Home இரகசியகேள்வி-பதில் Sex Tamil டேம்போன் எப்படிப் பயன்படுத்துவது? (Tampons)

Sex Tamil டேம்போன் எப்படிப் பயன்படுத்துவது? (Tampons)

161

டேம்போன் என்பது என்ன? (What are Tampons?)

டேம்போன் என்பது மாதவிடாயின்போது வெளியேறும் இரத்தத்தை உறிஞ்சிக்கொள்வதற்காகப் பயன்படுத்தும் பொருளாகும். இவையும் சேனிட்டரி நாப்கீன்களைப் போன்றே செயல்படுகின்றன.

மென்மையான பஞ்சினை மெலிதான உருளை வடிவில் திணித்து டேம்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. யோனித் திறப்பில் செருக உதவியாக இருக்கும்வகையில் அவை உருளை வடிவில் செய்யப்படுகின்றன.

பெண்ணின் மாதவிடாயின்போது இரத்தம் உடலைவிட்டு வெளியே வரும் முன்பு இவை உறிஞ்சிக்கொள்கின்றன. டேம்போன்கள் மருந்து கடைகளில் கிடைக்கும். பல்வேறு அளவுகளிலும் உறிஞ்சும் திறன்களிலும் கிடைக்கின்றன. டேம்போன்களில் சிறிய கைப்பிடி நூல்கள் இருக்கும், இவை யோனியின் வெளிப்புறம் தொங்கிக்கொண்டு இருக்கும். டேம்போனை வெளியே எடுக்க, இந்த நூலைப் பிடித்து வெளியே இழுத்தால் போதும்.

சில டேம்போன்களில் அப்ளிகேட்டர் இருக்கும், இவை டேம்போனை சரியாகப் பொருந்த உதவும். சிலவற்றை விரல்களைக் கொண்டு நாமே சரியாகப் பொருத்த வேண்டியிருக்கும்.

எந்த டேம்போனைப் பயன்படுத்த வேண்டும் என்பதை எப்படித் தேர்வுசெய்வது? (How to choose a tampon?)

உறிஞ்சும் கொள்ளளவின் அடிப்படையில் டேம்போன்கள் வெவ்வேறு அளவுகளில் (லைட், ஸ்லென்டர், ரெகுலர், சூப்பர், சூப்பர் ப்ளஸ்) கிடைக்கின்றன. சிலவற்றில் பிளாஸ்டிக் அல்லது கார்ட்போர்டு அப்ளிகேட்டர் இருக்கும் சிலவற்றில் இருக்காது. ஒருவருக்கு ஏற்படும் மாதவிடாய் இரத்தப்போக்கின் அளவின் அடிப்படையில், அவருக்கு எந்த அளவு டேம்போன் சரியாக இருக்கும் என்பது பற்றி, டேம்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அறிவுறுத்தல் தகவலை வைத்திருப்பார்கள். முதலில் வெவ்வேறு அளவு கொண்ட டேம்போன்கள் சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்தே ஒருவர் தனக்கு எது சரியான அளவு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் ஸ்லென்டர் அளவு டேம்போன் அல்லது இளம் வயதினருக்காக வடிவமைக்கப்பட்ட அளவுகளில் உள்ள டேம்போனை முயற்சி செய்து பார்க்கலாம்

 டேம்போனை எப்படி உள்ளே செருக வேண்டும்? ( How to insert a Tampon?)

டேம்போன் பாக்சை நீங்கள் வாங்கும் பொது, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படி உள்ளே செருக வேண்டும் என்பதை விளக்கும் வழிமுறைகள் படங்களுடன் இருக்கும். அந்த வழிமுறைகளையும் படங்களையும் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

மாதவிடாயின்போது யோனி ஈரத்துடன் இருக்கும், இதனால் டேம்போன் எளிதாக உள்ளே நுழையும், ஆகவே மாதவிடாய் இருக்கும்போது டேம்போனை உள்ளே செருக முயற்சி செய்யவும்.

டேம்போனை உள்ளே செருகும் முன்பு கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவிக்கொள்ளவும்.

வெவ்வேறு நிலைகளில் நின்று, அமர்ந்துகொண்டு டேம்போனை செருகலாம். பெரும்பாலான பெண்கள் கால் மூட்டுகளை லேசாக மடக்கி நின்று கொண்டு டேம்போனை உள்ளே செருகுவார்கள். இன்னும் சிலர் ஒரு காலை டாய்லெட் சீட்டின் மேல் அல்லது கவிழ்ந்து வைத்த வாலியின் மேல் (அல்லது அது போன்ற கால் வைக்க சற்று உயரமான பொருளின் மேல்) வைத்து செருகுவார்கள்.

