Home குழந்தை நலம் குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

25

கொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்று பொதுப்புத்தியிலேயே விதைக்கப்பட்டு விட்டது. இன்றும் ‘என் குழந்தைக்கு நான் நிறைய சாப்பிடக் கொடுக்கிறேன். ஆனாலும், மெலிந்து இருக்கிறான்/இருக்கிறாள்’ என்று ஒருபுறம் புலம்புகிறார்கள். மறுபுறம், எது நல்ல உணவு என்று புரியாமல், `எல்லாத்தையும் சாப்பிட்டா தான் குழந்தை கொழுகொழுனு நோய் எதிர்ப்புச்சக்தியோட வளர்வாங்க’ என்று பானிபூரியும் பர்கரும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

“காலங்காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டவைதான் என்றாலும், அவை சரியா என்பதை தெரிந்துகொள்ளாமல் அப்படியே பின்தொடர்கிறோம். கீரை நல்லது. அதற்காக, மூன்று வேளைகளும் குழந்தைகளுக்குக் கீரையே கொடுத்தால், செரிமானக் கோளாறுதானே ஏற்படும்? அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதும் உணவுப்பழக்கம்தான்!

இது புரியா விட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்னைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும். குழந்தைகளின் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வாழவும், மனம், மூளை மற்றும் உடல் ஆகியவற்றை சீராக வைத்திருக்கக்கூடிய `ஹோலிஸ்டிக் ஹீலிங்’ என்கிற முழுமையான ஆரோக்கிய முறை தேவை’’.

“பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய். வெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகள் இடையே பருமன் பிரச்னை அவ்வளவாக இல்லை. உண்மையில், பீட்சா, பர்கர், சாட் மற்றும் கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திக்கரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், `என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன்’ என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.

பழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும்கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள்களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது.

குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலுக்கு உள்ளது. ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலமே நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்ததால்கூட பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களையே ஊக்குவியுங்கள்!