக் கொள்வோம். ஆறு மாதங்களுக்கொருமுறை பார்த்து வருவேன். அவளுக்கு நான், மொபைல் போன் வாங்கிக் கொடுத்தேன். அவளது வீட்டிற்கு போனில் பேசினால், பிரச்ச‌னை வரும் என்பதால்!

இந்நிலையில், அவளது தூரத்து உறவினர் வீட்டு அண்ணனுக்கு, எங்கள் காதல் விஷயம் தெரிந்து விட்டது. அவன், ஒரு சைக்கோ; அவனுக்கு எங்கள் காதல் பிடிக்கவில்லை.
எங்கள் காதல் விஷயம், அவனுக்கு தெரிவதற்கு முன், ஒரே ஒரு முறை நானும், அவளும் தனிமையில் இருந்தோம். அவளுக்கு நானும், எனக்கு அவளும் சொந்தம் என்ற உரிமையில், நாங்கள் எங்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்போது விளையாட்டுத்தனமாக, எங்கள் தனிமையை அவளது போனில் போட்டோ எடுத்தேன். ஆனால், அதை அழிக்க மறந்து விட்டோம்.
அப்போது தான், எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இடி விழுந்தது. அவள் அந்த உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, என்னுடன் பேசுவதற்காக, அந்த போனை எடுத்துச் சென்றாள். அங்குள்ள குப்பை கூடைக்கு அடியில், அதை மறைத்து வைத்துள்ளாள். அடுத்த நாள், அந்த இடத்தில் இருந்த போனைக் காணவில்லை. இது நடந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன். அதை என்னிடம் சொல்லி கதறி அழுதாள். அது குப்பைத் தொட்டிக்குச் சென்றிருக்கும் என்றும், அது மழைக் காலம் என்பதால், போன் மழையில் நனைந்து, செயலிழந்து இருக்கும் என்றும் சமாதானம் சொன்னேன் நான்.
ஆனால், ஒரு சில மாதங்களுக்குப் பின், ஒரு நாள் வீட் டிலிருந்து விடுதிக்குக் கிளம்பும்போது, அந்த போனை வீட்டில் பார்த்திருக்கிறாள். எல்லாரும் இருந்ததால், அவளால் அதை எடுக்க முடியாமல், அப்படியே விட்டுச் சென்றிருக்கிறாள்.

அடுத்தமுறை, அங்குசென்றபோது, அவளது சகோதரன் அந்த போட்டோவைப் பற்றிக் கேட்டிருக்கிறான். அவள், அவனது காலில் விழுந்து மன்றாடி, ‘அவன் நல்லவன். விளையாட்டு புத்தியில் அவ்வாறு செய்துவிட்டான்; வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம்…’ என்று கெஞ்சியிருக்கிறாள். அவனும் சரி என்று சொல்லியிருக்கிறான். ஆனால், அவளது சகோதரன், சைக்கோ புத்தியைக் காட்டிவிட்டான்.
அந்த போட்டோவை, அவளது பெற்றோரிடம் காட்டி, திருமணத்திற்கு முன், இப்படி நடக்கும் ஒருவன் நல்லவன் இல்லை என்று சொல்லிவிட்டான். அவளது பெற்றோர், என் விவரங்களைக் கேட்டு, என்னைக் கொல்லப் போவதாகச் சொல்லி, அவளை அடித்து உதைத்திருக்கின்றனர். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஏற்கவில்லை. எனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்றும், எங்களை பிரித்துவிடுவர் என்பதற்காகவும், விஷம் குடித்து விட்டாள். ஆனால், அவளைக் காப்பாற்றி விட்டனர்.
பிறகு, என்னை ஒன்றும் செய்யமாட்டோம் என்று, அவளிடம் சத்தியம் செய்து, வேறு ஒருவரை திருமணம் செய்யச் சொல்லியிருக்கின்றனர். இவள் முடியாதென்றதும் அவளது அம்மா விஷம் குடித்துவிட்டார். அதைத் தாங்க முடியாமலும், எனக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும், அவள் வேறு திருமணம் செய்துகொண்டாள் .

அவளுக்கு திருமணமான விஷயம் எனக்குத்தெரிந்தால், என்னால் தாங்க முடியாதென்பதால், என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், ஆறு மாதங்களுக்குப் பின், எனக்கு அது தெரிந்துவிட்டது.
அவளைத் தொடர்பு கொண்டேன். ‘என்னை மன்னித்து விடுங்கள், உங்களோடு வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை. என்னுடைய விலை மதிப்பில்லா பொக்கிஷம் நீங்கள். உங்கள் மீது ஒரு துரும்புகூட படக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களோடு சேர்ந்து வாழா விட்டாலும், உங்களுக்காக வாழ முடிவெடுத்தேன். நான், உங்களை ஏமாற்றி விட்டேன். நம் காதல் உண்மையென்றால், நீங்களும், நானும் சாகக்கூடாது; நீங்கள் வேறு திருமணம் செய்ய வேண்டும்…’ என்று என்னிடம். சத்தியம் வாங்கிக் கொண்டாள். ‘இது தான் நாம் கடைசியாகப் பேசுவது, நம் இருவருக்கும் இடையில், எந்த உரிமையும் இல்லை…’ என்று சொல்லி விட்டாள்.
ஆனால், எனக்கோ, என் முட்டாள் தனத்தால், அவளது வாழ்க்கையைச் சீரழித்து விட்டேன் என்ற குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. தற்கொலை எண்ணமும், அவளது சகோதரனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. என் மன வலி, வேதனை, தாயுள்ளம் கொண்ட உங்களுக்கு நிச்சயம் புரியும். எனக்கு வழி காட்டுங்கள் அம்மா.
— பெயர், ஊர் வெளியிட முடியாத ஒரு முட்டாள்.

