Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தோல் விரிவடைவதன் தழும்புகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு தோல் விரிவடைவதன் தழும்புகள்

26

தோல் விரிவடைவதன் தழும்புகள் (What are stretch marks?)

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. நீங்கள் எப்போது என்ன செய்வீர்கள் என்ற நேரத்திட்டமும், தினசரி செய்யும் செயல்களும் மாறிவிடும், உடலிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் முக்கியமானவை தோல் விரிவடைந்து ஏற்படும் தழும்புகளாகும். இது சிக்கலான பிரச்சனை போலத் தோன்றலாம், உங்களுக்கு சற்று பயத்தையும் கொடுக்கலாம். ஆனால் எளிதாக இதனைச் சமாளிக்க முடியும்.

கருவில் இருக்கும் குழந்தை வளர வளர, வயிறு விரிவடையும்போது அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் தோல் அதற்கு ஏற்ப விரிவடைவதால் ஏற்படும் இயற்கையான விளைவே இந்தத் தழும்புகளாகும். முதலில் சிவப்புக் கோடுகள் போன்று உருவாகும் இவை பிறகு சில நாட்களில் வெண்ணிறமாக மாறலாம்.

கர்ப்பத்தின்போது உங்கள் தோலைவிட வயிறு வேகமாக வளர்வதால் இப்படி ஆகிறது. குறிப்பாக ஆறாவது மற்றும் ஏழாவது மாதத்தின்போது இவை அதிகமாக உண்டாகின்றன. உடலின் மொத்த எடையும் அதிகரித்து அதை வயிறு தாங்க வேண்டும், அந்த சுமையை உங்கள் அடிவயிற்றுத் தோலால் சமாளிக்க முடியாமல் போகும். தோலின் மீள்தன்மை இழக்கப்பட்டுவிடுகிறது. இதனால் தழும்புகள் தோன்றுகின்றன.

ஒரு கருத்து கணிப்பின்படி கர்ப்பத்தின்போது 75-90% பெண்களுக்கு இந்தத் தழும்புகள் ஏற்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

கர்ப்பத்தின்போது வயிற்றில் ஏற்படும் தோல் தழும்புகளைச் சமாளிக்க சில குறிப்புகள் (Tips to cope up with pregnancy stretch marks)

நீங்கள் கர்ப்பத்தின் தொடக்ககாலத்தில் இருப்பவர் எனில், தோலில் இந்தத் தழும்புகள் தெரிவதைக் குறைக்கலாம். உடலில் தேவையற்ற தழும்புகளைக் குறைக்க கீழே சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

வாழ்க்கை முறையை மாற்றுங்கள் (Change the way you have been living):

தோலுக்கு ஊட்டமளிக்கும் உணவுத்திட்டம்: இந்த சமயத்தில் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்துகளும் எல்லா வைட்டமின்களும் கிடைக்கும்படியான சரிவிகித உணவு உண்பீர்கள். தோலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளையும் சேர்த்துக்கொள்வது தோலின் மீள்தன்மையை அதிகரிக்க உதவும்.பச்சைக் காய்கறிகள், பழங்கள், வெண்ணெய்ப் பழம், ப்ராக்கோலி, கால்லர்ட் கிரீன்ஸ் கீரைகள், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மீன், மீன் எண்ணெய், பாதாம் பருப்பு, முட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டால் வைட்டமின் E மற்றும் A ஆகியவை கிடைக்கும். அத்துடன் ஒமேகா 3 அமிலங்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பொருள்களும் கிடைக்கும். இவை உங்கள் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
உடலில் நீர்ச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்: உங்கள் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீர் உதவுகிறது. தோல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் செயலிலும் உதவுகிறது. தினமும் எட்டு டம்ளர் நீர் அருந்த முயற்சிக்கவும், அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதும் தோலில் நீர்ச்சத்து நிரம்பியிருக்க உதவும்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் தோலின் மீள்தன்மையை மீட்டுப் பெறவும் உதவும்.உடலின் எடையை சரியாகப் பராமரிக்கவும் இது உதவும்.
சருமப் பராமரிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் (Start a skin care regimen)

ட்ரை ப்ரஷிங்: தோலில் தழும்புகள் உருவாகிவிட்டிருந்தால் அவை தெரிவதைக் குறைப்பதற்கு ட்ரை ப்ரஷிங் செய்யலாம். இயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான பிரஷ்களைப் பயன்படுத்தவும். தழும்புகள் அதிகம் தெரியும் இடங்களில் நன்கு பிரஷ் செய்யவும். மார்பகங்களில் இதைச் செய்யக்கூடாது.
கடினமான வேதிப்பொருள்களைத் தவிர்க்கவும்: இயற்கை எண்ணெய்களால் தயாரிக்கப்பட்ட க்ளென்சர்களைப் பயன்படுத்தவும். அவை தோலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும். சல்பேட் கொண்டிருக்கும் வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவை சருமத்தை வறட்சியடையச் செய்யும்.தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். அவை எளிதில் கிடைக்கக்கூடியவையும் ஆகும்.
சருமத்திற்கு ஈரப்பதமூட்டுங்கள்: சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.வழக்கமாகப் பயன்படுத்தும் மாய்ஸ்டுரைஸர்கள் சருமத்தை ஆழமாக ஊடுருவிச் செல்லாவிட்டால், அவற்றால் அதிக பலனில்லை. கர்ப்பமான பெண்களுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டவற்றைப் பயன்படுத்தவும். இயற்கையான எண்ணெய் வகைகள், கோக்கோ பட்டர் போன்றவையும் உதவக்கூடும். நாளொன்றுக்கு மூன்று முறை சருமத்திற்கு ஈரப்பதமூட்ட முயற்சிக்கவும். காலை ஒரு முறை, குளித்த பிறகு மற்றும் இரவு ஒரு முறை மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்தலாம்.

குழந்தை பிறந்த பிறகும் தினசரி வழக்கமான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் (Maintain a good routine after giving birth):

தோலுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும்: குழந்தை பிறந்த பிறகு தோல் விரிவடைந்த நிலையில் இருந்து தன்னைத் தானே மீட்டமைத்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான ஊட்டத்துகள் உங்கள் உணவில் இருக்க வேண்டியது அவசியம். தோலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்க வேண்டியது முக்கியமாகும். ஆகவே பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை மற்றும் மீன் ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளவும்.
உடற்பயிற்சி: குழந்தை பிறப்புக்குப் பிறகு, நிபுணரின் மேற்பார்வையின்கீழ் படிப்படியாக உங்கள் உடற்பயிற்சிகளைத் தொடங்கலாம். இவை உங்கள் தழும்புகளைக் குறைக்க உதவும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவையும் தழும்புகளைக் குறைக்க உதவக்கூடும். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

விற்பனைக்குக் கிடைக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு பெரிதாக ஆர்வமில்லை என்றால், கற்றாழை, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச் சாறு, கோக்கோ பட்டர், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைப் பயன்படுத்தவும். இவை இயற்கையான முறையில் தோலின் தழும்புகளைக் குறைக்க உதவும்.

இந்தத் தழும்புகள் நீங்கள் குழந்தை பெற்றவர் என்பதைக் காட்டும் அடையாளங்களாகும். இந்த வழிமுறைகளையும் குறிப்புகளையும் பின்பற்றினால், நிச்சயம் பெரிதாகக் கவனிக்கப்படாத அளவுக்கு அவற்றைக் குறைக்கலாம். அப்போதும் அவற்றைக் குறித்து நீங்கள் கவலைப்பட்டால் மருத்துவரிடம் செல்லவும்.