Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுங்கள்

குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுங்கள்

22

குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளைகிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் பெருமைக்காக அவர்களின் ஆரோக் கியத்தைச் சிதைக்கிறீர்கள் என்பதே உண்மை.

‘சத்தான உணவாகக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்’ என்றால், ‘சத்தான உணவு என்றால் என்ன?’ என்கிறார்கள் பெற்றோர்கள் சிலர். வீட்டில், சுகாதாரமான முறையில் நாம் தயாரிக்கும் இட்லி, தோசை, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சட்னி… சாம்பார், காய் பொரியல், கீரை, கூட்டு, ரசம் என சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத நம் அன்றாட சமையலே ஆரோக்கியமான உணவுதான்.

ஆப்பிள், ஆரஞ்சைவிட, கொய்யா, சப்போட்டா, மா, வாழை என நம் மண்ணின் தோட்டத்தில் விளையும் பழங்கள் தரவல்ல சத்துகள் நிறைய! சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு பெருகியுள்ள நிலையில், ஏற்கெனவே சில அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றை விரும்பும் சுவையில் சமைத்துத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். மோர், பானகம், பழ ஜுஸ் செய்து தந்தால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அது எந்தளவுக்கு பலம் சேர்க்கும் தெரியுமா?!

சில குழந்தைகள் எந்த உணவின் மீதும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தோசையை பொம்மை வடிவில் ஊற்றிக் கொடுப்பது, ஆங்கில எழுத்துக்களின் வடிவில் ஊற்றிக் கொடுப்பது, மினி இட்லிகள் செய்து கொடுப்பது, சாதத்தில் கேரட் பொரியலை ஸ்மைலை வடிவில் பரப்பி சாப்பிடச் சொல்வது, அரைக்கீரையை மாவுடன் கலந்து ‘க்ரீன் தோசை’யாக ஊற்றிக் கொடுப்பது என, குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில், நிறத்தில் உணவு வகைகளைச் செய்து கொடுத்து, அதன் ஆர்வத்தை தூண்டி, சாப்பிட வையுங்கள்.