Home பெண்கள் பெண்குறி பெண்ணுறுப்பில் வேப்பர் ரப் பயன்படுத்தும் பழக்கம் – நல்லதல்ல

பெண்ணுறுப்பில் வேப்பர் ரப் பயன்படுத்தும் பழக்கம் – நல்லதல்ல

206

பலருக்கு இதைக் கேட்க வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்! ஆனால் சமீப காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பலர் பெண்ணுறுப்பில் வேப்பர் ரப் பயன்படுத்துவது குறித்துப் பேசி வருகின்றனர். சிலர் யோனியை சுத்தமாகவும் ஃபிரஷாகவும் வைத்துக்கொள்ள அது பயன்படுகிறது என்கின்றனர். இன்னும் சிலர் பாலியல் வாழ்க்கையில் கூடுதல் கிளர்ச்சியை அல்லது வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக அதனைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இன்னும் சில பெண்கள் பெண்ணுறுப்பை சுத்தப்படுத்தவும், துர்நாற்றத்தை ஒடுக்கவும் வேப்பர் ரப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

இதனால் பிரச்சனை எதுவும் இல்லையா? சந்தேகமே இல்லை, பிரச்சனை தான்!

பின்விளைவுகள் (The Consequences)

வேப்பர் ரப் என்பது, எளிதில் கடையில் கிடைக்கின்ற பொருள். ஜலதோஷம், லேசான வலிகள் போன்றவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதில் பிரதான உட்பொருள்கள் தைல எண்ணெயும் பச்சைக் கற்பூரமும் ஆகும்.

இணையத்தில் பலர் பதிவு செய்தவற்றின் அடிப்படையில், பெண்கள் பெண்ணுறுப்பில் கூச்ச உணர்வை ஏற்படுத்தி, பாலியல் கிளர்ச்சியை உச்சமடையச் செய்யவும், வழவழப்புக்காகவும் கூட வேப்பர் ரப்பைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. வேப்பர் ரப் என்பது, எண்ணெய் சார்ந்த தயாரிப்பு, நீர் சார்ந்த தயாரிப்பல்ல.

அதாவது, பாலுறவுக்குப் பிறகும் அது பெண்ணுறுப்புக்குள்ளேயே தங்கியிருக்கும். அது அதிகம் உள்ளே நுழைந்து ஆழம் சென்றுவிட்டால் துடைத்துப் போக்குவது முடியாமல் போகும்.

வேப்பர் ரப்பில் கற்பூரம், டர்பெண்டைன், தைல எண்ணெய், செடர் போன்ற எண்ணெய்களும் உள்ளன. இவை எரிச்சலை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றால் நன்மையை விட தீங்குகளே அதிகம். அதற்கும் மேலாக, வேப்பர் ரப் அப்படியே பெண்ணுறுப்பு இதழ்களுக்குள் சென்று தங்கிவிட்டால், விரைவில் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

சுத்தமாகவும் ஃபிரஷாகவும் இருப்பது போன்ற உணர்வை அளிக்கும் அதுவே பல சிக்கல்களையும் உண்டாக்கும். இப்படிப் பெண்ணுறுப்புக்குள் அதனைப் பயன்படுத்துவது பெரிய உடல்நலப் பிரச்சனைகள் கூட உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்? (What Should be Done?)

பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவங்களைக் கொண்டு அது தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும். பெண்ணுறுப்பு இதழ்களை மட்டும் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டும். பெண்ணுறுப்பில் சிறிதளவு துர்நாற்றம் இருக்கும். துர்நாற்றம் மிக அதிகமாக இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

பலருக்கும் பெண்ணுறுப்பில் யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்படுவது சகஜம். இது மிகுந்த அசௌகரியத்தையும், அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தலாம். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலுறவின்போது வெள்ளைப்படுதல், வலி போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். சமீபத்தில், வேப்பர் ரப்பின் ஆறுதலளிக்கும் குணம் பெண்களுக்கு சௌகரியத்தை வழங்குவதாக உணர்கிறார்கள். ஆனால் அது தீர்வல்ல. யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் பூஞ்சை எதிர்ப்பு கிரீம்களைப் பயன்படுத்தி சரியான முறையில் சிகிச்சையளிக்க வேண்டுமே தவிர, வேப்பர் ரப் போட்டு மறைக்கக்கூடாது.