அப்ளிகேட்டர் இல்லாத டேம்போன்களைச் செருகும் முறை (Inserting a tampon with no applicator)

1. பேக்கில் இருந்து டேம்போனைப் பிரித்து வெளியே எடுக்கவும். கைகள் உலர்ந்து இருக்க வேண்டும்.

2. கைப்பிடி நூல் டேம்போனில் நன்கு இணைந்து இருக்கிறதா என்று சோதிக்க, அதை லேசாக இழுத்துப் பார்க்கவும்.

3. மேலே குறிப்பிட்ட இரண்டு நிலைகளில் உங்களுக்கு எது வசதியோ, அந்த நிலையில் நின்று கொள்ளவும்.

4. ஆழ்ந்து சுவாசித்து உடலைத் தளர்வாக்கிக் கொள்ளவும்

5. உங்களுக்கு வசதியான நிலைக்கு வந்த பிறகு, டேம்போனை அதன் நூலின் முனையில் பிடித்துக்கொள்ளவும். கைப்பிடி நூல், யோனியிலிருந்து சற்று வெளியே வந்து கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.

6. மற்றொரு கையால் யோனி இழழ்களை விரித்து, பிறப்புறுப்பின் திறப்பில் டேம்போனின் மறுமுனையை வைக்கவும்.

7. டேம்போனை 45 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி சாய்வாக வைத்து, பிறப்புறுப்புக்குள் உங்கள் அடி முதுகை நோக்கி செருகவும் (பிறப்புறுப்புக் குழாயானது லேசாக சாய்ந்தபடி அமைந்துள்ளது).

8. டேம்போன் பிறப்புறுப்புக்குள் நுழைந்ததும், சுட்டு விரலைக் கொண்டு டேம்போனை உள்ளே தள்ளவும்.

9. கைப்பிடி நூல் பிறப்புறுப்பிற்கு வெளியே தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும்.

அப்ளிகேட்டர் கொண்டுள்ள டேம்போனை உள்ளே செருகுதல் (Inserting a tampon with a built-in applicator)

பேக்கில் இருந்து டேம்போனைப் பிரித்து வெளியே எடுக்கவும். கைகள் உலர்ந்து இருக்க வேண்டும்.
கைப்பிடி நூல் டேம்போனில் நன்கு இணைந்து இருக்கிறதா என்று சோதிக்க, அதை லேசாக இழுத்துப் பார்க்கவும்.
மேலே குறிப்பிட்ட இரண்டு நிலைகளில் உங்களுக்கு எது வசதியோ, அந்த நிலையில் நின்று கொள்ளவும்.
ஆழ்ந்து சுவாசித்து உடலைத் தளர்வாக்கிக் கொள்ளவும்
உங்களுக்கு சௌகரியமான கையில் (நீங்கள் எழுதும் கையில்) டேம்போனைப் பிடித்துக்கொள்ளவும், டேம்போனின் நடுப்பகுதியில் சிறிய குழாய் பெரிய குழாயில் செருகியிருக்கும் இடத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும். கைப்பிடி நூல், யோனியிலிருந்து சற்று வெளியே தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.
மற்றொரு கையால் யோனி இழழ்களை விரித்து, பிறப்புறுப்பின் திறப்பில் டேம்போனின் மறுமுனையை வைக்கவும்.
டேம்போனை 45 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி சாய்வாக வைத்து, பிறப்புறுப்புக்குள் உங்கள் அடி முதுகை நோக்கி செருகவும். வெளிக் குழாய் அல்லது அப்ளிகேட்டர் பிறப்புறுப்புக்குள் முழுவதும் உள்ளே சென்றதும் நிறுத்தவும்.
வெளிக்குழாய் பிறப்புறுப்புக்குள் உள்ளே சென்றதும், டேம்போனை வெளியே எடுப்பதற்கான நூல் தெரியும் இடத்தில் உங்கள் சுட்டுவிரலைக் கொண்டு அழுத்த வேண்டும், இதன் மூலம் உள் குழாய் (டேம்போன்) வெளிக் குழாயிலிருந்து உள்ளே சென்று, டேம்போன் பிறப்புறுப்புக்குள் முழுவதும் தள்ளப்படும்.
உள் குழாய் (டேம்போன்) முழுவதும் உள்ளே சென்றதும் பெருவிரலையும் நடுவிரலையும் பயன்படுத்தி அப்ளிகேட்டரை (வெளிக் குழாயை) வெளியே எடுக்கவும்.
கைப்பிடி நூல் பிறப்புறுப்புக்கு வெளியே தொங்கிக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும்.
டேம்போனை எப்படி வெளியே எடுப்பது? (How to remove the tampon?)

