Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பக்காலத்தில் முதுகுவலியை சமாளிப்பது எப்படி..?

கர்ப்பக்காலத்தில் முதுகுவலியை சமாளிப்பது எப்படி..?

34

எனக்குத் தொடர்ந்து முதுகு வலிக்கிறது. முதுகு வலியை எப்படிப் போக்கலாம்? இப்பிரச்னை பிரசவமான பிறகும் தொடரும் என்கிறார்கள். இதைப் போக்குவதற்கு என்ன செய்வது?

கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகு வலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பக் காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாக உள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.

நீங்கள் உடற்பருமன் அடைவதால் உங்கள் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. இந்த நிலைகளைக் கர்ப்பக் காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.

தவிர்ப்பு முறைகள்

சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் முதுகு வலிகளையும்கூட தவிர்க்கிறார்கள்.

பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியாக நிற்கும் தோரணையாகும்.

முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள்.

தரையில் இருந்து பொருள்களைத் துாக்கும்போது அல்லது எடுக்கும் போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.. முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி உட்கார்ந்து பிறகு அந்தப் பொருளைத் துாக்க வேண்டும்.

பளுவான பொருள்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத் துாக்குங்கள்.

முடிந்தவரை, கூன் போடுவதுபோல் வளைவதைத் தவிருங்கள்.

முதுகு வலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காரமல் அவ்வப்போது நடத்தல் போன்றவற்றை ஆறு மாதம் வரையில் பின்பற்றுங்கள்.

முதுகு வலி தொடர்ந்து நீடித்தால், இதைப்பற்றி மருத்துவரிடம் கூறுங்கள். பிஸியோதெரபி நிபுணர்கூட உங்களுக்குத் தேவையான ஆலோசனையையும், சில உபயோகமான பயிற்சிகளையும் கூறுவார்.