Women using Vicks VaporRub to ‘Tingle and Cleanse’ Their Vaginas

பெண்ணுறுப்பு இதழ்களை, சிறிது நீர் ஊற்றி வெளியே கழுவினால் போதும். சுத்தமாகிவிடும். பெண்ணுறுப்பு இதழ்கள், தங்களைப் பாதுகாப்பதற்காக சில வகை எண்ணெய்களை சுரக்கின்றன. க்ளென்சர்களைப் பயன்படுத்தினால் அந்த எண்ணெய்ப்பசை போய்விடும், இதனால் எரிச்சல் அல்லது நோய்த்தொற்றுகள் ஏதேனும் ஏற்படக்கூடும். பெண்ணுறுப்பில் pH சமநிலையைப் பராமரிக்க உதவும் நல்ல பாக்டீரியாக்களையும் அவை நீக்கிவிடலாம்.

ஆண்களில் சிலர் பாலியல் கிளர்ச்சியை அதிகப்படுத்தவும், இன்பத்தை அதிகரிக்கவும், ஆணுறுப்பில் சிறிது வேப்பர் ரப்பைத் தேய்த்துக்கொள்கின்றனர். இதுவும் நல்லதல்ல. விந்து விரைவில் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்களுக்கு, விந்து வெளியேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்காக விற்பனைக்குக் கிடைக்கும் ‘டிலே ஸ்ப்ரே’ அல்லது ‘டிலே கிரீம்’ போன்றவற்றுக்கு பதில் வேப்பர் ரப்பைப் பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அது தவறு. ஆணுறுப்பில் இருக்கும் வேப்பர் ரப் பெண்ணுறுப்பை அடையும் ஆபத்து உள்ளது, அதுமட்டுமின்றி, ஆணுறுப்பின் தோல் மிகவும் மென்மையானது, வேப்பர் ரப் ஆணுறுப்பில் மிகுந்த எரிச்சலை உண்டாக்கலாம்.

இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள (Handy tips for better genital hygiene)

வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும். நீரை பீய்ச்சியடிப்பது, ஷவர் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்கவும். நீரை பலமாக ஊற்றுவதைத் தவிர்க்கவும்.
துடைப்பதற்கு, நறுமணமற்ற மென்மையான டிஷுவைப் பயன்படுத்தவும்.
காட்டன் உள்ளாடைகளை அணியவும். சிந்தட்டிக் உள்ளாடைகள் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் வெளியே செல்லாமல் அடைத்து வைக்கும் என்பதால், அவற்றைத் தவிர்க்கவும். பேண்டிஹோஸ் பெரும்பாலும் நைலானால் ஆனவை, ஆகவே அவற்றையும் தவிர்க்கவும். லேஸ், ரப்பர் அல்லது எலாஸ்டிக் கொண்டுள்ள பட்டைகள், உள்ளாடைகளைத் தவிர்க்கவும்.
உள்ளாடைகளை, மிதமான சோப்புகள் கொண்டு துவைக்கவும், இரண்டு முறை அலசவும்.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு, ஸ்ப்ரே, டியோடரண்ட், பாத் ஆயில், டால்கம் பவுடர் அல்லது பிற பவுடர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பெண்ணுறுப்புப் பகுதியில் வேக்ஸிங் செய்தால் அல்லது ஷேவிங் செய்தால், வெட்டுக் காயங்களால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம், ஆகவே கவனமாக இருக்க வேண்டும். நறுமணமற்ற இயற்கையான ஷேவிங் கிரீம்/லோஷன்களைப் பயன்படுத்தவும். கத்தரியால் நறுக்குவதே சிறந்தது.
பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த தயாரிப்புகளைத் தவிர்க்கவும்.
வேப்பர் ரப் கூடவே கூடாது!
இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.