அன்புள்ள மகனுக்கு,
பெரும்பாலும், காதலில் ஈடுபடும் யுவன், யுவதிகள் காதலிக்கும்போதே, தாம்பத்தியம் வைத்துக் கொள்கின்றனர். தம் காதல், திருமணத்தில் முடிவடையுமா, முடிவடையாவிட்டால் வைத்துக்கொண்ட தாம்பத்தியத்தால், ஏற்படும் விபரீத விளைவுகளை சந்திப்பது எப்படி? என்கிற கவலையே படுவதில்லை.
நீ எடுத்த புகைப்படத்தால்தான், உன் காதல் நிறைவேறவில்லை என நீ நம்புவது அபத்தம். காதலிக்கும் போது, தாம்பத்தியம் வைத்துக்கொண்டது தவறுதான். அது ஒன்றே தான், உன் எல்லா பிரச்ச‌னைகளுக்கும் அடிப்படை என சொல்ல முடியாது. நீயும், உன் காதலியும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள், இருந்தாலும், உங்களிரு வீட்டாருக்கும் இடையே இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், உங்கள் காதல் ஏற்றுக் கொள்ளப்படாமல் போயிருக்கலாம். தூரத்து உறவினர் வீட்டு அண்ணன், உங்களின் காதல் விஷயத்தை, பெண் வீட்டாரிடம் போட்டுக் கொடுக்கா விட்டாலும், வேறொரு வழியில் உண்மையை அறிந்திருப்பர் பெண் வீட்டார்.
நீயும், உன் காதலியும், 10 ஆண்டுகள் காதலித்தீர்கள். இடையில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டீர்கள். பெண் வீட்டார், உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாது, பிரித்து விட்டனர். உன் காதலிக்கு வேறொருத்தனை மணமுடித்து விட்டனர். 100க்கு, 80% காதல்களில், இப்படிதான் நடக்கிறது. காதலில் பிரிக்கப்பட்டவர்கள், தத்தம் காதலை ஆழ்மனதில் புதைத்து விட்டு, வேறொரு துணையுடன் இயந்திரகதியாக வாழ்கின்றனர்; பிள்ளை பெறுகின்றனர். எப்போதாவது, அபூர்வமாக தங்கள் காதலை அசை போட்டபடி, வயோதிகம் வந்து செத்துப் போகின்றனர்.

காதலியுடன், தாம்பத்தியம் வைத்துக் கொண்டதை, புகைப்படம் எடுத்த நீ, குற்ற உணர்ச்சியில் உங்கள் காதலை போட்டுக்கொடுத்த காதலியின் அண்ணனை கொல்ல நினைப்பதும், அபத்தத்தின் உச்சம்.
இனி, நீ என்ன செய்யவேண்டும் தெரியுமா?
உன் காதலி, அவளுடைய கணவனுடன் அமைதியாய் வாழ, இறைவனை பிரார்த்தி. அவளை இடையில் சந்திக்க விரும்பாதே, போன் பேசாதே. மனதாலும், உடலாலும் அவளை விட்டு வெகுதூரம் விலகு; தேவையற்ற குற்ற உணர்ச்சிகளில் புதையாதே. உன் அண்ணனை விட்டு, உனக்கு பெண் பார்க்கச் சொல். நல்ல பெண்ணாக தேர்ந் தெடுத்து, திருமணம் செய்துகொள். உன் காதலியின் பெயருள்ள பெண்ணாகவோ, உனக்கு பெண் குழந்தை பிறந்தால், அவளது பெயரை வைக்கவோ முயற்சிக்காதே. உன் காதலியின் அண்ணன் சைக்கோ அல்ல; தனக்கு காதலி இல்லாதபோது, இவர்கள் காதலிக்கின்றனர், தாம்பத்தியம் வைத்துக் கொள்கின்றனர் என்ற போட்டி, பொறாமைதான் அவனுக்கு. அவனை, மன்னித்து விடு; ஒரு உண்மையான காதலை பிரித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில், அவன் ஏற்கனவே நொந்து போயிருப்பான். கவுரவக் கொலைகள் இல்லாத நாடாக, இந்தியாவை நிர்மணிக்க பாடுபடுவோம்!