ஒரு டேம்போனை 8 மணி நேரத்திற்கு மேல் பிறப்புறுப்புக்குள் வைத்திருக்கக்கூடாது. இப்படிச் செய்தால் டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் (TSS) எனப்படும் பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது.

இரவில் தூங்கும்போது சேனிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதன் மூலம் TSS ஏற்படும் அபாயம் குறையும்.
ஒரு டேம்போன் போதிய இரத்தத்தை உறிஞ்ச எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது இரத்தப் போக்கு மற்றும் டேம்போனின் உறிஞ்சும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும். டேம்போன் போதிய இரத்தத்தை உறிஞ்சிக்கொள்ள வேண்டுமானால், 3-4 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

டேம்போனை வெளியே எடுக்கும் முறை:

கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவவும்.
கால்களை சற்று அகட்டி வைத்து மூட்டுகளை லேசாக மடக்கி நிற்கவும் அல்லது
ஒரு காலை சற்று உயரத்தில் வைக்கவும்.
ஆழ்ந்து சுவாசித்து உடலைத் தளர்வாக்கிக் கொள்ளவும்.
கைப்பிடி நூலைப் பிடித்து டேம்போனை மெதுவாக வெளியே இழுக்கவும், அது வெளியே வந்துவிடும்.
நீங்கள் புதிதாக டேம்போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், டேம்போனை வெளியே எடுத்ததும் அதனை நன்கு சோதித்துப் பார்க்கவும். டேம்போனின் ஏதேனும் சில பகுதிகள் வெள்ளையாக இருந்தால் அவை அதிகமாக உறிஞ்சிக் கொள்கின்றன என்று அர்த்தம். ஆகவே நீங்கள் அடுத்த முறை சற்று குறைவான உறிஞ்சும் திறன் கொண்ட டேம்போனை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். டேம்போன் இரத்தத்தை உறிஞ்சி, இரத்தம் கசிந்து வெளியேறினால், அடுத்த முறை நீங்கள் இன்னும் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட டேம்போனை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, உங்களுக்கு எந்த டேம்போன் சரியானது என்று எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். சில சமயம், மாதவிடாய் தொடக்கத்தில் (அதிக இரத்தப்போக்கு இருக்கும் நாட்களில்) அதிக உறிஞ்சும் திறன் கொண்ட டேம்போனையும், மாதவிடாயின் நடுப்பகுதியில் (இரத்தப்போக்கு மிதமாக இருக்கும் நாட்களில்) அதைவிட சற்று குறைவான உறிஞ்சும் திறன் கொண்ட டேம்போனையும், மாதவிடாய் முடியும் சமயத்தில் இன்னும் குறைவான திறன் கொண்ட டேம்போனையும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

டேம்போனில் கைப்பிடி நூல் இல்லாவிட்டால் என்ன செய்வது? (What to do if you can’t find the string of a tampon?)

6 முதல் 8 மணி நேரங்களுக்குள் டேம்போனை வெளியே எடுத்துவிட வேண்டியது முக்கியம். அப்படி எடுக்காவிட்டால் நோய்த்தொற்று ஏற்படலாம், துர்நாற்றம் வீசலாம், இன்னும் சிலருக்கு TSS எனப்படும் பிரச்சனையும் கைப்பிடி நூல் வழக்கமாக வெளியே தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் சில சமயம் அப்படி இருக்காது அல்லது அறுந்து விழுந்துவிட்டு இருக்கலாம்.

