Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு யோகா

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு யோகா

26

உலகளவில் பெண்களிடையே கண்டறியப்படும் புற்றுநோயில் மார்பகப் புற்றுநோயே பரவலாக உள்ளது. பெரும்பாலும், மார்பகப் புற்றுநோய் பற்றிக் கண்டறியும் நிகழ்வும் சிகிச்சையும் சிகிச்சையின் பக்க விளைவுகளும் சேர்ந்து ஒரு பெண்ணை மிகுந்த மன இறுக்கத்திற்கு ஆட்படுத்திவிடக்கூடும். ஆனால், குடும்பத்தை நடத்த வேண்டும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும், வேலையைத் தொடர வேண்டும் என்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அவர் மீண்டும் மிக அதிகத் தெம்புடன் வாழத் தொடங்க வேண்டியுள்ளது. இதற்காக, பல்வேறு உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சி எடுக்கின்றனர். தற்காலத்தில் யோகாவின் எண்ணற்ற உடல்நலம் சார்ந்த நன்மைகளின் காரணமாக, பல பெண்கள் யோகாவை நாடுகின்றனர். எனினும், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, எப்போது, எங்கு, ஏன் யோகா செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவு அவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை.

இந்தக் கட்டுரையில் உங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும்:
a) எப்போது யோகா செய்யத் தொடங்க வேண்டும்?
புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு உடனே கூட நீங்கள் யோகா செய்யத் தொடங்கலாம். ஒருவேளை சிகிச்சையால் நீங்கள் களைத்திருந்தால் அல்லது பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அறிகுறிகள் தணியும் வரை காத்திருந்து அதன் பிறகு யோகப் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்.
b) யோகப் பயிற்சிகளை எங்கு தொடங்குவது?
யோகா செய்யத் தொடங்கும் முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:
இடம்: நீங்கள் வந்துபோக எளிதாக இருக்கும் வகையில், உங்கள் வீட்டுக்கு அருகிலே யோகா வகுப்புகள் எங்கு உள்ளது என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளவும்.
பயிற்சியாளர்: உங்கள் மருத்துவமனையிலேயே யோகா வகுப்புகள் இருந்தால் அது மிகவும் நல்லது. இல்லை என்றால், நீங்கள் ஒரு நல்ல யோகா வகுப்பைப் பரிந்துரைக்குமாறு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். பயிற்சியாளர், புற்றுநோயாளிகளுக்கு யோகப் பயிற்சி வழங்குவதில் முன் அனுபவம் உள்ளவரா என்றும் கேட்டறிந்துகொள்ளலாம்.

வீட்டில் பயிற்சி: வீட்டுக்கே வந்து யோகா கற்றுத்தரும் பயிற்சியாளர்களும் உள்ளனர், தேவைப்பட்டால் அவர்களைக் கண்டறிந்து விவரம் கேட்டறியவும்.
c) யோகப் பயிற்சி ஏன் அவசியம்?
புற்றுநோயும் அதற்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சையும் ஒருவரின் வாழ்க்கைத் தரத்திலும் வாழ்க்கை முறையிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடும். யோகப் பயிற்சிகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
யோகாவில் பல்வேறு நிலைகள் (ஆரம்ப நிலை, இடைநிலை, முன்னிலை) உள்ளன எனினும், முதலில் நீங்கள் எளிய ஆசனங்கள், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சிகள்) மற்றும் தியானம் போன்றவற்றைச் செய்யலாம். பிறகு படிப்படியாக உடல்நலம் முன்னேறியதும் கடினமான பயிற்சிகளையும் செய்யலாம். ஆனால் அதற்கு முன்பு உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமும் யோகா ஆசிரியரிடமும் ஆலோசிக்க வேண்டும்.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
கீமோதெரப்பி மருந்துகளால் பாதிக்கப்படும் உடலில் இருந்து நச்சுத்தன்மைகளை அகற்ற யோகா உதவுகிறது. பிரபல யோகா நிபுணரான BKS ஐயங்காரின் கூற்றுப்படி, யோகா என்பது உடலை முறுக்கிப் பிழிவதாக இருக்கிறது. வக்ராசனம் (உடலை முறுக்கிய தோரணை), மத்ஸ்யேந்திராசனம் (பாதி உடல் முறுக்கிய தோரணை) போன்ற ஆசனங்களைச் செய்யும்போது அடிவயிற்றுப் பகுதி நன்கு முறுக்கப்பட்டு, உள்ளுறுப்புகள் நன்கு செயல்படத் தூண்டப்படுகின்றன. அத்துடன் அவற்றில் இருக்கும் நச்சுப்பொருள்களையும் நிணநீர் மண்டலத்தில் வெளியிடத் தூண்டப்படுகின்றன.
ஒரு பெண் புற்றுநோயையும் அதற்கான சிகிச்சையையும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான காலகட்டத்தில் அவருக்கு ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் மனக்கலக்கம் போன்றவற்றையும் யோகா குறைக்கிறது.நாடிசுத்தி (மாற்றி மாற்றி இரண்டு நாசிகளில் சுவாசித்தல்), பிராமரி (தேனீ போன்று ஓசை எழுப்புதல்) போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தத்தைக் கொடுக்கும் எண்ணங்களிலிருந்து மனதை விடுவித்து அமைதியைக் கொடுப்பதன் மூலம், மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறனையும் ஊக்கத்தையும் வழங்குகிறது என்று கருதப்படுகிறது.
யோகா புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும், யோகப் பயிற்சிகளால் கிடைக்கும் பல்வேறு பலன்களால், சிகிச்சைக்கு முன்பு எப்படி ஆரோக்கியமாக ஒருவர் இருந்தாரோ, அதே போல் ஆரோக்கியமாக இருப்பது போன்ற உணர்வைப் பெறலாம். அதற்கு யோகா உதவுகிறது. எனவே, தாமதிக்க வேண்டிய அவசியமே இல்லை! இன்றே யோகப் பயிற்சியைத் தொடங்குங்கள்!