Home உறவு-காதல் கணவரை மற்ற ஆண்களுடன் கம்பேர் பண்ணாதீங்க

கணவரை மற்ற ஆண்களுடன் கம்பேர் பண்ணாதீங்க

31

அண்டை வீட்டுக்காரியின் கணவர் அவருடைய மனைவிக்கு என்னென்ன வாங்கித் தருகிறார். பட்டும், நகையும் மனைவிக்கு வாங்கிபோட்டு அலங்கரிக்கிறார் தனக்கும் அதுபோல் வாங்கித்தரவேண்டும் என்று கணவரை தொந்தரவு செய்யும் மனைவிகள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கின்றனர். இது மட்டுமல்லாது பிற ஆண்களுடைய செயல்பாடுகள், புத்திசாலித்தனம், அழகு போன்றவற்றோடு கணவரை ஒப்பிட்டும் சண்டைக்கு இழுக்கும் மனைவிகள் இருக்கின்றனர். இந்த ஒப்பிடல்தான் ஆண்களுக்கு அதிக மனஅழுத்தத்தையும், மனைவி மீது வெறுப்பையும் வரவழைக்கிறதாம்.

பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது பிடிக்காது. அதிலும் மனைவி கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அப்போது அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. இதனால் தம்பதியரிடையே சண்டை அதிகமாகி வீடே இரண்டாகிவிடும்.

வீட்ல சின்னதா சண்டை ஆரம்பித்தாலே போதும். உங்க அப்பா மாதிரியே இருக்கீங்க… என்று மனைவிகள் சொல்லத் தொடங்கிவிடுவர். ஆனால் இதுதான் ஆண்களுக்கு பிடிக்காத வார்த்தையாம். எந்த ஆணுக்கும் அவர்களது அப்பா மிகவும் முக்கியமான ஒருவர் தான், ஆனால் அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் சுத்தமாக பிடிக்காது.

சண்டையின் போது மனைவி பேசும் சில வார்த்தைகள் கணவருக்கு பிடிக்காமல் போகும். எரிச்சலை அதிகமாக்கி சண்டையை தீவிரமாக்கிவிடும். எனவே எரிச்சல் ஏற்படுத்தும் வார்த்தைகளை திரும்ப திரும்ப உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் அத்தகைய பேச்சு ஒரு நல்ல உறவுகளுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

எந்த கணவனுக்கும் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பிடிக்காது. ஏனெனில் கணவன்மார்கள் அனைவரும், தன் மனைவிக்கு தானே ஒரு நண்பன் மற்றும் அனைத்தும் என்றும் மனதில் நினைத்திருப்பார்கள். என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், தன் மனைவியை யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். எனவே எந்த சூழ்நிலையிலும் கணவரை நண்பர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

திருமணத்திற்கு முன்பு காதலித்து சில காரணங்களினால் அந்த காதல் கைகூடாமல் போயிருக்கும். அந்த காதலைப் பற்றி தெரிந்திருந்தும் அதை திருமணம் செய்து கொண்ட உங்கள் கணவர் நல்லவர்தான். அதற்காக சின்னதாக சண்டை வரும் போது முன்னாள் காதலருடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசிவிட வேண்டாம். ஏனெனில் எந்த இடத்தில் பாசம் இருக்கிறதோ, அதே இடத்தில் பொறாமையும், கோபமும் இருக்கும். ஆகவே எப்போதும் இவர்களுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

உங்கள் சகோதரியின் கணவரோ, அல்லது தோழியின் கணவரோ அவர்களின் மனைவிக்கு வாங்கித்தரும் பரிசுடன் உங்கள் கணவர் உங்களுக்கு தரும் பரிசுப் பொருளை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். இது நிச்சயம் ஆண்களுக்கு கோபத்தை வரவழைக்கும். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் பிற ஆண்களுடன் உங்கள் கணவரை ஒப்பிடவேண்டாம். கணவரின் குணத்தை புரிந்து கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தால் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படாது என்கின்றனர் அனுபவசாலிகள்.