இது போன்ற சமயங்களில், நீங்களாகவே டேம்போனை எடுக்க முயற்சி செய்யலாம். லேசாக குனிந்தபடி நின்று, கால்களை சற்று அகட்டி வைத்து, கால் மூட்டுகளை சற்று மடக்கியபடி நின்றுகொள்ளவும் அல்லது அது போன்ற உங்களுக்கு வசதியான ஒரு நிலையில் உட்கார்ந்துகொள்ளவும் அல்லது நின்றுகொள்ளவும். இதனால் கீழ் இடுப்புப் பகுதித் தசை இறுக்கம் குறையும். உடலைத் தளர்த்திக்கொண்டு ஆழ்ந்து சுவாசிக்கவும். நீங்கள் இறுக்கமாக அல்லது பதற்றமாக இருந்தால் உங்கள் பிறப்புறுப்பு தசைகள் இறுக்கமாக இருக்கும், டேம்போனை எடுப்பது சிரமமாக இருக்கும்.

பிறப்புறுப்புக்குள் சுட்டுவிரலை நுழைத்து, டேம்போன் அல்லது நூல் தென்படுகிறதா என்று பாருங்கள். டேம்போன் தென்பட்டதும், விரலைக் கொண்டு பிறப்புறுப்பின் சுவர் வழியாகவே அதை இழுத்து வந்து வெளியே கொண்டு வரமுடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கவும். விரலைக் கொண்டு டேம்போனை வெளியே எடுக்க முயற்சி செய்யும்போது, மலம் கழிக்கும்போது முக்குவதைப் போல் முக்கினால் எளிதாக டேம்போன் வெளியில் வந்துவிடும்.

டேம்போனை வெளியில் எடுக்க முடியாவிட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து உதவி பெறவும்.

டேம்போன்களைப் பயன்படுத்துவதால் என் கன்னித்தன்மை போய்விடுமா? (Can I lose my virginity due to the use of Tampons?)

டேம்போன்களைப் பயன்படுத்துவதால் என் கன்னித்தன்மை போய்விடுமோ என்று சில பெண்களுக்கு கவலை இருக்கலாம். இவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்கள் கன்னித்திரை (பிறப்புறுப்பின் திறப்பை சற்று மூடியிருக்கும் மெல்லிய திசு) கிழிந்துவிடுமோ என்றுதான். ஏனெனில் சில கலாச்சாரங்களில் இந்தத் திரை கிழிந்தால் கன்னித்தன்மை போய்விட்டது என்று கருத்து உள்ளதால்தான்.

இதுவரை உடலுறவில் ஈடுபடவில்லை என்பதே கன்னித்தன்மை என்பதன் பொருள். டேம்போனை செருகுவது, உடலுறவுக்கு சமமல்ல. ஆகவே நீங்கள் கன்னித்தன்மையை இழந்ததாக ஆகாது!

டேம்போன்கள் மிக மெலிதான உருளைகளாக வடிவமைக்கப்படுகின்றன, அவை உங்கள் கன்னித்திரையை சேதப்படுத்தாது. இருப்பினும், டேம்போனைப் பயன்படுத்தும்போது கன்னித்திரை கிழியவும் வாய்ப்புள்ளது. ஆனால் டேம்போன் பயன்படுத்துவதால் மட்டுமல்ல, நடனமாடுவது, பைக் சவாரி, குதிரை சவாரி அல்லது ஜிம்னாஸ்டிக் போன்ற செயல்களில் ஈடுபடுவதாலும் கன்னித்திரை கிழியலாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பல பெண்களுக்கு, (அவர்கள் ஒருபோதும் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலும்) கன்னித்திரை நீட்சி அடைவதால் அல்லது கிழிவதால் சேதமடைந்திருக்கும். அதற்காக அவர்கள் கன்னித்தன்மை உடையவர்கள் அல்ல என்று பொருளல்ல. உடலுறவில் ஈடுபட்டால் மட்டுமே கன்னித்தன்மை இழப்பதாகப் பொருள்.

டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் (TSS) என்றால் என்ன? (What is Toxic Shock Syndrome (TSS)?)

டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் (அல்லது TSS) என்பது டேம்போன் பயன்படுத்தும் இளம் பெண்களுக்கு அரிதாக ஏற்படக்கூடிய, உயிருக்கு ஆபத்தான ஒரு நோய்த்தொற்றுப் பிரச்சனையாகும். இது ஏற்படக் காரணம் டேம்போன்கள் அல்ல, ஸ்டெஃபிலோகாக்கஸ் அயூரஸ் எனும் பாக்டீரியாவே காரணம்.

