Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் கைகள், பாதங்களில் வீக்கம் ஏற்படுவது சிசுவை பாதிக்குமா..?

கர்ப்ப காலத்தில் கைகள், பாதங்களில் வீக்கம் ஏற்படுவது சிசுவை பாதிக்குமா..?

28

பெண் ஒருவர் கருவுற்றவுடன் அதனுடன் சேர்ந்து வரும் பல்வேறு புதிய நிலைமைகளுக்கும் முகங்கொடுத்துத் தான் ஆக வேண்டும். குமட்டல், அடிக்கடி மாறும் மனநிலை, ஹோர்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றன கர்ப்பிணிப் பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்களாகும்.

இது இவ்வாறிருக்க, கைகள் மற்றும் பாதங்களும் வீங்குவதால் அவர்கள் மேலும் அசௌகரியத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தால் அவர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு பாதணிகளையும் அணிய முடியாது போகும் நிலை ஏற்படும்.

இந்த வீக்கம் ஏற்படுவது ஏன்?

நீரைத் தேக்கி வைத்தல் –
கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உடலானது நீரைத் தேக்கி வைக்க எத்தணிக்கும். ஏனெனில் உடலில் உள்ள செல்கள் நீரைச் சேமித்து வைத்து பிரசவத்தை இலகுவாக்கும் முயற்சியில் ஈடுபடும். இதனால் சில சமயங்களில் மூட்டுக்களிலும் வீக்கம் ஏற்படும்.

கருப்பையினால் ஏற்படும் அழுத்தம் –
கருப்பையில் உள்ள குழந்தை வளரும் போது, அதற்கேற்றவாறு கருப்பையும் விரிந்து கொடுப்பதனால், அழுத்தம் ஏற்படுகின்றது. அத்துடன், ஒட்சிசன் அற்ற இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் நரம்பின் மீது இந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுவதோடு ஏனைய பகுதிகளில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் ஏனைய நரம்புகள் மீதும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. இதனால் வீக்கம் ஏற்படுகின்றது.

ஈர்ப்பு –
ஈர்ப்பானது உடலுக்கு தேவையான இரத்தத்தை கொண்டு செல்லும் இதயத்தை, மேன்மேலும் சோர்வடையச் செய்கின்றது. இதனால் மூட்டுக்களில் இரத்தம் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகின்றது. இதுவே வீக்கம் ஏற்பட காரணமாகின்றது.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமத்தல் –
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமக்கும் தாய் ஒருவருக்கு அம்னோட்டிக் திரவம் என அழைக்கப்படும் பனிக்குடநீர் அதிகளவாக தேவைப்படுகின்றது. அதனால் தாயின் உடல் அதிகளவான நீரை சேமிக்க முற்படுகின்றது. இதுவே வீக்கம் ஏற்படக் காரணமாகின்றது.

காலநிலை –
பொதுவாக கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுவதற்கு காலநிலை மாற்றமும் காரணமாக அமைகின்றது. குளிரான காலநிலையை விட சூடான காலநிலையினால் கை கால்களில் வீக்கம் ஏற்படுவது அதிகமாகின்றது.

ஓய்வின்மை –
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் போதிய ஓய்வின்மையால் தவிக்கின்றார்கள். இதுவும் வீக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. வேலைக்கு செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் சிலர் நெடு நேரம் நிற்க வேண்டி ஏற்படுகின்றது. அதனால் குழந்தையைத் தாங்கியுள்ள உடல் சோர்வுறுகிறது. போதிய ஓய்வைப் பெறும் தாய்மார்களில் இந்த வீக்கம் ஏற்படுவது சற்று குறைவாகவே உள்ளது.