பெண்ணுறுப்புக்குள் டேம்போன் இருக்கும்போது, ஸ்டெஃபிலோகாக்கஸ் அயூரஸ் உட்பட பல்வேறு பாக்டீரியாக்கள் வளர ஏதுவான சூழல் உருவாகலாம். அதிக உறிஞ்சு திறன் கொண்ட டேம்போனைப் பயன்படுத்தினால், அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இப்படிச் செய்வதால் TSS பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறை டேம்போனை மாற்ற வேண்டியது கட்டாயம். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை டேம்போனை மாற்ற வேண்டும் என்பது பற்றி, டேம்போன் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

சிறு வயதுள்ள சில இளம் பெண்களின் உடலில் ஸ்டெஃபிலோகாக்கஸ் அயூரஸ் பாக்டீரியாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்காது. அவர்களுக்கு TSS ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த பாக்டீரியா உடலில் பெருகும்போது அது நச்சுப்பொருள்களை வெளியிடும், இதனால் உடலில் பல எதிர்விளைவுகள் ஏற்படும்.

TSS இன் சில அறிகுறிகள்:

திடீரென்றும் தோன்றும் அதிக காய்ச்சல்
குறை இரத்த அழுத்தம் (லோ BP)
வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு
தோல் தடிப்பு (ராஷஸ்)
தசை வலி
கண்கள், தொண்டை மற்றும் வாய் சிவத்தல்
தலைவலி
குழப்பம்
வலிப்புத் தாக்கங்கள்
TSS பற்றிய அறிகுறிகள் பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். டேம்போன் அணிந்திருக்கும்போது இந்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். இதன் அறிகுறிகள் சில இன்ஃபுளயன்ஸா (ஃப்ளூ) காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றே இருக்கலாம்.

டேம்போன் பயன்படுத்தும்போது, TSS ஏற்படும் அபாயத்தை எப்படிக் குறைப்பது? (How to reduce the risk of TSS with a tampon?)

டேம்போன் பயன்படுத்தும்போது, TSS ஏற்படும் அபாயத்தை எப்படிக் குறைக்க பின்வரும் சில அறிவுரைகளைப் பின்பற்றலாம்:

டேம்போனை உள்ளே செருகும்போது, மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் – டேம்போனை செருகும்போதும் வெளியே எடுக்கும்போதும் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவவும். விரலின் கூரான நகமோ அப்ளிகேட்டரோ பட்டு பெண்ணுறுப்பில் காயம்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
டேம்போனை அவ்வப்போது மாற்ற வேண்டும்: 8 மணி நேரத்திற்கும் மேல் டேம்போனை உள்ளே வைத்திருக்கக்கூடாது. ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை புதிய டேம்போனைப் பயன்படுத்தவும். தேவைப்பட்டால் இன்னும் சீக்கிரமும் மாற்றலாம்.
சரியான உறிஞ்சு திறன் கொண்ட டேம்போனைப் பயன்படுத்தவும்: பொதுவாக சூப்பர் அப்சார்பன்ட் (மிக அதிக உறிஞ்சு திறன் கொண்ட) டேம்போன் பயன்படுத்தும் சமயத்திலேயே TSS பிரச்சனை ஏற்படுகிறது. உங்கள் மாதவிடாய் இரத்தப்போக்கு மிக அதிகமாக இருந்தால் மட்டுமே மிக அதிக உறிஞ்சு திறனுள்ள டேம்போன்களைப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி அடிக்கடி மாறாமல் இருக்கலாம் என்பதற்காகவெல்லாம் அவற்றைப் பயன்படுத்துவது பிரச்சனையாகிவிடலாம். மாதவிடாய் இரத்தப்போக்கு குறைவானதும், சிறிய அளவுள்ள டேம்போன்களைப் பயன்படுத்தவும்.
டேம்போன்களையும் சேனிட்டரி நாப்கீன்களையும் அவ்வப்போது மாற்றி மாற்றிப் பயன்படுத்தவும்: இரவில் தூங்கச் செல்லும்போது டேம்போனை மாற்றுவதற்காக மீண்டும் எழ முடியாமல் போகலாம், ஆகவே இரவில் நாப்கீன்களைப் பயன்படுத்துவது நல்லது.
மாதவிடாய் காலங்களில் மட்டுமே டேம்போன்களைப் பயன்படுத்தவும்: இரத்தப்போக்கு இருக்கும்போது மட்டுமே டேம்போனைச் செருக வேண்டும்.